வணிக வீதி

குழந்தைகளுக்கும் கிரெடிட் கார்டு

செய்திப்பிரிவு

நம்மில் பெரும்பாலானோர் நம்முடைய வருமானம் மற்றும் செலவுகளை முறைப்படுத்துவதில் சில சறுக்கல்களைச் சந்தித்தப் பிறகே நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்த புரிதலை அடைந்திருப்போம். எவ்வளவு விரைவாக நாம் இதை உணர்கிறோமோ, நம்முடைய நிதிநிலைமைக்கு அவ்வளவு நல்லது.

எனவே உங்களுடைய குழந்தைகளுக்கும் மிக இளம் வயதிலேயே நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்குவது அவசியம். குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் கேட்கிற பணத்தைக் கொடுக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அதை சேமித்து வைத்து அவர்களுக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க ஊக்கப்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

குழந்தைகளுக்குச் செலவு செய்வதில் சுதந்திரம் அளிக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் சரியான விஷயங்களுக்குச் செலவு செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். நாம் எந்த முறையில் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்கிறோம் என்பதும், அதனை அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் மிகவும் முக்கியம்.

இதற்கு ஆட்-ஆன் கார்டுகளும், பண மேலாண்மை ஆப்களும் உதவியாக உள்ளன. சிறுவர் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலான வங்கிகள் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவயதினர்களுக்கு சேமிப்பு கணக்குத் தொடங்க அனுமதிக்கின்றன. இந்தக் கணக்கில் டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதை வைத்து சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்.

உதாரணத்துக்கு, ஐடிபிஐ வங்கியின் கிட்ஸ் டெபிட் கார்டு மூலம் சிறுவயதினர் ஒருநாளைக்கு ரூ. 2,000 வரை ஏடிஎம்மில் எடுக்கலாம், அல்லது பொருள்கள் வாங்கலாம். அதேபோல் ஐசிஐசிஐ வங்கியின் ஸ்மார்ட் ஸ்டார் சேமிப்பு கணக்கு மூலம் தரப்படும் டெபிட் கார்டில் ரூ. 5000 வரை பணமாக எடுக்கலாம், அல்லது பொருள்கள் வாங்கலாம். குழந்தையின் பேரில் காசோலை புத்தகமும் வழங்குகிறது.

நீங்களோ உங்கள் துணைவியோ கிரெடிட் கார்டு வைத்திருக்கும்பட்சத்தில், அதை வைத்து ஆட்-ஆன் அல்லது இணைப்பு கிரெடிட் கார்டு வாங்கி குழந்தைகளுக்கு வழங்க முடியும். இந்த ஆட்-ஆன் கிரெடிட் கார்டுக்கான வரம்பு தொகை, முதன்மை கிரெடிட் கார்டு வைத்திருப்பவருடைய வரம்பு தொகையிலிருந்து பகிரப்படுகிறது. இதில் பெற்றோர்களின் விருப்பத்துக்கேற்ப குறைந்தபட்ச வரம்புத் தொகையை நிர்ணயிக்க முடியும். பெரும்பாலான வங்கிகள் இந்த ஆட்-ஆன் கார்டுகளை இலவசமாக வழங்குகின்றன.

முதன்மை கிரெடிட் கார்டு வைத்துள்ள பெற்றோர் தான், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆட்-ஆன் கார்டுகளின் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய பொறுப்புடையவர். இதன் மூலம் குழந்தைகள் செலவு செய்வதை எளிதில் பெற்றோர்களால் கண்காணிக்க முடியும். பண மேலாண்மைக்கு பல்வேறு மொபைல் செயலிகள் உள்ளன. நம்முடைய செலவுகளை வகைப்படுத்த, கண்காணிக்க, பட்ஜெட் நிர்ணயிக்க, நெருக்கடி தருணங்களில் எச்சரிக்கை அளிக்க என பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

சில செயலிகளில் நாம் தகவல்களை அளிக்க வேண்டும், சில செயலிகள் தானாகவே தகவல்களை எடுத்துக்கொள்ளும் வகையில் இயங்குகின்றன. Walnut மற்றும் Money View இரண்டும் ஆட்டோமேட்டட் செயலிகள் — இவை வங்கிகளிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை வைத்து நம்முடைய செலவுகளை டிராக் செய்கின்றன.

இந்தச் செயலிகள் கட்டணங்களைப் பிரித்து தருவதோடு, பணம் அனுப்பவும் உதவுகிறது. பெற்றோர்கள் இந்த செயலிகளைக் குழந்தைகளைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கலாம். இதன்மூலம் அவர்கள் தங்கள் செலவுகளைக் கண்காணித்து, நிதி மேலாண்மை செய்துகொள்ள முயற்சிப்பார்கள்.

டீன் ஏஜ் பிள்ளைகளையும், அவர்களது செலவுகளையும் கண்காணிப்பதில் உதவும் ஒரு செயலி Slonkit. மேலே குறிப்பிட்ட வசதிகளோடு சேர்த்து, இந்தச் செயலி கூடுதலாக பிரீபெய்டு விசா கார்டு வழங்குகிறது. இதில் பெற்றோர்கள் விரும்பிய தொகையை லோடு செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெற்றோர்கள் இந்தச் செயலியை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.

இந்த செயலி கார்டு மூலம் செய்யப்படும் அத்தனை பரிவர்த்தனைகளையும் ஆட்டோமேட்டிக்காகக் கண்காணிக்கும். மேலும் உணவு, பயணம், சினிமா எனச் செலவுகளை வகைப்படுத்தி காட்டும். இந்தக் கார்டில் நெருக்கடி சமயத்தில் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக வரம்புக்குட்பட்ட உடனடி கடன் வழங்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இந்தச் செயலிகள் மூலம் குழந்தைகளின் செலவு போக்கைக் கண்காணித்து ஆராய்ந்து, அவர்களை எச்சரிக்கை செய்யலாம், அவர்களுடைய தினசரி செலவு வரம்புகளை நிர்ணயிக்கலாம். நாளடைவில், இதுபோன்ற முறையான கண்காணிப்பின் மூலம் உங்களுடைய குழந்தையின் நிதி ஒழுக்கம் மேம்படும், செலவுப் பழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும்.

- சத்யா சொந்தானம்

SCROLL FOR NEXT