வணிக வீதி

உபெர் ஈட்ஸை விழுங்கப் போவது யார்?

செய்திப்பிரிவு

உங்களுக்குப் பசித்தால் அல்லது ஹோட்டலுக்குப் போக நேரம் இல்லாத சூழலில், நீங்கள் இருக்கும் இடத்துக்கே நீங்கள் விரும்பும் உணவு கிடைக்கும். அதற்குத்தான் உபெர் ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமாட்டோ போன்ற மொபைல் ஆப் மூலம் உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனங்கள் உள்ளன.

அலுவலகம் மட்டுமல்ல வீடுகளுக்கும் நீங்கள் விரும்பும் உணவு அதுவும் நீங்கள் சாப்பிட நினைத்த ஹோட்டலில் இருந்து வந்து சேர்ந்துவிடும்.  ஆனால், இந்த நிறுவனங்களுக்கே பசி ஏற்பட்டால், ஒன்றை ஒன்று விழுங்கத்தான் வேண்டும். அதுதான் இப்போது ஏற்பட்டுள்ளது.

செயலி மூலம் வாடகைக் கார்களை இயக்குவதில் சர்வதேச அளவில் பிரபலமானது உபெர். சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உபெர் ஈட்ஸ் என்ற பெயரில் உணவுகளை டெலிவரி செய்யும் பிரிவை இந்தியாவில் தொடங்கி 37 நகரங்களில் செயல்படுத்தி வருகிறது.

பொதுவாக இதுபோன்ற செயலி மூலமான சேவை நிறுவனங்கள் உடனடியாக லாபம் ஈட்ட முடியாது. இது சர்வதேச அளவில் வாடகைக் கார்களை செயலி மூலம் செயல்படுத்தும் உபெர் நிறுவனத்துக்கும் தெரிந்துதானிருக்கும். ஆனாலும் அதிகரித்துவரும் கடன் சுமையைக் குறைக்க இந்தியாவில் உள்ள தனது உபெர் ஈட்ஸ் பிரிவை விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்விக்கி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸொமாடோ உள்ளது. இது தவிர உபெர் ஈட்ஸ் நிறுவனமும் ஃபுட் பாண்டா நிறுவனமும் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ளன.

உபெர் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பாக கடன் சுமைகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது. ஏற்கெனவே 3 கட்டங்களாக 130 கோடி டாலர் நிதி திரட்டியுள்ள ஸ்விக்கி நிறுவனம் உபெர் ஈட்ஸை வாங்குவதில் தீவிரமாக உள்ளது.

இந்தியாவில் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அதன் விற்பனை வருமானத்தில் மூன்று மடங்காகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி அதன் மதிப்பு 50 கோடி டாலராகும். தினசரி 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் டெலிவரிகளை உபெர் ஈட்ஸ் மேற்கொள்கிறது. ஆனால் இதைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு வரையிலான டெலிவரிகளை ஸ்விக்கி மற்றும் ஸொமாடோ மேற்கொள்கின்றன.

நிறுவனத்தை விற்று அதற்குப் பதிலாக ஸ்விக்கி அல்லது ஸொமட்டோ நிறுவன பங்குகளை வாங்க உபெர் திட்டமிட்டுள்ளது. வாடகைக் கார் செயல்பாட்டில் உபெர் நிறுவனத்துக்குப் போட்டியாக ஓலா உள்ளது. ஓலா நிறுவனம் ஃபுட் பாண்டா நிறுவனத்தை வாங்கிச் செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்தே இந்தியாவில் உபெர் ஈட்ஸ் பிரிவை தொடங்கியது. ஆனால் நஷ்டத்தை ஏற்படுத்தும் தனது உபெர் ஈட்ஸ் பிரிவை விற்க முடிவு செய்துள்ளது. உபெர் நிறுவனம் 180 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாதத்துக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனம் 1.5 கோடி டாலர் முதல் 2 கோடி டாலர் வரை நஷ்டத்தை சந்திக்கிறது.

இதேபோல ஸொமாட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களும் மாதம் 3 கோடி டாலர் முதல் 4 கோடி டாலர் வரை நஷ்டத்தை சந்திக்கின்றன. சந்தையில் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள இரு நிறுவனங்களுமே உபெர் ஈட்ஸை வாங்க தீவிரம் காட்டுகின்றன.

உங்களது பசியை போக்கும் நிறுவனங்கள் கொலை பட்டினியில் (நஷ்டத்தில்) இருக்கின்றன. `வலிமை உள்ளதுதான் எஞ்சும்’ என்றாலும், வலிமையே இல்லாமல் எவ்வளவு நாள்தான் தாக்குப்பிடிப்பார்கள் என்று பார்க்கலாமே!

SCROLL FOR NEXT