அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் எரிக் பியூல் தனது குழுவினர்களான பிரடெரிக் வாஸெர், பிரான்கோயிஸ் சேவியர் டெர்னி ஆகியோருடன் இணைந்து பேட்டரி மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளார். நகர்புறங்களில் எளிய போக்குவரத்துக்கு வழிவகுப்பதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆல்ஃபா ரோமியோ பார்முலா 1 அணியில் இடம்பெற்றிருந்தவர் வாஸெர். இவர் உருவாக்கியதுதான் ஸ்பார்க் ரேசிங் டெக்னாலஜி நிறுவனம். இந்நிறுவனம் பேட்டரி வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. சேவியர் டெர்னி ஒரு தொழில்முனைவோராவார்.
இவர் வெல்ட் ஹெல்மெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். இந்நிறுவனம் வான்குவார்ட் மோட்டார் இன்கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.
தங்களிடம் உள்ள நிபுணத்துவத்தைக் கொண்டும், தங்கள் சகாக்களின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று பேட்டரி வாகனங்களை உருவாக்கியுள்ளனர். புளோ மற்றும் புளுயிட் என இரண்டு வகையான பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை இவர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் புளோ மோட்டார் சைக்கிளானது 150 சிசி முதல் 200 சிசி திறன் கொண்டதாக இருக்கும். மற்றொரு மாடலான புளூயிட் 350 சிசி முதல் 400 சிசி திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின் சக்கர சுழற்சிக்கு செயின் அல்லது பெல்ட் போன்றவற்றை இவர்கள் முற்றிலுமாக தவிர்த்துள்ளனர். ஆனாலும் இந்த வாகனத்தில் கழற்றி சார்ஜ் ஏற்றும் வகையிலான பேட்டரிகள் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். இவை இரண்டுமே ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
புளோ மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 7.69 லட்சமாகவும், புளூயிட் விலை ரூ. 2.30 லட்சமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த மோட்டார் சைக்கிள் படிப்படியாக பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.