வணிக வீதி

அப்ரிலியா எஸ்ஆர் 150: பிரீமியம் ரக ஸ்கூட்டர்

செய்திப்பிரிவு

இத்தாலி நிறுவனமான பியாஜியோ குழுமத் தயாரிப்புகளில் ஒன்றான அப்ரிலியா ஸ்கூட்டர்களின் மேம்படுத்தப்பட்ட ரகம் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. பியாஜியோ குழுமத் தயாரிப்புகள் பெரும்பாலும் பிரீமியம் ரகமாகும்.

ஸ்கூட்டர் பிரிவில் பெரும்பாலான நிறுவனங்கள் ஃபைபர் பாடி பயன்படுத்தும் சூழலில் இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்தும் அலுமினியத்தால் ஆனவை. அப்ரிலியா எஸ்ஆர் 150 என்ற பெயரில் மூன்று மாடல்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அப்ரிலியா எஸ்ஆர் 150 கார்பன், எஸ்ஆர் 150 ரேஸ் ஆகியன பிற இரண்டு மாடல்களாகும்.

இந்த மாடல்களின் சிறப்பு அம்சமே வண்ணக் கலவைதான். இரண்டு வண்ணங்கள் சேர்ந்து சிறப்பான தோற்றத்தை அளிக்கின்றன.

இதில் அகலமான விண்ட் ஸ்கிரீன் மற்றும் போன் இணைப்பு வசதி ஆகியன சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் எஸ்ஆர் 150 கார்பன் மாடல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் (ஸ்பெஷல் எடிசன்) தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் சிறப்பு வசதியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஜின் ஆயில் மாற்றுவதை உணர்த்தும் எச்சரிக்கை விளக்கும் இதில் உள்ளது.

இதில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதியானது இருக்கைக்குக் கீழ் உள்ளது.  அப்ரிலியா செயலியும் இதனுடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நேவிகேஷன், மொபைல் இணைப்பு, வாகனத்தின் இடத்தைக் கண்டறிவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும். இது ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

இந்த ஸ்கூட்டர்கள் அனைத்துமே 154 சிசி திறன் கொண்ட ஒற்றை இன்ஜினை உள்ளடக்கியவை. 10.06 ஹெச்பி மற்றும் 10.9 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டவை. முன் சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்துக்கு டிரம் பிரேக்கும் உள்ளன. ஸ்கூட்டர் மாடலில் மோனோ ஷாக் அப்சார்பர் இருப்பது அப்ரிலியா வாகனத்தின் சிறப்பாகும். இதன் பெட்ரோல் கொள்ளளவு 6.5 லிட்டராகும்.

எஸ்ஆர் 150 மாடல் விலை ரூ. 70,031, கார்பன் எடிசன் விலை ரூ. 73,500, ரேஸ் வெர்சன் மாடல் விலை ரூ. 80,211 ஆகும். ஸ்கூட்டர் மாடலில் இந்நிறுவனத் தயாரிப்பு எப்போதுமே விலை அதிகம். பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா மாடல் எஸ்எக்ஸ்எல் 150 விலை ரூ. 96,518 ஆகும். இதே பிரிவில் தயாராகும் ஹோண்டா ஆக்டிவா, சுஸுகி ஆக்ஸஸ் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் விலை இதைவிடக் குறைவுதான். பிரீமியம் ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் இதைத் தேர்வு செய்யலாம்.

SCROLL FOR NEXT