வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: எதிர்பார்க்காததை... எதிர்கொள்ளணும்!

சோம.வீரப்பன்

ஆங்கிலத்தில் பிளான்  பி (plan B) என்பார்களே, கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? எனது நண்பர் ஒருவர் தனது பேச்சில் அடிக்கடி இப்படிக் குறிப்பிடுவார்.

அந்த நண்பர் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் சம்பளப் பட்டுவாடா துறையில் இருப்பவர். சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா என 15 நாடுகளில் உள்ள சுமார் 50,000 பேர்களுக்கு மாதா மாதம் பல நூறு கோடி ரூபாய் சம்பளமும், அது தவிர பயணப்படி, ஊக்கத் தொகை என மற்றவற்றையும்  பட்டுவாடா செய்ய வேண்டியவர்.

சில காலம்  முன்பு, அந்த நிறுவனத்தை, வேறு ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டதாம். அதனால் நண்பர் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள கணிணிகளின் நடைமுறைகளை, அதாங்க அதன் மின்பொருள்களை, அந்தப் புதிய நிறுவனத்தின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டியதாயிற்றாம்.

உங்களுக்குத் தெரிந்தது தானே இது. அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஒரு பக்கம் வழக்கமான வேலைகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். மறுபக்கம் புதிய கணிணி நடைமுறைகளுக்கு மாற வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளில் பொத்தானைத் தட்டியவுடன் புதிய மின்பொருளின் வழியில் எல்லாம் மாறி இருக்க வேண்டும்.

நண்பரும் அவரது குழுவினரும் இந்த வேலையில் மிகக் கவனமாக, மிகச் சுறுசுறுப்பாக இயங்கினார்களாம். எல்லாம் சரியாக நடப்பது போலவே தெரிந்ததாம். ஆறு மாதங்கள் ஓயாது உழைத்தார்களாம். பின்னர் ஒரு நல்ல நாள் பார்த்து கணிணிகள் புதிய மின்பொருளுக்கு மாறுவதற்கான ஆணையைக் கொடுத்தார்களாம். ஆனால் நடந்தது என்ன?

லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய பலருக்கு பத்து லட்சம் எனக் காட்டியதாம். இரண்டு லட்சம் வாங்கிய சிலருக்கு ஐம்பதாயிரம் எனவும் காட்டியதாம். அத்துடன் தரவுகள், செயல்முறை (data, function) என இரண்டிலும் குளறுபடி!

அடடா, இப்படி ஏமாற்றி விட்டதே எனப் பயந்துவிட்டனர் நண்பரும் அவரது குழுவினரும்! சரி, புதியது வேலை பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, பழையதை வைத்து முதலில் வேலையை முடிப்போம் என்று அதை ஓட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் ஓடவில்லை! அதுமட்டுமில்லை. கணிணியில் இருந்த பல  விபரங்கள் மாறிவிட்டிருந்தன!

குழுவினருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. முகமெல்லாம் வியர்வை. பலருக்குத் தொண்டை அடைத்து மயக்கமே வந்து விட்டது! இருக்காதா பின்னே? அந்த மாதம் யாருக்கும் சம்பளம் கொடுக்க முடியாது. அடுத்து வரும் மாதங்களிலும் சம்பளம், ஊக்கத் தொகை எதுவும்  கணக்கிட முடியாது.

அது மட்டுமா? பணியாளர்கள் சம்பளத்தை எதிர்பார்த்து, வங்கிகள் தாங்கள் கொடுத்த வீட்டுக்கடன் (EMI) கடன் அட்டை (credit card) போன்றவற்றிற்குப் பணம் அனுப்பச் சொல்லி இருப்பார்கள். ஆனால், அவையெல்லாம்  அவர்கள் கணக்கில் பணமின்மையால் நிறுத்தப்பட்டுவிடும்! பணி  நியமன கடிதப்படி குறிப்பிட்ட தேதிக்குள் சம்

பளம் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிடின் சட்டப் பிரச்சினைகளும் எழலாம். மொத்தத்தில் பெரும் குழப்பம், தலைவலி.

ஆனால், நண்பர் அசரவில்லை. அமைதியாக இப்பொழுது ‘பிளான் பி' என்று கட்டளை இட்டிருக்கிறார். ஆமாம், அவர் அதற்கான மாற்றுத் திட்டத்தை வைத்து இருந்திருக்கிறார். இது மாதிரி நடந்து விட்டால் என்ன செய்வதென்று தம் கணிணியில் இருந்த விபரங்களை வேறு ஒரு இடத்தில் படிவம் எடுத்து (excel) வைத்திருந்தார். அதற்கென்று அமைக்கப்பட்டிருந்த குழு உடனே  வேலையில் இறங்கி எல்லாம் படிப்படியாய் சரி  செய்யப்பட்டனவாம்.

`காரியத்தை முடிப்பதில் தான் கவனமாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கான செயல்திட்டத்தை மாற்ற நேரிட்டால் கவலை படக் கூடாது ' என கனடியப் பாடகி கெஷியா சொல்வது சரி தானே?

ஐயா, வங்கிகளிலும் இப்படித்தான். வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் ஒரு கணிணியில் (server) மட்டும் இருக்காது. அவற்றின் பிரதி (back up) வேறு ஒரு ஊரில், சில சமயம் வேறு ஓரு நாட்டில் கூட  உள்ள மாற்றுக் கணிணியில் (back up server) அவ்வப்போது சேமித்து வைக்கப்படும். எனவே மூல கணிணி இருக்குமிடத்தில் வெள்ளமோ, தீயோ, பூகம்பமோ வந்தாலும் மாற்றுக் கணிணி மூலம் வங்கியின் வழக்கமான செயல்பாடு பாதிக்கப் படாமல் பார்த்துக் கொள்வார்கள்.

‘நமது வெற்றியை அதிகம் தீர்மானிப்பது, நாம் நமது திட்டத்தை எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்துகிறோம் என்பதைக் காட்டிலும், நாம் மாற்றுத் திட்டத்தை எவ்வளவு லாவகமாகக் கையாள்கிறோம் என்பது தான்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் சாரா பான்!

அண்ணே, வீடு வாங்க வேண்டுமா? ஒன்று கிடைக்காதென்றால் அடுத்ததைப் பார்க்கணும். பெண்ணிற்குக் கல்யாணமா ? எதிர்பார்த்த மாப்பிள்ளை அமையா விட்டால் வேறு ஒருத்தரை தேர்வு செய்யணும். படிப்பிற்கு கல்லூரித் தேர்வு, சுற்றுலா செல்லும் ஊர் என எதிலும் இந்த அணுகு முறை உதவுமல்லவா?

இதைத்தான் சாணக்கியரும் இப்படிச் சொல்கிறார். ‘ஒரு முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அதனை வெற்றிகரமாக முடிப்பதற்கான   திட்டத்துடன் அதற்கான மாற்றுத் திட்டத்தையும்   தயாராக வைத்துக் கொள்ளுங்கள்' என்ன, சரி தானே?

- somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT