இரு சக்கர வாகனப் பிரியர்களுக்கு டுகாட்டி நிறுவன வாகனங்கள் மீது பெரும் கனவுகள் உண்டு.
அரிதாகவே இந்திய சாலைகளில் காணக்கிடைக்கும் அந்த வாகனத்தை, சாலையில் எங்காவது கண்டுவிட்டால், அதையே சாதனைப் பெருமிதத்தோடு சக நண்பர்களோடு பகிரும் ரசிகர்கள் டுகாட்டிக்கு உண்டு.
தற்போது டுகாட்டி பிராண்டிலிருந்து ஹைப்பர்மோட்டாட் 950 என்ற புதிய மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் 937 சிசி யில் இரட்டை இன்ஜினைக் கொண்டிருக்கிறது. இதன் விற்பனையக விலை ரூ.11.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டுகாட்டியின் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இந்த மாடலின் எடை 4 கிலோ குறைவு. இதனால் இதன் இயங்கு திறன் அதிகரித்து 9,000 ஆர்பிஎம்-ல் 114 பிஹெச் பவரை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இதிலுள்ள ஃபிரேம்கள், ட்யூப்கள், பிரேக் டிஸ்குகள் அதி நவீன தரத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. நவீன மல்டிமீடியா அம்சங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஹைப்பர்மோட்டாட் 950 மாடலின் புறத் தோற்றம் மிகவும் மெருகேற்றப்பட்டதாக இருக்கிறது. முழுக்க முழுக்க சாகசப் பிரியர்களை நோக்கமாகக் கொண்டு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக லட்சங்களைக் கொடுத்து வாகனம் வாங்கும் சூழல் உருவாகிவிட்டது. கடன் வசதிகளும் அதற்கு நன்றாகத் தீனிப் போடுகின்றன. எனவே டுகாட்டியின் விலை சாதாரண ஒன்றாகவே எதிர்கொள்ளப்படும் என்றே தோன்றுகிறது.
தற்போது சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி, ஐதராபாத் போன்ற நகரங்களில் இந்த மாடலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.