கோடைக் காலம் எனும் விடு முறைக் காலம் தொடங்கி விட்டதல்லவா? நண்பர் ஒருவர், சேலம் வெயிலி லிருந்து தப்பித்து ஓடி வந்து எங்கள் திருச்சி வெயிலில் மாட்டிக் கொண்டார்.
நண்பர் நல்லவர், பணிநி றைவு செய்தவர். வாழ்க்கையை நல்லபடியாய் ஓட்டப் போது மான ஓய்வூதியம் கிடைக்கிறது. மனைவியுடன் ஊர் ஊராய்ச் சுற்று வதே வேலை. மனிதர் எதையும் வெகு வாக ரசிப்பவர். உணவோ, உடையோ, இசையோ, சிற்பக்கலையோ எதுவாக இருந்தாலும் நிதானமாக ரசிப்பார்!
மனைவியும் அவரும் பேருந்தில் வரும் வழியில் ஓர் உணவு விடுதியில் தேநீர் அருந்தும் பொழுது தாங்கள் பணம் வைத்திருந்த பையைத் தொலைத்து விட்டார்களாம். பையைக் காணோம் என அவர்கள் கண்டுபிடித்ததே எங்கள் வீட்டிற்கு வந்த பின்புதான்.
பணம் எவ்வளவு இருந்தது எனக் கேட்டேன். ரூபாய் 910 எனக் கணக்காய்ச் சொன்னார். தவிர வங்கியின் ஒரு டெபிட் கார்டும் இருந்ததாம். ஆனால் அதன் விபரங்கள் கைபேசியில் இருந்த தால் உடனே வங்கியுடன் பேசி அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி உடனே தடுத்து விட்டார்!
அவ்வளவுதான். மனிதர் அதற்குப் பிறகு பணம் தொலைந்ததைப் பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. திருச்சியில் அடுத்தடுத்து பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டார். கோவில் என்றால் சும்மா சாமி கும்பிட வில்லை.
திருவானைக்கா கோவிலுக் குச் சென்றவர், அங்கு நந்தியைச் சுற்றி இருக்கும் நான்கு ஒற்றைக்கல் தூண் களை, அதில் உள்ள சிற்பங்களை, அவற் றின் நகை அழகுகளை, சிகை அலங் காரத்தை, நடுவில் மேலே தொங்கும் கருங்கல் சங்கிலியை என ஒவ்வொன் றாய் ரசித்தார் அவர்!
ரங்கநாதர் கோவில் சென்றவர், ஆயிரங்கால் மண்டபம், குதிரை வீரர்கள் சிலை, புலியைத் துளைக்கும் வீரனின் குத்துவாள் புலியின் உடம்பினுள் புகுந்து அதன் முனை வெளிப்பட்டு நிற்கும் அழகு, சிற்பியின் கலைத்திறன் என அணுஅணுவாய் ரசித்தார்.
தொலைந்து போன பணத்தைப் பற்றி பேச்சு எடுத்தாலே, நண்பர் ‘அதை விடுங்க. வந்த வேலையைப் பார்ப்போம்' என்று அவர் பாட்டுக்கு எதுவுமே நடக்காதது போலத் தன் வேலையில், அதாவது, நுணுக்கமாய் ரசிக்கும் வேலையில் இறங்கி விட்டார்!
அவர் மனைவியோ இதற்கு நேர் எதிர். ஒரே புலம்பல். பணம் போச்சே, நீங்கள் இப்படிச் செய்து இருக்கணும், நான் அப்படிச் செய்து இருக்கணும் எனக் கிளம்பிய நேரம் தொடங்கி, வந்த பேருந்து, உணவுவிடுதியில் உட்கார்ந்த இடம், சாப்பிட்ட தேநீர் என ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் குறை சொன்னார்! பணம் தொலைந்ததற்குக் காரணமாகக் காட்டினார்!
உண்மையைச் சொல்வதென்றால், அந்தப் பணஇழப்பு அவர் தாங்கக் கூடியது தான். அவரைப் பொறுத்தவரை, அவர்கள் இருவரின் நிம்மதி மகிழ்ச்சி என்பது இந்த 910 ரூபாயை விடப் பெரி யது. முக்கியமானது.
மேலும் நடந்து விட்டதை மாற்றவா முடியும்? இனி நடந்ததையே நினைத்துக் கவலைப் படுவதால் ஒரு பலனும் இல்லை. இந்த நிகழ்வினால் இனிமேல் எச்சரிக்கையாய் இருக்கலாம். அவ்வளவு தான்! அமெரிக்க நடிகை ஜெனிஃபர் அனிஸ் டன் சொல்வதைப் போல, வாழ்க்கையில் தவறுகள் என்று எதுவும் இல்லை; அவை எல்லாமே படிப்பினைகள் தானே?
இந்தப் பணம் தொலைத்த கதையை விடுங்கள். நம்மில் பலருக்கும் அடிக்கடி நடந்து போனவற்றை, நடந்து முடிந்த வற்றை நினைத்து நினைத்து வருத்தப்படும் பிணி பீடித்து விடுகிறது.
என்றோ விற்ற வீட்டை நினைத் துப் பார்ப்பது, வாங்கத் தவறிய டிசிஎஸ் பங்குகளை நினைத்து வருத்தப்படுவது, ஏற்க மறுத்து விட்ட பதவி உயர்வை நினைத்து ஏங்குவது என வாழும் நாட் களை தேவையில்லாமல் நரகமாக்கிக் கொள்பவர்கள் பலர்! ஆங்கிலேயப் பாடகர் மிக் ஜாகர் கேட்பது போல, ‘நாம் கடந்த காலத்தின் கைதிகளாக இருக்கலாமோ?’
உளவியலில் இதை ‘ஏற்றுக் கொள்ளுதல்’ (Acceptance) என் கிறார்களாம். அதாவது இப்படி நடந்து விட்டதே, நமக்கு மட்டும் இப்படியெல் லாம் ஏன் நடக்கிறது என்று கவலைப்படாமல் ஆத்திரப் படாமல் நடந்ததை நடந்தவாறு ஏற்றுக் கொள்வது.
யார் யாரையோ மன்னிக்கிறோமே, நாம் நம்மையும் மன்னித்துக் கொள்ளக் கூடாதா? நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப் படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதி யது போல, நடந்ததையே நினைத்திருந் தால் அமைதி என்றுமில்லை!
பல புதிய கண்டுபிடிப்புக்களுக்குப் பெயர் பெற்றவர் தாமஸ் ஆல்வா எடிஸன். ஒரு முறை அவரது சோதனைச் சாலை தீக்கிரையாகியதாம். பல வருட உழைப்பு வீணான போதும் அவர், ‘எனது தவறுகள் எல்லாம் இன்று எரிக்கப்பட்டு விட்டன' என வேடிக்கையாய்ச் சொல்லி விட்டு அடுத்த பரி சோதனையில் இறங்கிவிட்டாராம்!
‘எவர் ஒருவர் தான் வீண டித்த நேரத்தை எண்ணியும், எடுத்த முடிவுகளை நினைத்தும் வருத்தப்படுகிறாரோ அவர் வாழ் க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்' என்கிறார் சாணக்கியர்!
உண்மை தானே? நமது மூளை யின் செயல்திறனை, நேரத்தை ஆக்கபூர்வமாக அடுத்து என்ன செய்யலாம் என்பதில் செலவழிக் காமல் பழசையே நினைத்து வீணடிக் கலாமோ?
-somaiah.veerappan@gmail.com