வணிக வீதி

உங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி கிடைக்க…

செய்திப்பிரிவு

உங்களது நிரந்தர சேமிப்புக்கு அதிகபட்ச வட்டி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயல்புதான். பொதுத்துறை வங்கிகளில் நிரந்தர சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை விட கூடுதலான வட்டியை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் (எஸ்எப்பி) அளிக்கின்றன. இவை அளிக்கும் வட்டி விகிதத்துக்கு இணையாகவோ அல்லது சற்று கூடுதலாகவோ வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) அளிக்கும்.

ஆனால் என்பிஎப்சி-க்களில் முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் அந்தப் பிரச்சினை சிறிய வங்கிகளில் கிடையாது. மேலும் தற்போது என்பிஎப்சி-க்கள் மிகப் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. அந்த வகையில் பார்க்கும் போது சிறிய வங்கிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு பாதுகாப்பானது, பத்திரமானதும்கூட.

சிறிய வங்கிகள் பெரும்பாலும் சிறிய வணிகக் குழுக்கள், சிறு விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. மேலும் முன்னுரிமை தொழில்களுக்கு தங்களது மொத்த கடன் ஒதுக்கீட்டில் 75 சதவீத அளவுக்கு கடன் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 50 சதவீத கடன்கள் ரூ. 25 லட்சத்துக்கும் குறைவான அளவைக் கொண்டவை. மேலும் இவை சேமிப்பு திரட்டுவதற்கு எந்த உச்ச வரம்பும் கிடையாது என்பது சாதகமான அம்சமாகும்.

நிரந்தர சேமிப்புகளுக்கு தற்போது அதிக வட்டி தரும் சிறிய வங்கிகளில் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி முன்னிலை வகிக்கிறது.

சலுகைகள்

இந்த வங்கியில் வாடிக்கையாளர் 36 மாத கால நிரந்தர சேமிப்பில் பணம் செலுத்தலாம். இதற்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியை அளிக்கிறது. இது தவிர 36 மாதங்களுக்கும் கூடுதலாக மறு முதலீடுக்கு அதிக வட்டி அளிக்கும் வாய்ப்பும் இதில் உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 36 மாத நிரந்தர சேமிப்புகளுக்கு 6 சதவீதம் முதல் 7 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. அதுவே தனியார் வங்கிகளில் 8 சதவீத வட்டி கிடைக்கிறது. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் 9 சதவீத வட்டி அளிக்கிறது. வங்கியல்லாத தனியார் நிதி நிறுவனங்களில் ஓரளவு அதிக வட்டி அளிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது. இருப்பினும் என்பிஎப்சி-க்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை உங்கள் சேமிப்புக்கு நூறு சதவீத உத்தரவாதத்தை அளிக்காது.

இது தவிர, என்பிஎப்சி-க்களில் போடப்படும் முதலீடுகளுக்கு காப்பீடு வசதி கிடையாது. அதுவே ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் காப்பீடு உள்ளது. இதற்குரிய காப்பீட்டை  இந்திய சேமிப்பு மற்றும் கடன் உத்தரவாத காப்பீட்டு நிறுவனம் அளிக்கிறது. ஒவ்வொரு முதலீட்டாளரும் ரூ. 1 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்படுகிறார்.

அத்துடன் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டித் தொகையும் காப்பீடு செய்யப்படுகிறது. அந்த வகையில் பங்குச் சந்தை முதலீடு போன்றவற்றின் மூலம் அதிக ஆதாயம் தேட நினைக்காத, அதிக வட்டிக்கு ஆசைப்படாத அல்லது ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வழிதான் சிறு வங்கிகளின் நிரந்தர சேமிப்பு திட்டமாகும்.

இது தவிர மூத்த குடிமக்களுக்கு சிறப்புச் சலுகையாக வங்கி வழங்கும் வட்டித் தொகையை விட 0.6 சதவீதம் கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்துக்கு முன்னதாக உங்கள் சேமிப்பை நீங்கள் எடுக்க விரும்பினால் அதற்கு 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வட்டி அபராதம் விதிக்கப்படும்.

வங்கி பற்றி…

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது முந்தைய ஜனலட்சுமி ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமாகும். இது தனது செயல்பாடுகளை மார்ச் 28, 2018 முதல் தொடங்கியுள்ளது. இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இந்த வங்கி தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் தனது கிளைகளை அமைத்து செயல்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களில் 50 சதவீத அளவுக்கு இதன் செயல்பாடு உள்ளது.

இந்த வங்கி தற்போது விவசாயம், வர்த்தகம், வீடு கட்ட கடன் வழங்குகிறது. விரைவிலேயே சுலப தவணையில் இரு சக்கர வாகனக் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்க உள்ளது. அதேபோல நுகர்வோர் மின்னணு பொருள்களுக்கு கடன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் கடன் வழங்கும் அளவு ஆண்டுக்கு 16.6 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல இதன் லாபமும் ஆண்டுக்கு 6.3 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதன் வாராக் கடன் 0.69 சதவீதமாக உள்ளது.

நிரந்தர சேமிப்பு கணக்குகளுக்கு கூடுதல் வட்டி கிடைக்க விரும்புவோர் சிறு வங்கிகளைத் தேர்வு செய்யலாம்.

- சத்யா சொந்தானம்

SCROLL FOR NEXT