வணிக வீதி

பஜாஜ் - கவாசகி கூட்டணி முறிந்தது

செய்திப்பிரிவு

இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் திகழும் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்துக்கும் ஜப்பானின் கவாசகி மோட்டார் நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. 8 ஆண்டுகளாக இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றின. ஏப்ரல் 1-ம் தேதி முதல் தனித்தனியாக செயல்படுவதென இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

1990களின் தொடக்கத்தில் பஜாஜ் நிறுவனம் கவாசகி நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்தன. ஸ்கூட்டர் தயாரிப்பிலிருந்து மோட்டார் சைக்கிள் தயாரிப்புக்கு மாறுவதற்கு பஜாஜ் நிறுவனத்துக்கு கவாசகி நிறுவனத்தின் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஆனால் அந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை.

இதனிடையே சொந்த தொழில் நுட்பத்தில் பல்சர், பாக்ஸர் என புதுப்புது மாடல்களை களமிறக்கி மோட்டார் சைக்கள் சந்தையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடித்தது பஜாஜ்.

8 ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் விற்பனையகங்களில் கவாசகி மோட்டார் சைக்கிள்களை விற்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பஜாஜ் விற்பனையகங்களில் கவாசகி மோட்டார் சைக்கிள்கள் (பிரீமியம் பைக்) விற்பனை செய்யப்பட்டு வந்தன. விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதி யையும் பஜாஜ் நிறுவனம் அளித்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனத்துடன் பஜாஜ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன்படி பஜாஜ் விற்பனையகங்களில் ஆஸ்திரிய நிறுவனத்தின் சூப்பர் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டன.

பஜாஜ் விற்பனையகத்தில் ஆஸ்திரிய மற்றும் ஜப்பானின் கவாசகி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. இது கவாசகி நிறுவனத்துக்கு ெபும் மன வருத்தத்தை அளித்ததாக இத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்கள் தயாரிப்புகளை தனியே விற்பனை செய்து கொள்வ தென கவாசகி முடிவு செய்துள்ளது. பரஸ்பர புரிதலோடு பிரிவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இரு நிறுவனங்களிடையி லான கூட்டணி முறிந்தாலும் பிற நாடுகளில் இரு நிறுவனங்களது கூட்டணி தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் கூட்டு சேர்வதும், பிறகு பிரிந்து செல்வது சகஜமான நிகழ்வு. இப்போது பஜாஜ், கவாசகி இடையிலான கூட்டணி முறிந்துள்ளது.

SCROLL FOR NEXT