வலுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் (reinforced beliefs) என்பதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இது ஓர் உளவியல் கோட்பாடு என்று துப்பு கொடுத்தால், கேள்வி எளிதாகிறதா?
நாம் ஒரு பந்தைத் தூக்கி எறிகிறோம். அதை உடனே ஓடிப்போய் எடுத்து வந்து நம்மிடம் போடும் நாயை தட்டிக் கொடுக்கிறோம், அதற்கு சாப்பிட ஏதாவது கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாய், தான் அப்படிச் செய்வதை நாம் விரும்புகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறதாம். பிறகு தொடர்ந்து அவ்வாறு நடந்து கொள்கிறதாம்.
அடம் பிடிக்கும் குழந்தையும் அப்படித்தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆர்ப்பாட்டம் செய்து கத்தினால், தான் சிரமப்பட்டு நடக்க வேண்டாம், இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு விடுவார்கள் எனத் தெரிந்து கொள்கிறதாம் குழந்தை! எனவே அந்த யுக்தியை அடிக்கடி கையாள்கிறதாம். இது போல் வளர்க்கப்படும் எதிர்பார்ப்புகளை, நம்பிக்கைகளைத் தான் 'வலுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள்' என்கிறார்கள் உளவியலாளர்கள்!
சில பெற்றோர்கள், வம்பு செய்தால் அடிதான் கிடைக்கும் எனும் நம்பிக்கையைக் கூட தங்கள் செல்லக் குழந்தையிடம் வலுவூட்டப் பார்ப்பார்கள் என்பது வேறு கதை! நாம் ஒன்று செய்தால், அதற்கு அடுத்தவர் என்ன எதிர்வினை செய்வார் என்பது தெரிந்து விட்டால் நல்லது அல்லவா? நமது அன்றாட வாழ்வில் ஒருவரது குணத்தை, அணுகுமுறையைப் பொறுத்து அவர் செய்யும் எதிர்வினைகள் மாறுபடுகின்றன.
திரையரங்கில், பேருந்துப் பயணம் போன்றவற்றில் அனுபவப்பட்டு இருப்பீர்கள். பக்கத்து இருக்கையில் இருப்பவர் கால் மேல் கால் போட்டுக் கொள்வார். அவரது செருப்புக் கால் உங்கள் இருக்கையின் அருகில் எவ்வளவு தூரம் வருகிறது, உங்கள் இடத்தை எவ்வளவு ஆக்கிரமிக்கிறது என்பது நீங்கள் எவ்வளவு பொறுத்துக் கொள்கின்றீர்கள் என்பதன் விகிதாச்
சாரத்தில் இருக்கும்!
அவரைப் பொறுத்தவரை உங்கள் மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி! ஆரம்பத்திலேயே நீங்கள் அவரது அத்துமீறலை எதிர்த்திருந்தால், அந்தத் தொல்லை தொடர்ந்திருக்காது, வளர்ந்திருக்காதல்லவா?
எனது நண்பர் ஒருவர். பரமசாது. சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வாடகைக்குக் குடியிருந்தார். அவர் வீட்டை ஒட்டினார்ப் போல பக்கத்து பிளாட்டில் ஒரு அடாவடிப் பேர்வழி. பெயரை எப்படியாவது கண்டுபிடித்து விடுகிறீர்களே? அவரை குமார் என்றே அழைப்போம்.
சாதாரணமாக வீட்டின் உரிமையாளர் சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாதென்று சொல்வதைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இங்கே கதை வித்தியாசமானது. குமார் தனது வீட்டின் தரையில் மட்டுமில்லாது சுவற்றிலும் விலை உயர்ந்த பளிங்குக் கற்கள் பதித்து இருந்தாராம். எனவே வீட்டில் எந்தவித அதிர்வும் ஏற்படக் கூடாதென்பாராம்.
இதனால் குமாரின் பக்கத்து வீட்டில் இருந்த நம்ம நண்பர், நாட்காட்டி போன்றவற்றையும் குடும்பப் புகைப்படங்களையும், சுவற்றில் ஒட்டும் பிளாஸ்டிக் கொக்கிகளில் மாட்டி வைத்தார். அவை அடிக்கடி பெயர்ந்து வந்ததால் பின்னர் அவற்றையெல்லாம் மேசை மேல் சாய்த்து வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று!
நண்பர் குனியக் குனிய, குமார் அவரைக் கொட்டினார் என்பதே உண்மை. நாளுக்கு நாள் குமாரின் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. அதற்கு நம்ம நண்பர் எதிர்ப்பு தெரிவிக்காததும் ஒரு முக்கியக் காரணம் அல்லவா?
‘எவன் ஒருவன் பயந்து விட்டானோ, அவன் செத்து விட்டான்' (ஜோ டர் கயா, வோ மர் கயா) என இந்தியில் ஒரு சொல் வழக்கு உண்டு. சரி தானே? அந்த மாதிரி ஆட்களிடம் அச்சப்படக் கூடாது, பணியக் கூடாது. நாம் அடங்க, அடங்க நம்மை அவர்கள் மேலும் மேலும் அடக்கப் பார்ப்பார்கள்.
‘எதிலும் முதல் தேவை, துடுக்குத்தனமான துணிவுதான்' என இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில் கூறியது சிந்திக்க வேண்டியது; இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அதைச் செயல்படுத்திப் பயன்பெற வேண்டும்.
அன்புடையோரிடம் அம்மா, அப்பா, ஆசான், போன்றோரிடம் அடங்கிப் போகலாம். எந்தத் தகுதியுமின்றி, வெறும் திமிர் காட்டுபவர்களிடம் நமது எதிர்ப்பைத் தானே காட்ட வேண்டும்?
‘சிலருக்கு திமிர்த்தனம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் முயன்று பார்ப்பார்கள்; ஆனால், அவற்றையெல்லாம் செய்து விட முடியாது' என்கிறார் பிரெஞ்சு ராஜ தந்திரி நெப்போலியன்!
அன்பிற்குக் கட்டுப்படுபவர்கள் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் கட்டுப்படுவதில்லையே! ‘வானம் பொழிகிறது, பூமி விளைகிறது. உனக்கேன் கட்ட வேண்டும் வரி' எனும் கட்டபொம்மனின் வீர வசனம் விளைந்த பூமியல்லவா இது?
தம்பி, சாணக்கியர் சொல்வதும் இதுதான். ‘திமிர் பிடித்தவரிடம் அடங்கி நடக்கக் கூடாது'. அப்படிப்பட்டவரிடம் நாம் முதலில் பணிந்து போவது அந்த திமிர் பிடித்தவருக்கு நாம் தொடர்ந்து அவ்வாறு நடந்து கொள்வோம் எனும் நம்பிக்கையைத்தான் வளர்க்கும். அதனை முளையிலேயே கிள்ளி விட வேண்டும், சரிதானே?
- somaiah.veerappan@gmail.com