வணிக வீதி

அலசல்: பயன் தராத புள்ளி விவரங்கள்!

செய்திப்பிரிவு

அரசு தரப்பிலிருந்து அவ்வப்போது துறைகள் ரீதியிலான, பொருளாதாரம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். அதில் புள்ளிவிவரங்களும் இருக்கும். ஆனால், அவைதான் நிஜமான புள்ளிவிவரங்களா என்றால், இல்லை. அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் மேலோட்டமான வையாகவே உள்ளன.

குறிப்பாக வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டால் இபிஎஃப்ஓ அளிக்கும் விவரங்களை வைத்து, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளைக் கணக்கிடுகிறது அரசு. ஆனால், அது உண்மையான வேலைவாய்ப்பு உருவாக்க புள்ளிவிவரமே அல்ல. அதையும் தாண்டி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் முறைப்படுத்தப்படாத துறைகளில் ஒளிந்திருக்கின்றன.

காரணம், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் முறைப்படுத்தாத துறைகளின் பொருளாதாரம் என்பது முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்கும் மிகுதியானதாக இருக்கிறது. ஆனால், அவை கணக்கில் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாராமாக இருப்பது முறைப்படுத்தப்படாத துறைகள்தான். இவற்றில் முறைப்படுத்தப்பட்ட துறைகளைக் காட்டிலும் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து நம்மிடம் உண்மையான புள்ளிவிவரங்கள் இல்லை என நிதி ஆயோக் உறுப்பினரும் பிரதமரின் அலுவலக ஆலோசகருமான பிபெக் தேப்ராய் கூறியுள்ளார். வேலைவாய்ப்பிலும் சரி, பணப்புழக்கத்திலும் சரி முறைப்படுத்தப்படாத துறை மிகப்பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.

முத்ரா கடன் திட்டம், சுய உதவிக் குழுக்கள், கட்டுமான துறை, கிராமப்புற சாலைகள் அமைப்பு உள்ளிட்ட சில பிரிவுகளை மட்டும் ஆராய்ந்தாலே முறைப்படுத்தப்படாத பிரிவுகளில் எந்த அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் அறிந்துகொள்ள முடியும் என்கிறார்.

சுய உதவிக்குழுக்களால் 10 முதல் 20 குடும்பங்கள் பலனடைகின்றன. முத்ரா கடன் திட்டங்களால் தொழில்முனைவோர்கள் உருவாகிறார்கள். அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்பு கணக்கில் வருவதே இல்லை. கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பு என்பது நிரந்தர வேலைவாய்ப்பாக இருக்கும்போதும் அதுவும் கணக்கில் வருவதில்லை. எனவே, இந்தியாவில் புள்ளிவிவரங்கள் சரியாக கணக்கிடப்படாததுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளிவிவரங்கள் சரியாகக் கணக்கிடப்படாததால், மக்கள் நலத் திட்டங்கள் சரியான பயனாளரைச் சென்று சேர்வதில்லை. ஊழலுக்கும் இதுவே வழிவகுக்கிறது. உதாரணமாக, விவசாயத்தையே எடுத்துக்கொள்ளலாம். இந்தியா ஒரு விவசாய நாடு.

ஆனால், விவசாய நிலங்கள் குறித்தோ, விவசாயிகள் குறித்தோ எந்தவொரு உண்மையான புள்ளிவிவரத்தையும் அரசு சேகரித்து வைக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளால் யார் யாரோ பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததால் இயற்கை சீற்றங்களின்போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான இழப்பீட்டை அரசால் தர முடிவதில்லை. இப்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் புள்ளிவிவரங்களைக் கணக்கிடுவது என்பது அவ்வளவு பெரிய வேலையே இல்லை.

எளிதில் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கலாம். நேற்றைய நிலை இன்று இருப்பதில்லை. அப்படி இருக்கும்போது, ஒருமுறை எடுக்கும் சென்செக்ஸ் சர்வே புள்ளிவிவரங்களை வைத்து பத்தாண்டுகளைக் கையாள்வது என்பது சரியான முறைதானா? சரியான புள்ளிவிவரங்களை எப்போது அரசு கணக்கிடும்?

SCROLL FOR NEXT