வேலை செய்பவர்கள், ஊதியத்தை மட்டுமே சம்பாதிப்பதில்லை. பயன்படுத்தாத விடுப்புகளையும் சம்பாதிக்கிறோம். மாத ஊதியத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கேஷுவல் லீவ், சிக் லீவ் மற்றும் பிரிவிலேஜ் லீவ் எனப் பல்வேறு விடுப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த விடுப்புகளை சேகரித்து வைப்பது, பயன்படுத்துவது, அவற்றை பணமாக மாற்றிக்கொள்வது போன்றவற்றில் உள்ள விதிமுறைகள் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடலாம்.
உதாரணமாக, கேஷுவல் லீவ் ஒரு வருடத்துக்கு கணக்கிடப்படும். ஆனால், அது அந்த ஆண்டுக்குள் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த விடுப்புகளை நீங்கள் அடுத்த ஆண்டு கணக்கில் எடுத்துக்கொள்ளவோ, அதைப் பணமாக மாற்றிக் கொள்ளவோ முடியாது. எனவே, கேஷுவல் லீவ் நாட்களை அந்தந்த ஆண்டில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.
மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் சிக் லீவ் நாட்களைப் பணமாக மாற்றிக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஆனால், அடுத்த ஆண்டு கணக்கில் அதைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கின்றன. ஆனாலும், அதிகபட்ச வரம்பாக 45 அல்லது 60 நாட்கள் வரை சேர்த்து வைத்திருக்கலாம். அந்த வரம்பைத் தாண்டினால் அவை காலாவதியாகிவிடும்.
அடுத்ததாக உள்ள பிரிவிலேஜ் விடுப்பு நாட்கள். இதில் சாதகமான பலன்கள் உள்ளன. பயன்படுத்தாத பிரிவிலேஜ் விடுப்பு நாட்களை அடுத்த ஆண்டில் சேர்த்துக்கொள்ளலாம். இதிலும் நிறுவனங்கள் 90 முதல் 180 நாட்கள் வரை என வரம்பு நிர்ணயித்துள்ளன.
அதேசமயம், அவற்றில் ஒரு பகுதியை, உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் 15 பிரிவிலேஜ் விடுப்பு நாட்களை நாம் பணமாக மாற்றிக்கொள்ளலாம். அதேபோல் வேலை ஓய்வு அல்லது வேலையிலிருந்து வெளியேறும்போது கணக்கில் இருக்கும் பயன்படுத்தாத பிரிவிலேஜ் விடுப்பு நாட்களை நாம் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
அதாவது, அதிகமாக விடுப்புகளைப் பயன்படுத்தாமல் இருந்தால், அதைப் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்தப் பணமாக்கல் நடைமுறையானது, இறுதியாக வாங்கிய அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படும். சில நிறுவனங்கள் இந்த விடுப்பு நாட்களைப் பணமாக்கிக் கொள்வதையும் பணியாளரின் சிடிசியில் சேர்த்து விடுகின்றன.
விடுப்பு நாட்களைப் பணமாக்கும்போது அந்தப் பணத்துக்கும் வரிச் செலுத்த வேண்டும். வேலையில் இருக்கும்போதே விடுப்பு நாட்களை பணமாக்கினால் அந்தப் பணத்துக்கு, என்ன வரி வரம்பில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்த வரியைச் செலுத்த வேண்டும். இதில் அரசு ஊழியர், அரசு ஊழியரல்லாதோர் என்ற வித்தியாசம் எதுவும் இல்லை. பணியாளர் இறந்துவிட்டிருந்து, அவர்களது குடும்பத்தார் இந்தப் பணத்தைப் பெறுகிறார்கள் என்றால், எந்த வரியும் இல்லை.
வேலையை விட்டு வெளியேறும் போது, ஓய்வுபெறும்போது, விடுப்பு நாட்களைப் பணமாக்கினால், அதில் சில சிக்கல்களும், வேறுபாடுகளும் உள்ளன. இந்த நடைமுறையில் அரசு ஊழியர்களுக்கு எந்த வரியும் இல்லை. எனவே பல ஆண்டுகளாகப் பணியில் இருந்து ஓய்வுபெறுபவர்களுக்கு பயன்படுத்தாத விடுப்பு நாட்களிலிருந்து கிடைக்கும் தொகை லட்சங்களில் இருக்கும்.
இது மிகப்பெரிய சேமிப்பு. ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது, பயன்படுத்தாத விடுமுறைகளிலிருந்து ரூ. 8 லட்சம் பெறுகிறார் எனில், அவர் அந்தத் தொகை முழுவதையும் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். ஒரு பைசா வரி இல்லை. அப்படி வரி விதித்தால், 5-30 சதவீத வரி வரம்பு அடிப்படையில், ரூ. 42 ஆயிரம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை வரியாகச் செலுத்த வேண்டிவரும்.
அரசு ஊழியர்களுக்கு இருக்கும் இந்த அதிர்ஷ்டம் அரசு ஊழியர் அல்லாதோருக்கு இல்லை. வருமான வரிச் சட்டம் பிரிவு 10 (10ஏஏ) படி ஓய்வுபெறும் போது, வேலையிலிருந்து நீங்கும்போது விடுப்புகளிலிருந்து கிடைக்கும் வருமானம் வரிவிதிப்புக்கு உள்ளாகும். வரி விலக்கு தொகை நான்கு விதங்களில் கணக்கிடப்படும்.
1. விடுமுறை நாட்களிலிருந்து சம்பாதித்த முழு தொகை.
2. அரசு நிர்ணயித்துள்ள வரி விலக்கு வரம்பு ரூ.
3 லட்சம் 3. சராசரி அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி 10 மாதங்களுக்கு
4. ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு என்ற முறையில், பயன்படுத்தாமல் மீதமுள்ள விடுப்பு நாட்களுக்கு நிகராகத் தரப்படும் தொகை.
அரசு ஊழியரல்லாத ஒருவர் ஒவ்வொரு வருடமும் 45 விடுமுறை நாட்கள் வழங்கப்பட்டிருக்கிறார் எனில், 30 வருட பணியில், மொத்தம் 1,350 விடுப்பு நாட்கள். அதில் 780 நாட்களைப் பயன்படுத்திவிட்டார். மீதம் 570 நாட்கள் உள்ளன. அதாவது 19 மாதங்கள். அவருக்கு இதன் மூலம் ரூ. 8 லட்சம் கிடைக்கிறது.
கடைசி பத்து மாதங்களில் அவருக்கு வழங்கப்பட்ட அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி இரண்டும் சேர்த்து ரூ. 40,000. வரி விலக்குக்கான தொகை, ரூ. 1.6 லட்சம் (4 மாதங்களுக்கான மாத ஊதியம்). வாங்கிய எட்டு லட்சத்தில் ரூ. 1.6 லட்சம் மட்டுமே வரி விலக்கு தரப்படும். மீதமுள்ள பணத்துக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும், ஏற்கெனவே ஒரு நிறுவனத்திடமிருந்து மாறுதல் பெறும்போது, பயன்படுத்தாத விடுப்புக்கான பணத்தைப் பெற்று அதற்கு வரிவிலக்கும் பெற்றிருந்தால், அதாவது அரசு நிர்ணயித்துள்ள வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சத்தில், ஏற்கெனவே ரூ. 2 லட்சத்துக்கு வரிவிலக்கு பெற்றிருந்தால், அதற்குப் பிறகு பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வேலை ஓய்வு பெறும்போது, வேலையிலிருந்து வெளியேறும் போது ரூ. 1 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம்.
-anand.k@thehindu.co.in