பொதுவாக கார்களை நாம் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். அலுவலகம் செல்ல, குடும்பத்தினருடன் சுற்றுலா போன்றவற்றுக்குத்தான் காரின் உபயோகம் உள்ளது. ஆனால் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பிரியர்கள் உலகெங்கிலும் உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வார இறுதி நாள்களில் அடர்ந்த வனப் பகுதிகள், பனிப் பிரதேசங்கள், பாலைவனங்கள் என சாகசங்களைத் தேடி பயணிப்போர் ஏராளம். இத்தகை யோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது தான் நிசான் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ரோக். ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் நிசான் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.
சாகசப் பயணங்களுக்கான கார்களை உருவாக்குவதில் சமீப ஆண்டுகளாக அதிகம் கவனம் செலுத்தி வரும் நிசான் நிறுவனம், இதற்கு முன்பு 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய ரோக் மாடல் காரின் அடுத்த தலைமுறை மாடலாக இது அறிமுகமாகிறது.
அமெரிக்காவில் அதிகம் விற்பனை யாகும் பிராண்டுகளில் நிசான் முக்கியமானதாகும். இதைக் கருத்தில் கொண்டு நியூயார்க் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ள இந்த மாடல் ரோக், பனிப் பிரதேசங்களிலும், பாலைவனத்திலும் பயணிக்கும் வகையில் இதன் சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டிரையல் வாரியர் புராஜெக்ட் என் றழைக்கப்படும் சிறப்பு உருவாக்கத்தின் அடிப்படையில் இந்த மாடல் கார்கள் தயாரிக்கப்படுகின்றன. வழக்கமான கார் களில் உள்ளதைப் போன்று சக்கரங்களுக் குப் பதிலாக பீரங்கிகளில் உள்ளதைப் போன்ற சக்கரங்கள் இதில் உள்ளன.
வழக்கமாக ராணுவ வாகனங்களில் உள்ளதைப் போன்று, எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் இதன் பெயிண்ட் உள்ளது. அதேபோல மஞ்சள் நிற ஜன்னல் கண்ணாடி, அதிக ஒளி உமிழக் கூடிய முகப்பு விளக்குகள் இதன் சிறப்பம்சமாகும். அதேபோல இழுவைத் திறன் கொண்ட விஞ்ச் இதில் உள்ளது. இதனால் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கவும் இதைப் பயன்படுத்த முடியும். 170 ஹெச்பி இன்ஜின், 175 எல்பி டார்க் இருப்பது மலை ஏற்றத்துக்கும், பாலைவனப் பயணத்துக்கும் மிகவும் ஏற்றது. 2.5 லிட்டர் டிஓஹெச்சி 16 வால்வ் 4 சிலிண்டர் இன்ஜின், இதில் எக்ஸ்டிரானிக் கியர் டிரான்ஸ்மிஷன் ஆகியன பயணத்தை எளிதாக்குகிறது.
வாகனம் மூலம் தங்களை வித்தியாசப் படுத்திக்கொள்ள நினைப்பவர்களின் தேர்வாக இது இருக்கும்.