தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக் கதைகளைக் கேட்டு ரசித்ததுண்டா நீங்கள் ? பேராசை பற்றிய அவரது கதை ஒன்றை சமீபத்தில் யூடியூபில் கேட்டேன். பழங்காலத்தில், ஒரு வழிப்போக்கன், கடும் வெயிலில், செருப்பில்லாமல் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு படுவேகமாக நடந்து கொண்டிருந்
தானாம். அப்போது அவ்வழியே ஒரு பெரியவர் குதிரை மேல் காலில் காலணியும், தலையில் தொப்பியுமாக டக்டக்கென்று வந்துள்ளார். அவரை வழிமறித்த வழிப்போக்கன், ‘ஐயா, நீங்கள் குதிரை மேல் போவதால் உங்களின் கால்களுக்கு வெயிலின் சூடு தெரியாதே. எனக்கு உங்கள் காலணிகளைக் கொடுத்து உதவுங்களேன்' எனக் கேட்க, அவரும் பரிதாபப்பட்டு காலணிகளை நீயே போட்டுக்கொள்ளெனக் கொடுத்து விட்டுக் கிளம்பியிருக்கிறார்.
அதை அணிந்து கொண்ட வழிப்போக்கன், அவரைத் தடுத்து நிறுத்தி, ‘பெரியவரே, நீங்கள் குதிரையில் செல்வதால் சீக்கிரம் ஊர் போய்ச்சேர்ந்து விடுவீர்கள். ஆனால் எனக்கு நடப்பதால் நிறைய நேரமாகும். வெயிலில் என் மண்டை காய்கிறது. அந்தத் தொப்பியையும் கொடுங்களேன்' எனக் கேட்க, அவரும் அவன் சொல்வது உண்மை தானே என நினைத்து தொப்பியைக் கழட்டிக் கொடுத்து விட்டு குதிரையை வேகமாக நடக்க விட்டாராம்.
ஆனால், உடனே அவர் பின்னாலேயே ஓடி வந்த வழிப்போக்கன், ‘நல்லவரே, எனக்கு இவ்வளவு உதவிய நீங்கள், உங்கள் குதிரையை மீதி இருக்கும் பாதி தூரத்திற்கு நான் ஏறி வரக் கொடுங்களேன். நான் தானே உங்களை விடக் களைத்துப் போய் இருக்கிறேன். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்' என்றானாம்.
அதைக் கேட்ட பெரியவருக்கு எரிச்சல் ஒரு பக்கம். வியப்பு ஒரு பக்கம். அவனையே உற்றுப் பார்த்த பெரியவர், ஒரு கணம் யோசித்தாராம். பின்னர் தன் கையிலிலிருந்த சவுக்கால் பளீர்பளீரென அந்த பேராசைக்காரனை அடிக்கத் தொடங்கினாராம்!
ஆனால், அந்த ஆளோ அடிகளையும், வலியையும் பொறுத்துக் கொண்டதோடு கடகடவென சிரிக்கவும் செய்தானாம். ஏனென்று கேட்டதற்கு, ‘ஐயா நான் கேட்டவுடன் செருப்பையும் தொப்பியையும் சிறிதும் யோசிக்காமல் கொடுத்த நீங்கள், ஏறி வந்த குதிரையையும் கொடுத்தாலும் கொடுப்பீர்கள் என நினைத்தேன். நீங்கள் அதைக் கொடுக்கவில்லை, பரவாயில்லை.
ஆனால் நான் அதை உங்களிடம் கேட்காமல் வீட்டிற்குப் போயிருந்தால், எனக்கு அதையும் கேட்டிருந்தால் கிடைத்திருக்குமோ எனும் எண்ணம் வந்து வந்து என்னை வதைத்து இருக்கும். ஆனால் இப்பொழுது அந்தக் கவலை இல்லாததால் மகிழ்ச்சியில் சிரிக்கிறேன்' என்றானாம்!
பேராசைப்படுபவர்களின் அணுகுமுறையையும் அவர்களது வலையில் விழுந்து இரையாகும் அப்பாவிகளின் ஏமாளித்தனத்தையும் இக்கதை அழகாக எடுத்துக் காட்டுகிறது.
‘பேராசை என்பது அடிப்பக்கம் இல்லாத ஒரு குழி போன்றது. அதை நிரப்புவதற்கு மீண்டும் மீண்டும் முயன்றாலும் முடியாது; களைப்புத் தான் மிஞ்சும்' என அமெரிக்க உளவியலாளர் எர்ருச் ஃபர்ராம் சொல்வது ஆழமான உண்மையல்லவா?
நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீர்கள். ரயில் நிலையங்களில் பெட்டியைத் தூக்குவதற்கு சிலர் கூலி கேட்கும் விதமே தனி. ‘நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?' என நம்மையே ஆழம் பார்த்து விட்டு, நாம் சொன்னதும் அதெல்லாம் முடியாதென மறுத்து விட்டு, நம்மால் நம்ப முடியாத, பல மடங்கு அதிகமான தொகையைச் சொல்வார்கள்!
தம்பி, 1990-களில் என்னைப் போன்றோர் டெல்லியிலிருந்து ‘தருமமிகு' சென்னை வரக்கொடுத்த இரயில் கட்டணத்தை விட, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து மைலாப்பூர் போன்ற இடங்களுக்குச் செல்ல அழுத ஆட்டோ கட்டணம் தான் அதிகம்!
‘பேராசை பணம் சார்ந்த விஷயமல்ல. அது உளம் சார்ந்தது' என ஆண்டி ஸ்டான்லே எனும் அமெரிக்க மத போதகர் சொல்வது உண்மை தானே! கல்யாண வீடுகளில் பார்த்து இருப்பீீர்கள். அந்த தேங்காய் அல்லது சாத்துக்குடிப் பையைக் கூட ஒன்றிற்கு இரண்டாய் வாங்கிச் செல்வோர் உண்டு. அதில் ஏதாவது கைத்துண்டு போன்ற பரிசுப் பொருள் இருந்தால் போச்சு.
வசதி படைத்தவர்களும் மெத்தப் படித்தவர்களும் கூட, கல்யாணத்திற்கு வர முடியாமல் போன தனது மகளுக்கு ஒன்று, அக்காவிற்கு ஒன்று, பேரனுக்கு ஒன்று என கை நீட்டுவதைப் பார்த்து இருப்பீர்கள். யாரோ ஒருவர் இப்படி வாங்குவதை மற்றவர் பார்த்து விட்டால், கொடுப்பவர் பாடு திண்டாட்டம் தான்.
சாணக்கியர் சொல்வது இது தான். ‘பேராசைக்காரனிடம் பணத்தை எறியக்கூடாது'. உண்மை தானே? ஆசைக்கோர் அளவில்லையே! தாயுமானவர் சொல்வது போல அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீது ஆணை செலுத்தவும், குபேரன் போல செல்வம் இருந்தாலும் இரும்பைப் பொன்னாக மாற்றும் வித்தை கற்கவும் நினைப்பதல்லவா மனித மனம்?
ஐயா, யாருக்கும் நியாயமான தேவைகளுக்கு உதவலாம். ஆனால் பேராசைக்காரர்களிடம் ஏமாறலாமா? அவர்களுக்குக் கொடுப்பது என்பது பணத்தை எறிவது போன்றது தானே? வாங்குபவனைக் கெடுப்பவன், கொடுப்பவன் தானே?
- somaiah.veerappan@gmail.com