வணிக வீதி

வங்கிச் சேவையில் அஞ்சல்துறை

செய்திப்பிரிவு

இந்திய வங்கிச் சேவைத் துறையில் புதிதாக இணைந்துள்ளது போஸ்ட் பேமண்ட் வங்கி. இந்திய அஞ்சல் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாடு முழுவதும் 650 கிளைகளில், 3,250 மையங்களில் இந்த போஸ்ட் பேமெண்ட் வங்கி செயல்படும்.

போஸ்ட் பேமண்ட் வங்கியில் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய் யலாம். பணம் எடுக்கலாம். பணம் அனுப்புவது, சேமிப்பு கணக்கு தொடங்குவது, தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் செலுத்தும் சேவைகள் கிடைக்கும். இந்த வங்கியில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். மூன்றாம் நபர்களுக்கும், வேறு வங்கிகளுக்கும் போஸ்ட் பேமண்ட் வங்கி மூலம் பணம் அனுப்பவும் முடியும்.

சிறு,குறுந்தொழில் செய்பவர்கள் நடப்பு கணக்கு தொடங்கும் வசதிகள் உள்ளன. இந்த வங்கி சேவைக்காக அஞ்சல் துறையில் உள்ள 3 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து வங்கிச் சேவையை அளிக்கும் விதமாக பயோமெட்ரிக் கருவிகள், கையடக்க கருவிகள் இவர்களுக்கு அளிப்படும்.

இதர பேமண்ட் வங்கிகளைக் காட்டிலும் போஸ்ட் பேமண்ட் வங்கிகளுக்கு இந்தியாவில் வலுவான அடித்தளம் உள்ளது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள்கூட இந்த வங்கி சேவையை வழங்க உள்ளன. மேலும் அஞ்சல் பணியாளர்களே வங்கிச் சேவையை வழங்கும் ஊழியர்களாக இருப்பார்கள் என்பதால் வாடிக்கையாளர்களை கண்டறிவதும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதும் எளிதாக இருக்கும்.

போஸ்ட் பேமண்ட் வங்கி மூன்று வகையான சேமிப்பு கணக்குகளை அளிக்கிறது. குறிப்பாக ரெகுலர் சேவிங்ஸ், அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் டிஜிட்டல் சேவிங்ஸ் என மூன்று பிரிவுகளில் சேவைகளை அளிக்கிறது. இவற்றில் கணக்கு தொடங்க குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை.10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணக்கு தொடங்க அனுமதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 4 சதவீத வட்டி கிடைக்கும். போஸ்ட் பேமண்ட் வங்கியில் பல சேவைகளுக்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் அட்டைகள் வழங்கிய கைகள் இனி ஏடிஎம் அட்டைகளை வழங்கும்.

SCROLL FOR NEXT