வணிக வீதி

தொழில் வளையங்கள்

செய்திப்பிரிவு

நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டுமெனில் தொழில்துறை வளர்ச்சி முக்கியம். அதிலும் குறிப்பாக உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சி நாட்டின் நிலையான பொருளாதாரத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் அதுசார்ந்து மக்கள் வளர்ச்சியையும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் தொழில்வளையங்கள் (Industrial Corridor) அமைக்கப்படுகின்றன. ஒரு நகரத்தில் மற்றொரு நகரத்தை இணைக்கும் போது இடைப்பட்ட பகுதியில் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதுதான் தொழில்வளையத் திட்டத்தின் குறிக்கோள்.

இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சாலைவசதி, சரக்கு ரயில் போக்குவரத்து வசதி, விமான வசதி, துறைமுக வசதி, புதிய நகரங்களை உருவாக்குவதல், மின்சாரம், தண்ணீர் ஆகிய வசதிகளை உருவாக்கித் தருவதன் மூலம் இந்த இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். அரசு, வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றின் துணைகொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழில் வளையங்கள் பற்றி சில தகவல்கள்….

டெல்லி - மும்பை

இந்தியாவின் தலைநகரமான புது டெல்லிக்கும் இந்தியாவின் நிதி தலைநகரத்துக்கும் இடையே அமைகிறது. சர்வதேச அளவில் மிக அதிக முதலீட்டில் உருவாக்கப்படுகிறது.

நீளம் : 1,483 கிலோ மீட்டர்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் : 30 லட்சம்.

திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜப்பானுடன் 2006-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜப்பான் அளித்துள்ள தொகை ரூ.1,000 கோடி

ஜப்பானும் இந்தியாவும் சரி சமமாக நிதியை அளித்து இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.

டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் பயன்படும்.

அமிர்தசரஸ் – கொல்கத்தா

அமிர்தசரஸ் - டெல்லி - கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைத்து தொழில் வளையம் உருவாக்க கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் பயனடையும் நகரங்களின் எண்ணிக்கை 20

முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5,749 கோடி.

பயன்பெறும் மாநிலங்கள்: பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம்

இந்த திட்டத்தை மத்திய அரசே முழு நிதியுதவி அளித்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

மும்பை – பெங்களூரு

வேலைவாய்ப்பு உருவாக்கம் 25 லட்சம்

மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையே பொருளாதார வளையம் அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பயன்பெறும் மாநிலங்கள்: மஹாராஷ்டிரா, கர்நாடகா.

ரூ.3 லட்சம் கோடி தொழில்துறை முதலீடு பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னை – பெங்களூரு

கிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காகவும் தென்னிந்திய மாநிலங்களின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் இந்த தொழில் வளையம் திட்டமிடப்பட்டது.

இந்தியாவின் மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக கருதப்படுகிறது.

ஜப்பான் அரசு நிதியுதவி அளிக்க இருக்கிறது.

பயன்பெறும் மாநிலங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா

இந்த இரு நகரங்களுக்கு சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பெங்களூரு – சென்னை எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை பொருளாதார வளையம்

இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார வளைய திட்டமாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை இந்த திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீளம் 2,500 கிலோ மீட்டர்.

முழுவதும் கிழக்கு கடற்கரையொட்டி வரும் இந்த பகுதியில் துறைமுகங்களை மேம்படுத்துவதற்கு சாகர்மாலா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக ஆசிய வளர்ச்சி வங்கி அளிக்க உள்ள தொகை 631 மில்லியன் டாலர்.

SCROLL FOR NEXT