வணிக வீதி

ஹைபிரிட் காரை களமிறக்கும் எம்ஜி ஹெக்டார்

செய்திப்பிரிவு

இந்தியச் சந்தைகளில் இன்னும் விற்பனைக்குத் தயாராகாவிட்டாலும், எம்ஜி ஹெக்டார் எஸ்யுவி ஏற்கெனவே கார் பிரியர்களிடையே பிரபலமாகிவிட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் மட்டுமே இதுவரை எம்ஜி ஹெக்டாரில் இருந்துவந்த நிலையில், தற்போது பெட்ரோல்- ஹைபிரிட்  கலவையில் ஒரு வெர்ஷனும் இந்தியாவுக்காகவே அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைபிரிட் கார்களுக்கான சந்தை  தற்போது வரை வேகமெடுக்கவில்லை. ஆனாலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஹைபிரிட் கார்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. எம்ஜி ஹெக்டாரின் தாய் நிறுவனமான எஸ்ஏஐசி எலெக்ட்ரிக் கார்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் தொடக்கம்தான் எம்ஜி ஹெக்டார் மாடலில் வரப்போகும் பெட்ரோல்-ஹைபிரிட் கலவை.

இந்த பெட்ரோல்-ஹைபிரிட் மாடலில் 48 வோல்ட் பவர் கொண்ட மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பயன்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது முழுமையான வலுவான ஹைபிரிட் காராக இல்லாமல், சற்று இலகுவான ஹைபிரிட் காராக இது இருக்கும். ஆனாலும், இதற்கே உரிய சில பலன்கள் கிடைக்கும்.

இந்த மாடலில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோ இன்ஜினுடன் இந்த 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் இணைக்கப்பட்டு உருவாக்கப்படும். இது குறைவான வேகத்திலும் கூட கூடுதலாக 20 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இந்த மாடலில் உள்ள ரீஜென்ரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், கைனட்டிக் எனர்ஜியைப் பயன்படுத்தி  48 வோல்ட் பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எம்ஜி ஹெக்டார் எஸ்யுவி இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த ஹைபிரிட் மாடலின் பிற விவரங்கள் தெரியவரும்.

SCROLL FOR NEXT