வணிக வீதி

ஒரு கையில் சம்பளம் மறு கையில் ஆரோக்கியம்

செய்திப்பிரிவு

இன்றைய தலைமுறையினர் எடுக்கும் உறுதிமொழிகளில் ஒன்று “காலையில் சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்பதுதான். ஆனால், இந்த உறுதிமொழிகள் பெரும்பாலும் தண்ணீரில் எழுதப்பட்டவை என்றே நினைத்துக்கொள்ள வேண்டும்.

இரவு இரண்டாம் ஜாமம் வரைக்கும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று இருந்துவிட்டு படுத்தால் எப்படி காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். பிறகு எங்கே உடற்பயிற்சி செய்வது? மூச்சுப் பயிற்சியாவது செய்யலாமென்றால், கடிகாரத்தைவிட வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில் இங்கே மூச்சுவிடவே பலருக்கு நேரமில்லை.

இதனால் பெரும்பாலானோர் ஜிம்முக்கு கட்டிய ஆண்டு கட்டணம் அப்படியே வீணாகத்தான் போகிறது. சிலருக்கோ தாங்கள் வீட்டில் வாங்கி வைத்த ட்ரெட்மில் ஒரு ஓரமாய் ஒட்டடைப் பிடித்து கிடக்கும், அதைத் துடைக்கக் கூட நேரமிருக்காது. கடைசியில் டிவி விளம்பரத்தைப் பார்த்து வாங்கிய ‘சோனா ஸ்லிம் பெல்ட்’டை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

இன்றைய காலத்தில் வீடு, அலுவலகம், சாலைகள் என எல்லா இடங்களும் பரபரப்பான, பதட்டமான சூழலையே கொண்டிருக்கின்றன. இதனால் இன்று வேலைக்குச் செல்லும் சமூகம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக வாழ்க்கை முறை நோய்கள் உள்ளன.

உடல் வலி, மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை, தொப்பை, முடி உதிர்வு என இவற்றின் பட்டியல் ரொம்பவே நீளம். நோய்களைவிட நோய்களைப் பற்றிய கவலையுணர்வே எல்லோரையும் வாட்டி எடுக்கிறது. இவற்றிலிருந்து விடுபட உடற்பயிற்சி செய்வதைவிட்டால் வேறு எளிதான வழி இல்லை. சோர்வையும் கவலையையும் உடைத்தெறிய உடற்பயிற்சியும் விளையாட்டும் அவசியம்.

ஆனால், வார நாட்களில் உடற்பயிற்சி என்பது பலருக்கு நடக்காத காரியமாகவே உள்ளது. இதற்கு மாற்று வழி என்ன? சில நிறுவனங்கள் இதற்கான மாற்று வழியை யோசித்து செயல்படுத்தியுள்ளன. 

டிபிஎஸ் என்கிற டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் தனது மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் பணியாளர்கள் உட்காருவதற்கு இருக்கைக்குப் பதிலாக சைக்கிள் ஒன்றை வைத்துள்ளது. இப்போது அந்த அலுவலக ஊழியர்கள் ஒரே நேரத்தில் வேலையும் பார்த்துக்கொண்டு, சைக்கிளிங்கும் செய்து உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

யார் மேலாவது கோபம் வந்தால் கூட சைக்கிளை நாலு மிதி மிதித்தால் போதும் கோபம் காணாமல் போய்விடும் போல. ரொம்பவே சுவாரஸ்யமான பணிச்சூழலை இதன் மூலம் அந்நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது. 

டிபிஎஸ் வங்கி மட்டுமல்ல, பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துதரத் தொடங்கியுள்ளன. யோகா, தியானம் என அலுவலகச் சூழலை எந்த அளவுக்கு ஆரோக்கியமானதாக மாற்ற முடியுமோ அதற்கான முயற்சிகள் அனைத்தையும் திட்டமிட ஆரம்பித்துள்ளன.

இவற்றின் மூலம் பணியாளர்களின் நடத்தைகளில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உடல் அளவிலும் மன அளவிலும் எப்போதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வழிவகுக்கும்.

மன அழுத்தத்தைக் குறைத்து, பணியாளர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அலுவலக வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக அணுக முடியும். இதனால் உறவுகள் வலுப்படும், சமூகத்தை அணுகும் விதத்திலும் மாறுதல்கள் ஏற்படும். இவற்றுக்கெல்லாம் மேல் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் கணிசமான பங்களிப்பை இப்படிப்பட்ட மகிழ்ச்சியான பணியிடச் சூழல் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

 2018-ல் ஸ்விஸ் வங்கி நடத்திய ஆய்வில் மும்பையில் வேலைபார்ப்பவர்கள் சராசரியாக ஒரு வாரத்துக்கு 63.75 மணி நேரங்கள் உழைக்கிறார்கள் எனக் கண்டறியப்பட்டது. உலகிலேயே இதுதான் அதிகம் என்றும் கூறப்பட்டது. அந்த அளவுக்கு வாழ்வின் பெரும்பகுதியை அலுவலகத்தில் ஓரிடத்திலேயே அமர்ந்தபடி வேலைப்பார்க்கும் சூழல் அனைவருக்கும்.

இதனால் எளிதில் பல்வேறு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. மனித உடல் அதிகபட்சம் இயக்கத்திலேயே இருக்க வேண்டும். மாறாக இன்றைய பணிச்சூழலில் நாள் முழுவதும் அமர்ந்தபடியே இருக்கிறோம். எனவே உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உடற்பயிற்சி அவசியம். அதன்மூலம்தான் உற்சாகத்துடன் செயல்பட்டு மனதை ஒருநிலைப்படுத்தவும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடியும்.

மூன்று வருடங்களுக்கு மேல் ஒரு நிறுவனத்தில் பணிபுரிய 90 சதவீத மில்லினியல் தலைமுறையினர் விரும்புவதில்லையாம். பணிச்சூழல் மகிழ்ச்சியானதாகவும், புத்தாக்க சிந்தனைகளை ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி இடமாகவும் இருக்க வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.

ஊழியர்கள் இல்லாமல் நிறுவனங்கள் இல்லை. ஆரோக்கியமான ஊழியர்கள்தான் நிறுவனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுப்பார்கள் என்பதை நிறுவனங்கள் உணர ஆரம்பித்துள்ளன. இது எல்லா நிறுவனங்களிலும் கவனத்துக்குட்படுத்த வேண்டியது அவசியம். 

SCROLL FOR NEXT