“மருந்து தயாரிப்புத் துறையானது அரசு வசம்தான் இருக்க வேண்டும். ஒருபோதும் தனியார்வசம் சென்றுவிடக் கூடாது என்று நான் உறுதிபட நினைக்கிறேன்.’’
- ஜவாஹர்லால் நேரு.
ஐடிபிஎல் எனப்படும் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் நிறுவனத் திறப்பு விழா மலரின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்தான் நீங்கள் மேலே படித்தது. நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அரசு வசம்தான் இருக்க வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தோடு தொடங்கப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இன்று விற்பனைக்கு வந்துள்ளன.
உலக அளவில் மருந்து தயாரிப்பில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இத்துறையின் ஆண்டு வருமானம் 4,500 கோடி டாலராக உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல்க் டிரக்ஸ் எனப்படும் மூலக்கூறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் 250 மட்டுமே. இவைதான் மொத்த சந்தையில் 70 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளன. இவற்றில் 5 மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களாகும்.
1970 களின் தொடக்கத்தில் இந்திய மருந்து சந்தையில் 70 சதவீத சந்தையை வெளிநாட்டு நிறுவனங்கள் பிடித்திருந்தன. இது தற்போது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததில் அரசு நிறுவனங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது.
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் கூடிய அமைச்சரவைக் குழு மொத்தம் உள்ள 5 அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களை மூடிவிட ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் தப்பியது கர்நாடக ஆன்டிபயாடிக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் மட்டுமே. மூடி விடுவது என முடிவுசெய்யப்பட்ட இரண்டு நிறுவனங் களில் ஒன்று ஐடிபிஎல், மற்றொன்று ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனமாகும். ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனங்கள் மட்டும் உரிய முதலீட்டாளரை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
ஐடிபிஎல்
1961-ம் ஆண்டு உயிர் காக்கும் மருந்துப் பொருள் தயாரிப்பில் இந்தியா சுய சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (ஐடிபிஎல்) நிறுவனம். சோவியத் யூனியனின் ஒத்துழைப்போடு இந்நிறுவனத்தின் முதலாவது ஆலை ஹைதராபாதில் உருவாக்கப்பட்டது. 1979-ம் ஆண்டு இந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதற்குப் பிறகு இறங்குமுகம்தான். 2013-14-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நஷ்டம் ரூ.171 கோடியாகும். விற்பனை வருமானம் ரூ. 60 கோடியாகும். இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம், தொழுநோய் ஒழிப்பு, காச நோய் ஒழிப்பில் ஐடிபிஎல்-லின் பங்கு அளப்பரியது.
ஆர்டிபிஎல்
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்வதில் ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்துக்கு முக்கிய பங்குண்டு. 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் 2013-14-ம் நிதி ஆண்டில் சந்தித்த நஷ்டம் ரூ. 19 கோடி. மொத்த வருமானம் ரூ. 43 கோடியாகும்.
பிசிபிஎல்
இந்திய வேதியியலின் தந்தை என போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய் என்பவரால் 1901-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனம் 1980-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சில `ஸ்வாச் பாரத்’ திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிறுவனம் பல ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரித்தாலும், இன்றளவும் வீடுகளில் பிரபலமாகத் திகழும் காந்தர்டைன் கூந்தல் தைலம் இந்நிறுவன புகழ் பாடும். அதேபோல வயிற்றுவலி காரர்களுக்கு என்றென்றும் நிவாரணியாகத் திகழ்ந்த அக்வா டைகோடிஸ் மருந்துக்கு நிகர் வேறெதுவுமில்லை. இயற்கை பொருள்களான ஓமம் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட இந்த வயிற்றுவலி நிவாரணி அனைத்து வீடுகளிலும் எல்லா காலகட்டத்திலும் இருப்பில் இருக்கும் மருந்தாகத் திகழ்ந்தது.
சமீபகாலமாக பெங்கால் கெமிக்கல்ஸ் நிறுவனம் சரிவிலிருந்து மீண்டு வந்துள்ளது. 2015-16-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத் தயாரிப்பு விற்பனை 5 மடங்கு அதிகரித்து ரூ. 88 கோடியைத் தொட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை லாபம் ஈட்டும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரய்யா தெரிவித்துள்ளார்.
மிகச் சிறந்த நிதி நிர்வாகம் காரணமாக விரைவிலேயே லாபப் பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கைக் கீற்று உருவாகியுள்ளது. நிதி வசதி கொண்ட நிறுவனம் இதை ஏற்று நடத்த முன்வந்தால் நிச்சயம் லாபம் ஈட்டும் என உறுதிபடக் கூறுகிறார் சந்திரய்யா.
ஹெச்ஏஎல்
ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஹெச்ஓ) மற்றும் சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் கல்வி நிதியம் ஆகியவற் றின் ஒத்துழைப்போடு 1954-ம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. இந்நிறுவனத்துக்கு ரிஷிகேஷ் மற்றும் ஹைதராபாதில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனத் தின் துணை நிறுவனங்களுக்கு இரண்டு ஆலைகள் சென்னை மற்றும் முஸாபர்பூரில் உள்ளன.
இந்நிறுவனம்தான் முதன் முதலில் இந்தியாவில் நோய் எதிர்ப்பு மருந்துகளை ஆன்டிபயாடிக்ஸ் தயாரிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்தது. புணேயை ஆடுத்துள்ள பிம்பிரியில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில்தான் பென்சிலின் தயாரிக்கப்பட்டது.
2014 மற்றும் 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மொத்த வர்த்தகம் ரூ. 14 கோடி. நஷ்டம் ரூ. 75 கோடியாக உயர்ந்தது. இந்நிறுவனத்தை சீரமைக்கும் பணிகள் தோல்வியடைந்தன. இப்போது இரண்டாம் கட்ட சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஏன் இந்த நிலை?
மருத்துவத்துக்கு ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் மிகக் குறைவான ஒதுக்கீட்டைச் செய்யும் நாடு இந்தியா. மேலும் இவை ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை வெற்றிகரமாக செயல்படுத்த உரிய கொள்கையை அரசு வகுக்கவில்லை. நவீன காலத்துக்கேற்ற ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பணிகளை இவை மேற்கொள்ளவில்லை.
பொதுத்துறை நிறுவனத் தலைவர்கள் எந்த ஒரு முடிவுக்கும் அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாத நிலை. மருந்து தயாரிப்புக்கு காப்புரிமை அவசியம். அல்லது காப்புரிமை தேவைப்படாத மருந்துகளைக் கண்டறிந்து அவற்றை தயாரிக்கலாம். இவை இரண்டுக்கும் அரசின் அனுமதியை எதிர்பார்த்தே காத்திருக்க வேண்டிய அவலம்.
இந்நிறுவனத் தலைவர்களால் முடிவுகள் எடுக்க முடியாதது முக்கியக் காரணம். அனைத்துக்கும் மேலாக நிறுவனத்தை நவீனமயமாக்குவதற்குத் தேவையான முதலீட்டை அரசு செய்யவில்லை. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை கோமா நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன. ஐடிபிஎல் நிறுவனத்துக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
இதேபோல பிற பொதுத்துறை நிறுவனங் களுக்குச் சொந்தமான நிலங்களை விற்று அதன் மூலம் இவற்றை மறு சீரமைப்பு செய்யலாம் என்ற கருத்தும் உள்ளது. மருந்துப் பொருள்கள் தயாரிப் பில் மூலப் பொருள் மிகவும் முக்கியமாகும். பல்க் டிரக்ஸ் எனப்படும் இத்தகைய மூலப் பொருள்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மருந்துக்கான மூலப் பொருளை தயாரித்து, இறக்குமதியை மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக நிறுத்திவிட 2015-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்றளவிலும் மூல மருந்துப் பொருள்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதியாகின்றன.
பிரதம மந்திரி ஜன் ஔஷதி திட்டம்
ஏழை எளியவர்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்தான் இது. மிகக் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் விற்பனையகம்தான் ஜன் ஔஷதி. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மருந்து குறைந்த விலையில் கிடைப்பதற்காக இத்தகைய மருந்தகங்களை தொடங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 3 ஆயிரம் மருந்து விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள தாக நிதி அமைச்சர் ஜேட்லி அறிவித்தார். ஆனால் இவை இன்னும் முழுமையாக செயல்படவில்லை.
பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு பிறகு கட்டுபடியாகும் விலையில் மருந்துகளை ஜன் ஔஷதி மருந்து விற்பனையகங்களுக்கு எவ்விதம் தர முடியும்? மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து எப்படிக் கிடைக்கும்?
மருந்து விற்பனையகம் வைத்திருப்பவர்கூட லாபம் ஈட்டும்போது மருந்து தயாரிக்கும் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் உழல வேண்டியதன் காரணம் என்ன? மருந்து தயாரிப்பு நிறுவனங் களையே நோய் தாக்கினால் அதற்கு யார் மருந்து தருவது?
- ramesh.m@thehindutamil.co.in