வணிக வீதி

வேலைக்குப் பின் சேமிப்பை திட்டமிடுங்கள்!

பி.வெங்கட்ஷ்

இந்த கல்வியாண்டில் பல பட்டதாரிகள் பட்டம் பெற்று புதிய வேலைகளில் நுழைய தயாராயிருப்பீர்கள். புதிய வேலை, பல சவால்கள் ஆகியவற்றுக்கிடையே உங்களது சேமிப்பையும் நீங்கள் திட்டமிடவேண்டும். அடுத்த சில ஆண்டுகளுக்கு உங்களது சேமிப்பை திட்டமிட வழிகாட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

சிக்கனம் அவசியம்

பெரும்பாலும் உயர் கல்வி முடித்தவர்கள் வங்கியில் கல்விக் கடன் பெற்றுத்தான் படித்து முடித்திருப்பீர்கள். இதனால் மாதம்தோறும் நீங்கள் சம்பாதிக்கும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து கல்விக் கடனை திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும். கல்விக் கடனுக்கான வட்டியோ அல்லது நீங்கள் சேமிக்கும் முதலீட்டுக்குக் கிடைக்கும் வட்டி குறித்தோ ஆராய வேண்டிய நேரம் இதுவல்ல.

கல்விக் கடன் இருந்தால் அதை மாதம்தோறும் ஒருகுறிப்பிட்ட தொகையை செலுத்தி அடைப்பதற்கு முயலுங்கள். அல்லது ஒருகுறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த முற்படுங்கள்.

கடனை திரும்பச் செலுத்த முடிவு செய்தபிறகு நீங்கள் முதலில் அவசர கால நிதி ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த நிதியானது உங்களது எதிர்பாரா செலவுகளை ஈடுகட்ட உதவும். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு அல்லது வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட உதவும்.

இந்த நிதியானது குறைந்தபட்சம் உங்களது மாதாந்திர சம்பளத்தில் மூன்று மடங்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அவசர கால நிதியானது உங்களது வாழ்வியல் நடைமுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்குவதோடு உங்களது எதிர்கால திட்டமிடலுக்குப் பெரிதும் உதவும்.

இவ்விதம் உருவாக்கப்படும் அவசர கால நிதியானது எந்தச் சமயத்திலும் எடுக்கும்விதமாக இருக்க வேண்டும். முதலீட்டுக்கே நஷ்டம் ஏற்படும் முதலீட்டுத் திட்டங்களில் இந்த அவசர கால நிதியை முதலீடு செய்யக் கூடாது. இதற்காக உங்களது சேமிப்புக் கணக்கில் ஸ்வீப் அக்கவுண்ட் அதாவது நிரந்தர சேமிப்புத் தொகை கணக்கை உருவாக்குங்கள்.

மாதந்தோறும் இந்த கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யும்படி வங்கிக்கு அறிவுறுத்தலாம். ஒருமுறை இது தொடர்பான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் அளித்துவிட்டால் ஆட்டோமேடிக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் அந்த கணக்குக்கு பணம் சென்றுவிடும். இந்த அவசரகால நிதியை நீங்கள் வேலையில் சேர்ந்து முதல்ஆண்டு வரை தொடரலாம்.

இந்த நிதியை ஒதுக்கிய பிறகு உங்களிடம் கூடுதலாக தொகை இருப்பின் முதலீட்டு கணக்கை தொடங்கி அதை கடன் பத்திரங்கள், சம பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். இதற்காக பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. இதனால் தொடர் வைப்பு (ரெகரிங் டெபாசிட்) திட்டத்தில் கணிசமான வட்டி கிடைக்கும் வகையில் முதலீடு செய்யலாம். அல்லது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி-யில் முதலீடு செய்யலாம்.

நீங்கள் செய்யும் முதலீடு பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படும். இதனால் வங்கி வட்டியை விட கூடுதலான வருமானம் கிடைக்கும்.

இதுபோல எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்துவிட்டால், உங்களுக்கு அலுவலகத்தில் எப்படி ஆண்டுதோறும் ஊதிய உயர்வு கிடைக்கிறதோ அதைப் போல இந்தத் தொகையையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லலாம். முதலாண்டில் 10 சதவீதம் சேமித்தால் அடுத்த ஆண்டு இதை 15 சதவீதமாக உயர்த்தலாம்.

லாபம் தரும் முதலீடுகள்

ஆரம்ப நாட்களில் சொத்துகளில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் ஆரம்ப காலத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.

வேலை நிமித்தமாக வேறு நகரங்களுக்கு இடம்பெயரும் வாய்ப்புகள் உருவாகும். இதனால் ஆரம்ப காலங்களில் ரியல் எஸ்டேட் முதலீடு புத்திசாலித்தனமாக இருக்காது. அதேபோல தங்கத்தில் முதலீடும் பெருமளவு பயன்தராது.

அதனால் நீங்கள் எந்த நகருக்குச் சென்றாலும் முதலீட்டை தொடரும் வகையில் பரஸ்பர நிதி அல்லது தொடர் வைப்பு நிதி போன்றவற்றில் முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும். கடன் பத்திரங்கள், நிறுவன பங்கு பத்திரங்களாயிருப்பின் அதை எந்த நகருக்குச் சென்றாலும் உங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதை காசாக மாற்றிக் கொள்ளலாம்.

பிளஸ்டூ அதற்குப் பிறகு கல்லூரியில் நான்கு ஆண்டு படிப்பு என திட்டமிட்டு வேலையில் சேர்ந்த பிறகு பணம் சம்பாதிக்கிறோம் என்ற எண்ணத்தில் பல இளைஞர்கள் தேவையற்ற செலவுகளை செய்கின்றனர். ஒவ்வொரு செலவு செய்யும்போதும் அது உங்கள் உழைப்பில் கிடைத்தது என்பதை உணருங்கள். அதற்கேற்ப சேமிப்புக்கும் திட்டமிடுங்கள். வாழ்க்கை வளமானதாக அமையும்.

SCROLL FOR NEXT