முன்பெல்லாம் கார் பிரியர்கள் ஹேட்ச்பேக் கார் களையே விரும்பினர். இதற்கு எஸ்யுவி இப்போது இருக்கும் அளவுக்கு அப்போது அழகாக இல்லை என்பது ஒரு காரணம். எஸ்யுவி என்றாலே அப்போதெல்லாம் கம்பீரம் மட்டும்தான். ஆனால், இப்போது இந்தியாவில் எஸ்யுவி சந்தை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
காரணம், அழகும் கம்பீரமும், இடவசதியும் கார் பிரியர்களை ஈர்த்திருக்கிறது. சமீபகாலங்களில் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் அதிகமாக எஸ்யுவிகள் தான் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன.
தற்போது ஹுண்டாய் நிறுவனம் புதிதாக ஒரு எஸ்யுவி மாடலைச் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இந்த எஸ்யுவிக்கு ஹுண்டாய் கியூஎக்ஸ்ஐ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த ஹுண்டாய் கியூஎக்ஸ்ஐ எஸ்யுவி மாடல் ஸ்போர்ட்டி வடிவமைப்புக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் ஹுண்டாய் கோனா, புதிய சாண்ட்ஃபீ ஆகிய மாடல்களில் உள்ள ஸ்பிலிட் டிஆரெல்-ஹெட்லேம்ப் உள்ளது. மேலும் இதன் கேஸ்கேடிங் கிரில் எப்போதும்போல் அட்டகாசம். பக்கவாட்டு பகுதிகளில் கியூஎக்ஸ்ஐ மாடலுக்கும் கிரெடா மாடலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
இதில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் இந்த எஸ்யுவி பிரிவில் இதுவரை இல்லாத அம்சங்களை இந்த மாடலில் முதன்முறையாகப் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 17, நியூயார்க் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த எஸ்யுவி மாடல் குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.