கடந்த வாரம் சிங்குர் தரும் படிப் பினைகள் செய்தி இடம்பெற்ற அதே பகுதியில் மம்தாவின் பாரபட்சமான அணுகுமுறை இடம் பெறுவதை என்னவென்று சொல்வது? சிங்குர் நிலத்தை விவசாயிகளுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று டாடா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பு வெளியான உடன் `நிம்மதியாக இறப்பேன்’ என்று கருத்து தெரிவித்ததோடு, நிலங்களை அளவிடும் பணிக்கும் உத்தரவிட்டார் மம்தா.
இந்த சம்பவம் நடந்து ஒரு வார காலத்திற்குள் டாடா நிறுவனத்தை மீண்டும் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய மம்தா அழைப்பு விடுத்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது. மேலும் சொகுசுக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தை மேற்கு வங்கத்தில் ஆலையைத் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் மம்தா.
கடந்த வாரம் மூனிச்சில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் மேற்கு வங்க நிதி அமைச்சர் அமித் மித்ரா, தலைமைச் செயலர் வாசுதேவ் பானர்ஜி, தொழில்துறைச் செயலர் உள்ளிட்ட குழுவினர் முகாமிட்டிருந் தனர். மேற்கு வங்கம் அளிக்கும் பல சலுகைகள் குறித்து மூன்று மணி நேர வீடியோ படக் காட்சியும் பிஎம்டபிள்யூ அதிகாரிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுவிட்டு மூனிச் வந்த மம்தா, அங்கு முதலீட்டாளர்கள் அழைப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பிஎம்டபிள்யூ ஆலையினர் மேற்கு வங்கத்தில் ஆலை தொடங்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். விழாவில் பங்கேற்ற டாடா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பேசிய அவர், டாடாவும் மேற்கு வங்கத்தில் ஆலை தொடங்க வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநிலத்தை ஆட்டோ மொபைல் கேந்திரமாக மாற்ற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிங்குரில் டாடா நானோ ஆலை வெளியேற்றுவதற்கான போராட்டம், உண்ணாவிரதம் மூலம் தன்னை யும், தனது கட்சியையும் வளர்த்துக் கொண்ட மம்தா, கம்யூனிஸ்டுகளின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இதைப் பயன்படுத்தி னார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, மேற்கு வங்கத்தில் தொழிற் சாலை தொடங்க முன்வர வேண் டும் என்று அனைத்து தொழிலதி பர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதேசமயம் சிங்குர் ஆலை நிலத்தை திரும்பித் தர சட்டப் பேரவையில் சட்டம் இயற்றினார்.
விவசாய நிலத்தைத் திரும்பத் தரும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஆனால் 10 ஆண்டுகளாக விவசாயப் பணிகள் நடைபெறாத நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?
அடுத்து பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு மட்டும் விவசாயம் செய்ய முடியாத நிலத்தை மம்தா அளிப்பாரா? அந்த அளவுக்கு அபரிமிதமான நிலங்கள் மாநில அரசு வசம் உள்ளதா? இவையெல்லாம் சாதாரண மனிதனுக்கு எழும் கேள்விகள்.
இதற்கிடையே, ஏற்கெனவே பிஎம்டபிள்யூ நிறுவனத்துக்கு ஆலை சென்னையை அடுத்த ஒரகடத் தில் உள்ளது. இரண்டாவது ஆலை அமைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று அந்த நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இரண்டாவதாக ஆலை தொடங்கும் திட்டம் இல்லாத நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக அழைப்பு விடுக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன?
மம்தாவின் பாரபட்சமான அணுகுமுறைக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா?