வணிக வீதி

சந்தை விலைக்கே வெளிநாட்டு கரன்சி

எஸ்.கே.லோகேஷ்வரி

சில்லரை முதலீட்டாளர்கள் இனி வெளிநாட்டு கரன்சிகளை அன்றைய சந்தை விலைக்கே வாங்கவும், விற்கவும் முடியும். இதற்கான சூழலை பாரத ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.

நீங்கள் அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்பவராயிருப்பின் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பயணத்தின்போது உங்களுக்கு அந்நியச் செலாவணி தேவையிருக்கும். ஆனால், சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்குத்தான் நிச்சயம் வாங்க வேண்டியிருக்கும். இதில் சில நிறுவனங்கள் மட்டும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஓரளவு குறைந்த விலைக்கு தருகின்றன.

அதேபோல உங்களிடம் உள்ள வெளிநாட்டு கரன்சியை மாற்ற முயலும்போது சந்தை மதிப்பை விட குறைவான விலைக்குத் தான் நீங்கள் தர வேண்டியிருக்கும். ஆக வாங்கும்போதும் உங்களுக்கு இழப்பு ஏற்படும். அதை விற்கும்போதும் கணிசமான நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு முக்கியக் காரணம் அந்நியச் செலாவணி சந்தையானது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வெகுசில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். மேலும் இவர்களுக்கான வாடிக்கையாளர்கள்  லட்சக் கணக்கில் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கும் தொழில் நிறுவனங்கள் மட்டுமே. இதனால் சில ஆயிரங்களை மட்டுமே தங்கள் பயணத்துக்கென வாங்கும் சில்லரை முதலீட்டாளர்கள் பெரிதாக மதிக்கப்படுவதில்லை.

அதே போல முன்கூட்டியே நிர்ணயிக்கும் சந்தையும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாயிருப்பதில்லை. பணத்தை வாங்குவது மற்றும் விற்பது என்பது இங்கு அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை நிலவரமாகும்.

இதுபோன்ற சிறிய அளவில் வெளிநாட்டு கரன்சிகளை வாங்குவோர் பயனடைவதற்கான முயற்சியில் ஆர்பிஐ ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் சிறு வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த இறக்குமதியாளர்களும் பயனடைவர்.

வங்கிகளில் அன்றாடம் அந்நியச் செலாவணி மதிப்பிலேயே கரன்சிகளை வாங்கவும், விற்கவும் வழியேற்பட்டுள்ளது.இதன்படி உங்களுக்குத் தேவையான கரன்சிகளை வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வங்கிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற வங்கியல்லாத வெளிநாட்டு கரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தாமஸ் குக் போன்ற நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

இங்கு கரன்சிகளை சந்தை மதிப்பிலேயே வாங்கவும், விற்கவும் முடியும். இப்போது அந்நியச் செலா வணியை வாங்குவது அல்லது விற்கும் நடைமுறையானது வெளிப்படையானதாக இல்லை. இதனாலேயே அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் அவர்களது விருப்பத்திற்கேற்ற விலையை நிர்ணயிக்கின்றன. இதனாலேயே ஒரு நிறுவனத்துக்கும், வங்கிக்கும் இடையிலான விலையில் அதிக வித்தியாசம் காணப்படுகிறது.

சில வங்கிகள் ``கார்ட் ரேட்’’ அடிப்படையில் தினசரி காலையில் கரன்சிகளின் விலையை நிர்ணயிக்கின்றன. இதனால் அன்றைய தினம் முழுவதும் வாடிக்கையாளர்கள் கரன்சிகளை வாங்குவது அல்லது விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இது பெரும்பாலும் சந்தை மதிப்பிலிருந்து பெருமளவு மாறுபடுகிறது. சில சமயம் வங்கிகள் வெளியிடும் மதிப்புக்கும், இவர்கள் நிர்ணயிக்கும் மதிப்புக்கும் பெருமளவு வேறுபாடு நிலவுகிறது.

இந்த கட்டணம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை என்பதே யதார்த்தம். தற்போது ரிசர்வ் வங்கி கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (சிசிஐஎல்) நிறுவனத்திடம் ஒரு தனிப் பிரிவை சில்லரை வர்த்தகர்களுக்காக உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது வங்கிகளிடையிலான அந்நியச் செலாவணி பரிவர்த்தனைக்கு பாலம் அமைப்பதாக இருக்கும்.

இங்கு வாங்கும் கரன்சிகளின் மதிப்பானது நிர்ணயிக்கப்படும் மதிப்பை விட சற்று கூடுதலாக இருக்கும். நிச்சயம் தற்போது பரிவர்த்தனை மையங்கள் வசூலிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்காது. சில்லரை வர்த்தகர்கள் தங்களுக்குத் தேவையான கரன்சியை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அன்றைய சந்தை நிலவர மதிப்பிற்கேற்ப தங்களுக்கு தேவைப்படும் கரன்சியை தெரிவிக்கலாம். தற்போது சிசிஐஎல் இதற்கான இணையதளத்தை உருவாக்கி சோதித்து வருகிறது. அநேகமாக இது இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

எப்படி செயல்படும்?

இந்த இணையதள செயல்பாடு குறித்த அறிவிக்கை இம்மாத இறுதியில் சுற்றுக்கு விடப்படும். முதல் கட்டமாக சில்லரை வர்த்தகர்கள், வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும்.

வங்கிகள் என்ன விலைக்கு வெளிநாட்டு கரன்சிகளை விற்க, வாங்கப் போகின்றன என்பதை தினசரி இந்த இணையதளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில் எந்த வங்கி குறைந்த விலையில் வெளிநாட்டு கரன்சிகளை தருகிறதோ அதனிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிகிறது.

இதில் வெளிநாட்டு கரன்சிக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விலை, வங்கிகள் நிர்ணயிக்கும் சேவைக் கட்டணம் உள்ளிட்டவை தெரியும். இதற்கு விண்ணப்பித்த உடனேயே சேமிப்புக் கணக்கிலிருந்து அதற்குரிய தொகை பிடித்தம் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கும் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு கரன்சிகள் ஆர்பிஐ பிறப்பித்துள்ள வழிகாட்டுதலின்படி கரன்சிகளாக வழங்கப்படும். அந்தந்த நகரங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் இத்தகைய கரன்சிகளைப் பெறலாம்.

வாடிக்கையாளர் விரும்பினால் வெளிநாட்டு கரன்சி அதற்குரிய ஃபாரக்ஸ் கார்டில் லோட் செய்யப்பட்டும் தரப்படும். இதை வெளிநாடு செல்லும் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்தகைய வசதிகளை இந்தியாவில் உள்ள 85 உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகள் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்ற வரம்பை ஆர்பிஐ நிர்ணயிக்கும். ஒரு பரிவர்த்தனை குறைந்தபட்சம் 1,000 டாலராகவும் பிறகு 500 டாலரின் மடங்கிலும் வாங்க முடியும். வர்த்தகம் அன்றைய தினமே மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லது அடுத்த நாளுக்குள் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், வெளிநாட்டு கரன்சி தேவைப்படுவோருக்கு இது மிகச் சிறந்த ஏற்பாடாகும். தற்போது சிறு வர்த்தகர்கள் இத்தகைய வசதி கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

பெரிய நிறுவனங்களுக்கு அளிக்கும் அதே அளவு சலுகையை சிறிய நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு கரன்சி பரிவர்த்தனையில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் அன்றைய சந்தை மதிப்பிலேயே வெளிநாட்டு கரன்சியை வாங்க வழியேற்படும்.

- lokeshwarri.sk@thehindu.co.in

SCROLL FOR NEXT