மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம். அன்றைய தினம் மட்டும் ஏதோ நினைவுக்கு வந்தது போல் மகளிரை போற்றும் பல்வேறு நிகழ்வுகளும், கூகுள் டூடுளில் பல நாட்டு அறிஞர்கள் பெண்களை போற்றி கூறிய வாசகங்களைப் படித்துவிட்டு பகிர்வதுமாக செவ்வனே கடமையை முடித்துவிட்டு கடந்துவிடுகிறோம்.
ஏனெனில், நம்மில் பலரும், பெண்களுக்குத்தான் அதிகபட்ச சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று நினைக்கிறோம். உயர் பதவிக்கு வரும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் ஆண்களுக்கு இன்றளவும் இருக்கவில்லை என்பதுதான் யதார்த்த நிலை.
சர்வதேச அளவோடு ஒப்பிடுகையில் இன்னமும் பல துறைகளில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதுதான் புள்ளி விவரங்கள் உணர்த்தும் தகவலாகும். துறைவாரியாக பார்த்தோமானால் சுகாதாரத்துறையில் சர்வதேச அளவில் பெண்களின் பங்களிப்பு 60 சதவீதம் எனில் இந்தியாவில் இது 48 சதவீதமாக உள்ளது.
கல்வித் துறையில் சர்வதேச மகளிரின் பங்களிப்பு 55 சதவீதம் எனில் இந்தியப் பெண்களின் பங்கு 49 சதவீதமே. சுற்றுலாத் துறையில் சர்வதேச அளவில் பெண்களின் பங்கு 43 சதவீதம். ஆனால் இந்தியாவில் இது வெறும் 16 சதவீதம்தான்.
உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் 33 சதவீதமாக உள்ள பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் 18 சதவீதமாக சரிந்துவிட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 22 சதவீதமாக உள்ள சர்வதேச மகளிரின் பங்கு இந்தியாவில் 8 சதவீத அளவுக்கே உள்ளது. நிதித் துறையில் சர்வதேச அளவில் பெண்களின் பங்கு 39 சதவீதம்.
இந்தியாவில் இது ஓரளவு சொல்லிக்கொள்ளும் வகையில் 31 சதவீத அளவுக்கு உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அயல் பணி ஒப்படைப்பு சார்ந்த பணிகளில் சர்வதேச மகளிரின் பங்கு 34 சதவீதம். இந்தியாவில் இத்துறையில் அதிக மகளிர் வந்துள்ளது போல் தோன்றினாலும் அதுவும் 25 சதவீத அளவுக்கே உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது உழைக்கும் மகளிரின் பங்கு 28 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் பாலின பேதம் குறித்து நோபல் அறிஞரும் பொருளாதார மேதையுமான அமர்தியா சென், சங்கர் சுப்ரமணியன், நீதிபதி ஜகதீஷ் பகவதி, ஆனந்த் சென் உள்ளிட்டோர் அனைவரும் தாக்கல் செய்த ஆய்வறிக்கை, விசாரணை அறிக்கையில் இந்தியாவில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் வெளியிடங்களுக்கு சென்று வருவதில் போதிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை என்பது புலனாகியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு அதற்குரிய வாய்ப்பும் வசதிகளும் செய்து தரப்படுவதில்லை என்றும், அவை மறுக்கப்படுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது. பெண்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு சட்டமே உள்ளது.
இது பெண்களுக்கான உரிமை என்றும் அதை மறுப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்திய தண்டனையியல் சட்ட பிரிவு 15 (4) சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், கேரளம், பிஹார், தலைநகர் டெல்லி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான போக்குவரத்து வசதிகள் சரிவர இல்லை என்றும், பாலின பேதம் காட்டப்படுவதாகவும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 11,800 அடி மேலே லடாக் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் நிரப்பும் மையத்தில் 10 பெண்கள் பணி புரிவது குறித்து சந்தோஷப்படும் நாம், நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் போக்குவரத்து சவுகர்யமாக உள்ளதா என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா. அப்படி நினைத்தோமானால் ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமல்ல, எல்லா நாளுமே மகளிருக்கு மகிழ்ச்சியான தினம்தான்.