வணிக வீதி

சிறிய தவறு; பெரிய இழப்பு

நீரை மகேந்திரன்

தவறான உத்திகள், தயாரிப்புகள், சந்தையிடு தல்களால் சரிந்த நிறுவனங்கள் ஏராளம். இதற்கு மிகப் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் என்கிற வித்தியாசங்கள் எதுவும் கிடையாது. நிறுவன வளர்ச்சியின் போக்கில் ஆரம்பத்தில் செய்த தவறுகளோ அல்லது தற்போது மேற்கொண்டிருக்கும் உத்திகளிலோ, எதிர்கால வளர்ச்சி குறித்த கணிப்புகளிலோ எது ஒன்றில் தவறு நிகழ்ந்தாலும் நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்திப்பது என்னவோ உறுதி. இதன் காரணமான சில நிறுவனங்கள் அதல பாதாள சரிவுகளைக் கண்டுள்ளன என்பதும் உண்மை. அப்படி சந்தித்த நிகழ்வுகள் உலக அளவில் ஏராளம் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் தனது கேலக்சி -7 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. பரவலாக வரவேற்பும் பெற்றது. ஆனால் ஒரு சில இடங்களில் அதன் லித்தியம் பேட்டரி வெடித்த சம்பவங்களால் அதுவரை விற்பனை செய்திருந்த மொத்த கேலக்ஸி 7 ஸ்மார்ட்போன்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஆனால் அதுவரை விற்பனை செய்திருந்த போன்களின் எண்ணிக்கையோ 25 லட்சத்துக்கும் அதிகம். இதனால் சுமார் 2,600 கோடி டாலர் சந்தை மதிப்பை சில தினங்களுக்குள் இழக்க நேர்ந்தது அந்த நிறுவனம். கேலக்சி நோட் 7-ஐ திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்தாலும் இழந்த சந்தையை மீண்டும் பெறுவது சாதாரணமானதல்ல என்பது சாம்சங்கிற்கு நன்றாகவே தெரியும்.

சர்வதேச அளவில் இதுபோல பல தயாரிப்புகள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன. இந்த சந்தையை ``புரோக்கன் மார்க்கெட்’’ அல்லது திரும்ப பெறும் (Recall) சந்தை என்று அழைக்கின்றனர். சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு, தவறான முடிவுகளைக் கொடுத்த எல்லாமும் இதில் அடங்குகிறது. சர்வதேச அளவிலான சந்தை நடவடிக்கைகளில் சில தவறுகள் தவிர்க்க முடியாது என்றாலும் அதில் மீண்டு வரும் நிறுவனங்களே சந்தையில் நிலைத்து நிற்கின்றன.

வாகன சந்தை

இதற்கு சமீபத்திய உதாரணமாக ஃபோக்ஸ்வேகன் விவகாரத்தை குறிப்பிடலாம். புகையளவு கட்டுப்பாடு கருவிகளில் மோசடிகள் செய்ததால் சந்தையிலிருந்து 1.88 லட்சம் கார்களை திரும்ப பெற்றது இந்த நிறுவனம். தவிர பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, தவறை ஒப்புக்கொள்ளும் நிலைமை வரை சென்றது. இதில் அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்போ 1,800 கோடி டாலர்.

பல கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஜப்பானின் டகடா நிறுவனம் ஏர்பேக்கை சப்ளை செய்து வந்தது. ஆனால் அந்த ஏர்பேக்குகள் அவசர காலங்களில் சரியாக விரியவில்லை என்கிற புகாரை அடுத்து பல கார் நிறுவனங்களும் சுமார் 6 கோடி டகடா ஏர்பேக் பொருத்திய கார்களை சந்தையிலிருந்து திரும்பப் பெற்றன இந்த வகையில் டகடா நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஆண்டு நஷ்டம் 121 மில்லியன் டாலர். ஆனால் கார்களை திரும்ப பெற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமோ 66,500 கோடி யூரோ.

மாருதி நிறுவனம் தனது வாகனங்களில் பயன்படுத்திவரும் ஸ்வீடனின் ஆட்டோலிவ் ஏர்பேக்கை கட்டுப்படுத்தும் மென்பொருளில் பிரச்சினை எழுந்ததையடுத்து இந்தியாவில் தனது பல ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இப்படி 20 ஆயிரம் எஸ் கிராஸ் கார்களையும், 75,500 பெலெனோ கார்களையும், 2,000 செடான் டிசயர் கார்களையும் திரும்ப பெற்றது. இந்த ஆண்டின் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் போர்டு நிறுவனம் 91 ஆயிரம் கார்களை திரும்ப பெற்றுள்ளது.

சில்லரை வர்த்தகம்

உலகின் மிகப் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் ஜெர்மனியில் இப்போதும் ஒரு நிலையான இடத்தை அடைய முடியவில்லை என்கிறது ஆய்வுகள். கலாச்சார ரீதியான தவறான புரிதல் மற்றும் ஊழியர்களை தவறாக கையாளுவதால் அங்கு நஷ்டத்தில் இயங்கும் நிலையில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு பல லட்சம் டாலர் இழப்புகளை சந்தித்து வருகிறது. இதை அறிவிக்கவில்லை என்றாலும் ஆண்டுக்கு 200 முதல் 300 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கிறது.

அமெரிக்க பாணியில் ஊழியர்களை வேலைக்கு ஈடுபடுத்துவதும், காலையில் தினமும் வால்மார்ட், வால்மார்ட் என ‘வார்ம் அப்’ செய்ய வைப்பதும் ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வால்மார்ட்டில் பணியாளர் சங்கங்கள் அமைத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஜெர்மனியினர் இயல்பாகவே தொழிலாளர் உணர்வு கொண்டவர்கள். தவிர ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவிக்கும் எண்களையும் ஜெர்மனியினர் புறக்கணித்து விடுகின்றனர். இதனால் ஜெர்மனியில் வால்மார்ட் திரும்பப் பெறும் நிலைமையில் உள்ளது.

இந்தியாவில் நூடுல்ஸ் சந்தையில் 56 சதவீதத்தை வைத்திருந்த மாகி ஒரு சில மாதங்கள் தடை செய்யும் நிலைமைக்கே சென்றது கவனிக்க வேண்டியது. அந்த நிறுவனம் சுமார் 40 கோடி மாகி பாக்கெட்டுகளை சந்தையிலிருந்து திரும்ப பெற்று அழித்தது. மாகி நூடுல்ஸில் நஷ்டம் ரூ. 200 கோடியும் அதை திரும்ப பெற்று அழிக்க 100 கோடி வரையிலும் நெஸ்ட்லே நிறுவனம் செலவிட்டது. மீண்டும் சந்தையில் நுழைந்தாலும், இப்போது பல நிறுவனங்களும் மிகப் பெரிய போட்டியை அளித்து வருகின்றன.

இண்டெல் வாட்ச்

இதுபோல பலதரப்பட்ட சந்தைகளிலும் திரும்ப பெறும் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இண்டெல் நிறுவனம் தனது பிட்னஸ் வாட்சான ‘பேசிஸ் பீக்’ கடிகாரத்தை நுகர்வோரிடமிருந்து கிடைத்த அனுபவங்களின் காரணமாக திரும்ப பெற்றது. அதிக வெப்பத்தை வெளிப்படுத்தியதால் இவற்றை திரும்ப பெற வேண்டிய சூழல் அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டது.

மருந்து பொருட்கள்

இந்த வகையில் மருந்து நிறுவனங்களின் சந்தை முக்கியமானது. தடை செய்வதன் காரணமாக திரும்ப பெறுகிற நடவடிக்கைகளைவிட பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் தவறான விளைவுகளால் திரும்ப பெறப்பட்டுள்ளன. குறிப்பாக 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் உடல் குறைப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிபிஏ (PPA) என்கிற மருந்து சந்தையில் வேற விளைவுகளை ஏற்படுத்தியது. மூளையில் ரத்தக் கசிவு, பக்கவாதம் உள்ளிட்டவற்றுக்கு காரணமாக அமைந்தது. அதுபோல மெரிடியா என்கிற மருந்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால் திரும்ப பெறப்பட்டன. தவறான பேக்கேஜிங் முறைகளாலும் மருந்துகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

தவிர சந்தையில் மிகப் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட ஒன்று அதன் இலக்கை சென்று சேராத சம்பவங்களும் நிகழ்கின்றன. பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்த ‘பில் பில்லியன் டே’ நாளில் அதன் இணையதளத்துக்குள் நுழையவே முடியவில்லை. இதுபோல பின்வாங்கிய சம்பவங்களும் வரலாற்றில் உள்ளன.

பொதுவாக நிறுவனங்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும் விதமாக தயாரிப்புகளை திரும்ப பெறுவதும் உத்திகளை மாற்றுவதும் சரியான நடவடிக்கைதான். ஆனால் அவற்றுக்கு பின்னே பன்மடங்கு வலிமையான உழைப்பும் சமூக வளங்களும் வீணடிக்கப்படுவதையும் தொழில்துறை தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

- maheswaran.p@thehindutamil.co.in

SCROLL FOR NEXT