பஜாஜ் டொமினார் 400 பைக்கின் விளம்பரமே அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. ராயல் என்ஃபீல்டுக்குப் போட்டியாகக் களமிறங்கிய பஜாஜ் டொமினார் 400 விளம்பரத்திலும்கூட ராயல் என்ஃபீல்டை கிண்டல் செய்தது. ஆனால், விற்பனையில் ராயல் என்ஃபீல்டை அசைக்கக்கூட முடியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்குகள் 10,81,476 யூனிட்டுகள் விற்றுள்ளன. ஆனால், பஜாஜ் டொமினார் 400 விற்பனை இரண்டு ஆண்டுகளில் வெறும் 36,458 மட்டுமே.
இந்த நிலையில் சந்தையில் தனது விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் பஜாஜ் டொமினார் 400 பைக்கின் திறனை அதிகப்படுத்தி இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது சந்தையில் உள்ள டொமினார் 400 பைக்கின் 373.3 சிசி இன்ஜின் 35 ஹெச்பி, 8000 ஆர்பிஎம் பவர் கொண்டது. புதிதாக வரவுள்ள டொமினார் 400 பைக்கில் இதன் பவரானது 39.9 ஹெச்பி மற்றும் 8650 ஆர்பிஎம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய டொமினார் 400 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனால், இன்னமும் ராயல் என்ஃபீல்டும், டியூக் பைக்கும்தான் இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. அதிக பவருடன் வரும் புதிய டொமினார் 400 எத்தனை இளைஞர்களின் மனநிலையை மாற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.