வணிக வீதி

மது அருந்தியிருந்தால் ஸ்டார்ட் ஆகாது: வோல்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை கார்கள்

செய்திப்பிரிவு

உலகெங்கிலும் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்கும் முனைப்பில் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்பாராமல் நிகழும் விபத்துகளில் பயணிகளைக் காக்க ஏர் பேக், சீட் பெல்ட் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டாலும், கார் ஓட்டுவோரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு செயல்படும் கார்களும் இனி வர உள்ளன. ஸ்வீடனின் வோல்வோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கார்களை மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாக உருவாக்கி வருகின்றன.

தங்கள் நிறுவன கார்கள், எஸ்யுவிக்கள் எதுவும் சாலை விபத்தில் சிக்காதவையாகவும், விபத்து ஏற்படுத்தாதவையாகவும் இருக்க வேண்டும்  என்பதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.

தங்கள் வாடிக்கையாளர்கள் உயிரிழப்போ அல்லது கடுமையான காயங்களோ சந்திக்கக் கூடாது என்பதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கமாகவும் இருக்கிறது. அடுத்த தலைமுறை கார்கள் அனைத்திலும் டிரைவர் கண்காணிப்பு கருவியை பொருத்த நிறுவனம் முடிவு செய்

துள்ளது. காரினுள் கேமிராக்களை பொருத்துவது பிரைவசியை பாதிக்கும் என்று கூறப்பட்டாலும் பாதுகாப்பு கருதி இவை அவசியம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கேமிராவானது டிரைவர் கண் பார்வை சாலையை விட்டு அடிக்கடி விலகினாலோ, கண் சொருகினாலோ உடனடியாக எச்சரிக்கை செய்யும். அதற்கும் சரியான பதில் டிரைவர் அளிக்காமல் கார் செல்லும்போது, தானாகவே காரை பாதுகாப்பாக நிறுத்திவிடும். இந்த கேமிராவின் செயல்பாடானது டிரைவரின் கவனக் குறைவு, ஆக்சிலேட்டரை செலுத்தும் விதம், ஸ்டீரிங்கை பிடித்திருப்பது போன்றவற்றின் மூலம் அளவிடப்படும். பிறகு கார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உடனடியாக வோல்வோ நிறுவன அழைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பிவிடும்.

வோல்வோ நிறுவனம் பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறது. இதற்கு இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக சாலை விபத்துகள் குறித்த ஆராய்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் கார் உற்பத்தியைத் தொடங்கி 60 ஆண்டுகள் ஆன போதிலும் கடந்த 40 ஆண்டுக்காலத்தில் நிகழ்ந்த 43 ஆயிரம் கார் விபத்துகள் இதில் சிக்கிய 72 ஆயிரம் பேர் குறித்த விவரத்தை தொகுப்பாக வைத்துள்ளது.

volvo-3jpg

விபத்தின் தன்மை அடிப்படையில் பாதுகாப்பான கார்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது தவிர `கேர் கீ’ எனப்படும் பாதுகாப்பான பயணத்துக்கு வேகக் கட்டுப்பாட்டு சாவியை உருவாக்கியுள்ளது. இதன்படி வாகன உரிமையாளர் காரில் செல்ல வேண்டிய அதிகபட்ச வேகத்தை நிர்ணயம் செய்யலாம். வோல்வோ நிறுவனத்தைப் பின் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இதைப்போன்று கார்களை தயாரித்தால் சாலை விபத்துகள் நிச்சயம் குறையும் என்று நம்பலாம்.

SCROLL FOR NEXT