வணிக வீதி

ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை பஜாஜ் டொமினார் 400-ன் சாகச பயணம்

செய்திப்பிரிவு

பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகள் அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் மக்களைக் கவரும் வகையில் அமைந்துவிடுகிறது.

இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற விக்ராந்த் கப்பலின் இரும்பு பாகத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பஜாஜ் வி நாட்டின் தேசப்பற்றை பறை சாற்றுவதாக அமைந்தது. இப்போது டொமினார் 400, எந்த சூழலிலும் சிறப்பாக செயல்படும் வாகனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

உலகின் மிகவும் குளிர்ப் பிரதேசமான ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரை இந்த மோட்டார் சைக்கிள் மிகச் சிறப்பாக பயணித்துள்ளது. போலார் ஒடிசி என்ற பெயரிலான இந்த பயணம் ஆர்க்டிக் முதல் அண்டார்டிகா வரையானது. மொத்த பயண தூரம் 51 ஆயிரம் கிலோ மீட்டராகும். 99 நாள்களில் இந்த தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளனர் தீபக் காமத், அவினாஷ் பிஎஸ் மற்றும் தீபக் குப்தா என்ற மூன்று இளைஞர்கள்.

இந்தப் பயணத்தில் முழுக்க முழுக்க இவர்கள் பயன்படுத்தியது பஜாஜ் டொமினார் 400 மோட்டார் சைக்கிள் மட்டுமே. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பூனாவிலிருந்து இம்மூவருக்கான மோட்டார் சைக்கிள் ஆர்க்டிக் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஆர்க்டிக் பகுதியில் டுக்டோயாக்டுக் எனும் பகுதியில் இவர்கள் பயணம் தொடங்கியது. ஆர்ஜென்டீனாவின் யுஷாயா எனும் பகுதி வழியாக அண்டார்க்டிக் பகுதியை அடைந்தனர். இவர்கள் பயணம் ஜேம்ஸ் டால்டன் நெடுஞ்சாலை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது. பான் – அமெரிக்கன் பயணத்தில்  சிலியில் உள்ள அட்காமா பாலைவனம் வழியாக பொலிவியாவில் உள்ள மரண சாலை எனப்படும் டெத் ரோடை அடைந்தனர். உலகிலேயே மிகவும் அபாயகரமான பாதைகள் என கருதப்படும் பாதைகளும் இவர்களது வழித்தடத்தில் இருந்தது.

இந்த பயணத் திட்டத்துக்கு தீபக் காமத் தலைமை தாங்கினார். மொத்தம் 15 நாடுகளிலிருந்து இளைஞர்கள் இந்த சாகச பயணத்தில் பங்கேற்றனர். இவர்கள் பயணம் செய்த பகுதியில் மைனஸ் 22 டிகிரி வரையிலான உறை பனியும் இருந்தது. அதிகபட்சமாக 54 டிகிரி வெயிலும் காய்ந்தது. இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியது பஜாஜ் டொமினார் 400. 

மலையேற்றம், மாறுபட்ட தட்ப வெப்ப நிலை ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துதான் இந்த மோட்டார் சைக்கிளின் சிறப்பாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் எந்த ஒரு இடத்திலும் வாகனம் பிரேக் டவுன் ஆகவில்லை என்பதுதான் முக்கிய அம்சமாகும்.  இந்த பயண திட்டமானது 3 கண்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருந்தது.

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அன்டார்க்டிக் பிராந்தியங்கள் வழியாக செல்லும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 15 நாடுகள் அதாவது கனடா, அமெரிக்கா, மெக்ஸிகோ, குவாடிமாலா, ஹோண்டுராஸ், எல்சால்வடார், நிகரகுவா, கோஸ்டா ரிகா, பனாமா, கொலம்பியா, ஈக்வடார், பொலிவியா, சிலி, ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளில் இக்குழு பயணம் மேற்கொண்டது.

நீண்ட தூர பயணத்துக்கேற்ப இதன் முன்புற மட்கார்டு மட்டும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இருக்கைகள் மட்டும் சற்று அகலமானதாக அமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மிகவும் குளிர்ச்சியான பகுதி, அதீத வெப்பமான பகுதி ஆகிய இரண்டிலுமே மிகச் சிறப்பாக செயலாற்றிய டொமினார் 400 இந்திய சாலைகளிலும் எதிர்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நிச்சயம் நம்பலாம்.

SCROLL FOR NEXT