கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை (சிஏஜி)அமைப்பு அரசிடம் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சிஏஜி குறிப்பிட்டுள்ள விவரங்கள் புதியதொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
அரசின் செலவினங்களை உள்ளதை உள்ளபடி பட்ஜெட்டில் குறிப்பிட வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் உண்மையான நிதி நிலை அறியப்படும். அதற்கேற்ப பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், நிதி பற்றாக்குறை இலக்கை மீறினால், நிதி பற்றாக்குறை அதிகமானால் பெரும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டிவரும் என்பதால், பட்ஜெட்டில் கணக்கிடப்படாத வகையில், அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாகவே கடனை வாங்கி பாஜக அரசு செலவினங்களைச் செய்துள்ளது.
அரசின் பல்வேறு மானிய திட்டங்களை அது சம்பந்தப்பட்ட அரசு துறை நிறுவனங்கள் மூலமாகவே கடனாகப் பெற்று செயல்படுத்தியுள்ளது. சிஏஜி சமர்பித்துள்ள 2016-17 நிதி ஆண்டுக்கான நிதி பொறுப்புகள் மற்றும் பட்ஜெட் மேலாண்மை அறிக்கையில் இது விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசு செலவினங்களில் உர மானியம், உணவுப் பொருள் மானியம், நீர்ப்பாசன திட்டம் உள்ளிட்ட செலவினங்களை பட்ஜெட் கணக்கில் வாரதபடி, வங்கிக் கடன்கள், நபார்ட் வங்கிக் கடன்கள் மூலமாகவே செயல்படுத்தியுள்ளது.
ரயில்வே செலவினங்களும் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலமான கடனில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செலவினங்கள் எதுவுமே பட்ஜெட் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
உதாரணத்துக்கு 2016-17 நிதி ஆண்டில் உணவுப் பொருள்களுக்கான மானிய செலவு ரூ. 78,335 கோடி என கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், ரூ. 81,303 கோடி அடுத்த ஆண்டு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், உர மானியத்துக்கு ரூ. 70,100 கோடி செலவு என காட்டப்பட்டுள்ளது. இதில் ரூ. 39,057 கோடி அடுத்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி கடனாக அரசுத் துறை நிறுவனங்களுக்குத் தொக்கி நிற்கிறது.
ஒருவேளை இந்தக் கடனை அரசுத்துறை நிறுவனங்கள் சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும்போது, அது திவால் ஆக வாய்ப்புள்ளது. இந்தப் போக்கு ஆபத்தானது என சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள மத்திய அரசு, பட்ஜெட்டுக்கு வெளியே உள்ள செலவினங்களை, கடன்களைக் கையாள்வதற்கு சட்டரீதியான விதிமுறைகள் எதுவும் இல்லையென்று சொல்வதை ஏற்கமுடியாது என்று கூறியுள்ளது. அதற்கான சட்ட திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளது.
அரசின் நிதி பற்றாக்குறை மற்றும் கடன்களை மேலாண்மை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சட்டமுறைகளும் உள்ளன. அதன்படி செயல்பட்டு, நிதிப் பற்றாக்குறை இலக்கு 2020க்குள் ஜிடிபியில் 3 சதவீதமாக இருக்கும்படி கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.
அரசு என்னதான் சமாதானம் சொன்னாலும், சிஏஜி இந்த விஷயத்தில் கறாராகத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இப்படி அரசு செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது முறையல்ல என்றும், இதன் மூலம் உண்மையான செலவினங்கள் மறைக்கப்பட்டு, நிதி பற்றாக்குறை குறைவாக இருப்பதுபோல் காட்டப்படுகிறது என்றும் கூறியுள்ளது. இந்தப் போக்கு நீண்டகாலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.
அரசு தன்னுடைய பட்ஜெட்டுக்கு வெளியிலான செலவினங்களின் காரணங்களையும், நோக்கங்களையும் தெரிவிக்க வேண்டும். அதேசமயம், இப்படி பட்ஜெட்டுக்கு வெளியே அரசு செய்துள்ள செலவினங்களின் விவரங்களை ஒன்று விடாமல் தெரிவிக்க வேண்டும். இதனை பட்ஜெட்டிலும் விளக்கமாகக் குறிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது.
நாட்டின் நிதி நலனுக்காக எந்த முடிவுகளையும் அரசு சட்ட ரீதியாக எடுக்கலாம். ஆனால், அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும். சட்டத்தில் உள்ள சாதகங்களைப் பயன்படுத்தி மறைமுகமாக செய்ய வேண்டிய அவசியமில்லை. வெளிப்படையாக இருப்பதன் மூலம் மட்டுமே மக்களின் நன்மதிப்பை அரசு பெற முடியும் என்பதை உணர வேண்டும்.