வணிக வீதி

புதுப்பொலிவுடன் வரப்போகும் போர்ஷே 911

செய்திப்பிரிவு

போர்ஷே நிறுவனத்தின் மிகப் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் 911. இந்த கூபே ஸ்போர்ட்ஸ் காரின் வடிவமைப்புக்கே இந்தக் காரின் மீது காதலில் விழுவார்கள் கார் பிரியர்கள். தற்போது, இந்த 911 காரின் எட்டாம் தலைமுறை மாடல்கள் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தியாவில் கரேரா எஸ் மற்றும் கரேரா 4எஸ் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்தப் புதிய போர்ஷே 911 மாடல்கள், முந்தைய மாடல்களை விட அதிகப் பவரை வெளிப்படுத்தக்கூடியதும் மற்றும் கூடுதல் அம்சங்கள் கொண்டதுமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவிலும் சற்றுப் பெரிதாக இந்தப் புதிய மாடல்கள் இருக்கும் எனத் தெரிகிறது.

இதில் 3.0 லிட்டர் பிளாட் சிக்ஸ் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 450 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இது 30 ஹெச்பி கூடுதல் ஆற்றலாகும். 100 கிமீ வேகத்தை கரேரா எஸ் 3.7 விநாடிகளிலும், கரேரா 4எஸ் 3.6 விநாடிகளிலும் அடைந்துவிடும் அளவுக்கு பெர்பாமென்ஸ் தூள் கிளப்புகிறது.

இதில் குரோனோ பேக்கேஜ் ஸ்போர்ட்ஸ் காரில் 100 கிமீ வேகத்தை அடையும் கால அளவை மேலும் 0.2 விநாடிகளைக் குறைத்துவிடுகிறது.

இந்தக் காரில் கூடுதலாக லான்ச் கன்ட்ரோல் மற்றும் மேப்பிங் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதால், 8 ஆட்டோமேட்டிக் கியர்களை மாற்றுவது மிக சுலபமாகவும் விரைவாகவும் நடக்கிறது. கரேரா எஸ் அதிகபட்சமாக 307 கிமீ வேகத்திலும், கரேரா 4எஸ் அதிகபட்சமாக 305 கிமீ வேகத்திலும் செல்லும் எனக் கூறப்படுகிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை முந்தைய மாடல்களிலிருந்து பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், மேலும் அழகுப்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்திலும் தனித்துவமான வடிவமைப்பு மொழியை போர்ஷே நிறுவனம் இந்த மாடல்களில் பயன்படுத்தியுள்ளது. ஹேண்ட்லிங் மற்றும், இடவசதி ஆகியவற்றுக்கு எந்த வகையிலும் குறைவோ சிரமமோ இல்லை.

இந்தப் புதிய போர்ஷே 911, ஆடி ஆர்8, மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி, ஜாகுவார் எஃப்-டைப் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SCROLL FOR NEXT