வணிக வீதி

கார்களுக்கு டிரை வாஷ்!

செய்திப்பிரிவு

லாண்டரி சென்று புதிய துணி அதிலும் சாயம் போகலாம் என்று கருதும் துணிகளை டிரை வாஷ் கொடுப்பது வழக்கம். தலைப்பைப் பார்த்தவுடன் தினசரி ஆபிசுக்குப் போகும்போது துணியால் காரைத் துடைப்போமே அதுதான் டிரை வாஷ் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு முறை உங்கள் காரை தண்ணீரால் கழுவ குறைந்தது 120 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்ற தகவல் எத்தனை பேருக்குத் தெரியும். சர்வீசுஸுக்கு விட்டுவிட்டு வந்த பிறகு, எவ்வளவு பில் தொகை வருகிறதோ அதை பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமோ செலுத்திவிட்டு காரை எடுத்து வருவதுதான் நம்மில் பலரது பழக்கம்.

அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, கார்களுக்கு `டிரை வாஷ்’ - தண்ணீர் இன்றி சுத்தம் செய்யும் முறையை மாருதி சுஸுகி நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு உள்ள 488 விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களில் இத்தகைய `டிரை வாஷ்’ முறை பின்பற்றப்படுகிறது. எளிதில் கரையக் கூடிய ரசாயனக் கலவை மூலம் கார் சுத்தம் செய்யப்படுகிறது.

மாருதி நிறுவனத்துக்கு நாடு முழுவதும் மொத்தம் 3,086 சேவை மையங்கள் உள்ளன. 1,478 நகரங்களில் உள்ள இவற்றில் 488 மையங்கள் டிரை வாஷ் முறை மூலம் காரை சுத்தம் செய்கின்றன. மேலும் 414 மையங்கள் இயந்திரங்கள் மூலம் டிரை வாஷ் செய்கின்றன. இதனால் ஆண்டுக்கு 500 கோடி லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்துகிறது மாருதி நிறுவனம்.

சுற்றுச் சூழல் காப்பு நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டமாக மாருதி சுஸுகி நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை பாதிக்காத சிஎன்ஜி இன்ஜின் பொறுத்தப்பட்ட கார் விற்பனையை ஊக்குவிக்கிறது மாருதி.

ஆலை மற்றும் உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களிலும் பசுமை சூழ் நிலையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறுகிறார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு பிரிவின் பொதுமேலாளர் ரஞ்ஜித் சிங்.

இதேபோல காரின் எடையைக் குறைத்து அதிக மைலேஜ் தருவதற்கான நடவடிக்கையையும் மாருதி எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆல்டோ கே 10 காரில் இதுபோன்ற எடை குறைப்பு நடவடிக்கையால் 10 கிலோவும், ஸ்விப்ட் காரின் எடை 40 கிலோ வரை குறைந்துள்ளது. இதனால் இவற்றின் மைலேஜ் திறன் லிட்டருக்கு 3 கி.மீ. அதிகரித்துள்ளது.

மாருதியின் சூழல் பாதுகாப்புக்கு உதவ நினைத்தால் நீங்களும் இனி டிரை வாஷ் மையத்தை தேடிச் செல்லலாம்.!

SCROLL FOR NEXT