வணிக வீதி

ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தி சுஸுகி நிறுவனத்தின் நூதன பிரசாரம்

செய்திப்பிரிவு

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னமும் வாகனம் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.

ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சுஸுகி நிறுவனம் பெரு நகரங்களில் நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதை தனது சமூக பொறுப்புணர்வாகவே கருதுகிறது. நாடு முழுவதும் "ஹெல்மெட் ஃபார் லைஃப்'' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற பிரசாரங்களில் கூட்டம் கூடி, துண்டு பிரசுரம் விநியோகிப்பதோடு நிற்காமல் அதை பயனுள்ள பிரசாரமாக்கி வருகிறது சுஸுகி. இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதை தங்கள் வாழ்க்கையின் பழக்கமாக்கிக் கொள்ளும் வகையில் இந்த பிரசாரத்தை அமைத்துள்ளது. 

இதற்காக அந்தந்த மாநில போக்குவரத்துத் துறையினருடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மும்பை, புணே, அகமதாபாத், சூரத், பெங்களூர், கோழிக்கோடு, சென்னை, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை சுஸுகி மேற்கொண்டுள்ளது.

நகரின் பிரதான போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் சந்திப்பில் சுஸுகி நிறுவன பணியாளர்கள் நின்று ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துவர். ஹெல்மெட் அணியாதவர்களிடம் சென்று அது அணியாமல் போவதால் ஏற்படும் விளைவுகளை விளக்குவர். அந்த சமயத்தில் போக்குவரத்து காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கான அபராத சலானை அளிப்பர்.

இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்று வலியுறுத்தி வாகன ஓட்டியிடம் ஹெல்மெட் ஒன்றை இலவசமாக சுஸுகி பணியாளர்கள் அளிப்பர். ஒவ்வொரு நகரிலும் 1,000 ஹெல்மெட்களை இலவசமாக அளிக்க நிறுவனம் திட்டமிட்டு  அதை செயல்படுத்தியும் வருகிறது.

நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா தெரிவித்துள்ளார்.

இலவச ஹெல்மெட்களை அளிப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு நகரில் உள்ள போக்குவரத்து துறைக்கும் 5 ஜிக்ஸெர் மோட்டார் சைக்கிளை இலவசமாக அளித்துள்ளது. இந்த ஜிக்ஸெர் பைக், காவல்துறைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜிக்ஸெர் எஸ்எப் மாடல் மோட்டார் சைக்கிளில் காவல்துறையினருக்கான பீக்கன் (விளக்கு), சைரன், ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 60 மோட்டார் சைக்கிளை நிறுவனம்  அளித்துள்ளது.

SCROLL FOR NEXT