வணிக வீதி

வருகிறது பேட்டரி ‘மினி’

செய்திப்பிரிவு

பேட்டரி வாகனங்களுக்குத்தான் இனி வளமான எதிர்காலம் என்பதை பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பிரிட்டன் இணைப்பான மினி காரை முழுவதும் பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரித்து அறிமுகம் செய்ய உள்ளது.

பேட்டரி வாகனத் தயாரிப்பு என்பது இந்நிறுவனம் சமீப காலத்தில் மேற்கொண்டதல்ல. ஏறக்குறைய 10 ஆண்டுகால தீவிர ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்நிறுவனம் முதலாவது பேட்டரி காரை காட்சிப்படுத்தியிருந்தது. அப்போதிருந்தே இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை இந்நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது.

தற்போது தனது மினிரக மாடலை முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு 2019-ம் ஆண்டை இந்நிறுவனம் தேர்வு செய்ததற்கு முக்கியக் காரணம் உள்ளது. மினி மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள மாடலை விட இதில் அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது 3 கதவுகளைக் கொண்டதாக மினி ஹாட்ச் இ மாடலாக வர உள்ளது.  இந்த காரை மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 183 ஹெச்பி திறனை வெளிப்படுத்தும் மோட்டார் உள்ளது. இது பிஎம்டபிள்யூஐ3 எஸ் மாடலில் உள்ளதைப் போன்று சக்தியை வெளிப்படுத்தக் கூடியதாகும். இப்போது உள்ள 2 லிட்டர் கூப்பர் 192 ஹெச்பி திறன் கொண்டது.

பேட்டரியால் ஏற்படும் கூடுதல் எடையை இதன் டார்க் இழுவிசை திறன் அதிகரிப்பு ஓரளவு சமாளிக்கும். லித்தியம் அயன் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 322 கி.மீ. தூரம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் இரண்டாவது காலாண்டில் இது அறிமுகம் ஆகும் என்று தெரிகிறது. இந்தியாவிலும் ஒரே சமயத்தில் இதை அறிமுகம்  செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT