சுஸுகி நிறுவனம் இளைஞர்களை வெகுவாகக் கவரக்கூடிய சாகசப் பயணத்துக்கேற்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது டிஆர் இஸட்50 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2.55 லட்சமாகும். இந்த மினி மோட்டார் சைக்கிள் 49 சிசி திறன் கொண்டது. ஆனால், தட்டினால் சீறிப் பாயும் திறன் கொண்டது.
ஸ்போர்ட் மோட்டார் சைக்கிளில் இது ஆரம்ப நிலை மாடலாகும். இது ஒற்றை சிலிண்டர், நான்கு ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டுள்ளது. ஆட்டோமேட்டிக் கிளட்ச் வசதியோடு 3 கியர்களைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற ஷாக் அப்சார்பர் வித்தியாசமாக உள்ளது.
அடிப்பகுதியில் ஸ்பிரிங் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. இதன் எடை 54 கிலோவாகும். இது ஒரே வண்ணம் அதாவது மஞ்சள் நிறத்தில் மட்டும் இப்போது வெளிவந்துள்ளது.
டர்ட் பைக் எனப்படும் சாகச பயணத்துக்கான மோட்டார் சைக்கிளைப் பொருத்தமட்டில் ஏற்கெனவே கவாஸகி நிறுவனம் கேஎல்எக்ஸ் 110 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது சுஸுகியைவிட சற்று பெரியது. இன்ஜின் திறனும் கூடுதலாகும். விலை ரூ. 2.99 லட்சம். தற்போது இதற்குப் போட்டியாக சுஸுகி நிறுவனமும் டர்ட் மோட்டார் சைக்கிளை களமிறக்கியுள்ளது.