உஜ்வாலா, இந்த வார்த்தை பாரதிய ஜனதா அரசின் மிக முக்கியமான அரசியல் அஸ்திரம். உத்திரப்பிர தேசத்தில் ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம் இந்த உஜ்வாலா. உஜ்வாலாவின் நோக்கம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது.
அடுப்பு புகைச்சலில், ஊதாங்குழலோடு போராடிக்கொண்டிருந்த பெண்களுக்கு நிச்சயம் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம் வரப்பிரசாதம்தான். ஆனால், இந்தத் திட்டம் அதன் இலக்கிலிருந்து தவறிவிட்டதும், இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாகியிருப்பதும் பலரும் அறிந்திராத உண்மை.
இந்தியாவில் காசநோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகம். அதற்கு முக்கிய காரணம், விறகு, வறட்டி, நிலக்கரி போன்றவற்றைப் பயன்படுத்தி சமைக்கும்போது ஏற்படும் புகை. இது 500 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடிப்பதற்கு சமமானது என்று சொல்லப்படுகிறது. இந்தியப் பெண்கள் ஆரோக்கியத்துக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஒவ்வொரு வீட்டுக்கும் கேஸ் இணைப்பு என்பது அவசியம். இப்படிச் சொல்லித்தான் உஜ்வாலா திட்டம் ஆரம்பமானது.
ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்பு கிடைக்கும் என்ற நிலையிருந்தது. 1990களுக்குப் பிறகு உலகமயமாக்கலின் விளைவால், நகரங்களுக்குப் படையெடுத்த குடும்பங்களுக்கு விறகு அடுப்பெல்லாம் வேலைக்காகவில்லை. அரசு கேஸ் இணைப்பைப் பொதுவாக்கியது. பணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் கேஸ் இணைப்பு பெற முடிந்தது.
இதையடுத்து 2006-2011 காலகட்டத்தில் தமிழகத்தில் திமுக, கீழ்தட்டு மக்களுக்காக இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தவும் செய்தது. இந்தத் திட்டத்தில் அனைத்துமே இலவசம். ஆனால், இணைப்பைப் பெற்றவர்கள் பெரும்பாலும் அறியாமையாலும், பயத்தாலும், அதற்கான தேவை இல்லாததாலும் தங்களது இணைப்பை வேண்டியவர்களிடம் விற்றுவிட்டனர்.
2013-14 ஆண்டுகாலத்தில் காங்கிரஸ் அரசு, எண்ணெய் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் (CSR) நிதியை என்ன செய்யலாம் என்று யோசித்தது. அதை வைத்து மானிய விலையில் சிலிண்டர் இணைப்பைக் கொடுக்க முன்வந்தது. கேஸ் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ. 1,600 மட்டும் செலுத்த வேண்டியதில்லை. சிலிண்டர் உருளைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கேஸ் அடுப்பு பெறுவது அவரவர் விருப்பத்துக்கு விடப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் முழுவீச்சில் நடப்பதற்குள் 2014-ல் ஆட்சி மாற்றம் நடந்தது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச கேஸ் இணைப்பு திட்டம் என்ற வாக்குறுதி இடம்பெற்றது.
உஜ்வாலா திட்டம்
பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஆதார் முறையைக் கட்டாயமாக்கியது. அனைத்து கேஸ் இணைப்புகளுடன் குடும்பத்தினரின் ஆதார் எண்களை இணைக்க வேண்டுமென உத்தரவிட்டது. இதன் மூலம் அதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டிருந்த கேஸ் இணைப்புகளில் 2 கோடி இணைப்புகள் போலியான பயனாளர்களிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தனது வெற்றிகளில் ஒன்றாக பாஜக வரித்துக்கொண்டது. ஆனால், அதே தவறு பாஜகவின் உஜ்வாலா திட்டத்திலும் நடக்கும் என அது நினைக்கவே இல்லை.
உண்மையில், பாஜக அரசு குறிப்பிடுவது போல் உஜ்வாலா யோஜனா திட்டம், இலவச கேஸ் இணைப்பு திட்டமே இல்லை. அதுவும் மானிய கேஸ் இணைப்பு திட்டம்தான். கேஸ் இணைப்பு பெறுவதைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கொண்டுவந்த திட்டத்தைப் போலவே, வைப்புத் தொகை ரூ. 1600 மட்டுமே செலுத்த வேண்டியதில்லை.
அடுப்புக்கு ரூ. 990-ம், எரிவாயுவுக்கு ரூ. 800-ம் (மாறக்கூடியது) பயனாளிக்கு இலவசமாகத் தரப்படவில்லை, மாறாகக் கடனாகத் தரப்பட்டு, அடுத்தடுத்த சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் அது பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், இதை அரசு இலவச இணைப்பு, இலவச இணைப்பு என்றே கூறி பிரசாரம் செய்தது.
காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்திய திட்டத்துக்கும், பாஜக செயல்படுத்திய திட்டத்துக்கும் ஒரே வித்தியாசம் ஆதார் இணைப்பு மட்டும்தான். மற்றபடி எல்லாம் ஒன்றே.
வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் தங்களின் மானியத்தை விட்டுக்கொடுப்பதன் மூலம், ஏழைகளின் வீட்டில் அடுப்பெரிய வைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறினார். பல ஆயிரக் கணக்கானோர் தங்களின் மானியத்தை விட்டுக்கொடுத்தனர். அதன் மூலம் மட்டுமே அரசுக்கு ரூ. 6 ஆயிரம் கோடிக்கும் மேல் கிடைத்தது.
இவர்கள் விட்டுக்கொடுத்த மானியத் தொகையும், அரசின் முதலீடும் சேர்ந்து உஜ்வாலா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தின. நாடு முழுவதும் விநியோகஸ்தர்களைத் தேர்ந்தெடுத்தது. சிலிண்டரை பெரும்பாலும் வீடுகளுக்கே டெலிவரி செய்யும் வசதியையும் ஏற்படுத்தியது. இலவச இணைப்பு என்று சொன்னதால் பலரும் வாங்க முன்வந்தார்கள்.
8 கோடி இணைப்புகள்
உஜ்வாலா திட்டம் என்பது ஏற்கெனவே இணைப்பு இல்லாத வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்ணின் பெயரில் இணைப்பு வழங்குவது. ஆரம்பத்தில் அரசு 6 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்தது. வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களை அடையாளம் காண, அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எடுத்த விவரங்களை வைத்து, பிரத்யேக AHL TIN எண் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தகுதியான குடும்பத்தின் பெண்ணுக்கு இணைப்பு வழங்கலாம்.
அந்த இணைப்பில் குடும்பத்தினர் அனைவரின் ஆதார் எண்ணையும் அதில் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கு எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், ஏற்கெனவே இணைப்பு வைத்திருந்தவர்கள் பெரும்பாலானோர் இலவசம் என்று சொல்லப்பட்டதால் மீண்டும் விண்ணப்பித்தனர். அப்படி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் அனைவரின் ஆதார் எண்ணையும் பதிவேற்றும்போது இணைப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, ஏற்கெனவே இணைப்பு உள்ள குடும்பத்தினருக்கு, யாருடைய பெயரில் இணைப்பு இருக்கிறதோ அவருடைய ஆதார் எண்ணை பதிவேற்றாமல், 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணின் ஆதார் எண்ணை மட்டுமே வைத்து இணைப்பு வழங்கினர் நாடு முழுவதுமுள்ள விநியோகஸ்தர்கள். எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் எதையுமே சரியாக பின்பற்றவில்லை. இதனால் ஒவ்வொரு வீட்டிலும், இரண்டு மூன்று இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
2018-ம் ஆண்டின் தொடக்கத்திலெல்லாம் 6 கோடி இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்பட்டுவிட்டன. வெற்றிபெற்று விட்டதாக நினைத்த அரசு, இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் கொடுக்க முன்வந்தது. இதற்கு சாதி சான்றிதழ் பதிவேற்ற வேண்டும். ஆனால், பல இடங்களில் பதிவேற்றாமல், பள்ளி மாறுதல் சான்றிதழை வைத்து இணைப்பு கொடுக்கப்பட்டது.
இப்படியாக மொத்தம் 2 கோடி இணைப்புகள் கொடுக்க தயார் நிலையில் உள்ளன. மொத்தமாக 8 கோடி இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இவற்றில் 80-90 சதவீத இணைப்புகள் போலியானவை என்பதுதான் வேதனையான விஷயம். இந்தத் திட்டத்தில் இன்னொரு தோல்வியும் இருக்கிறது.
சமையலறைக்கு வெளியே சிலிண்டர்
உஜ்வாலா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன், அதற்கான ஆய்வறிக்கை தயார் செய்து தருமாறு 2015-ல் கிரிசில் ரேட்டிங் நிறுவனத்திடம் அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், கிரிசில் ஆய்வறிக்கையைக் கொடுப்பதற்கு முன்பே அவசர அவசரமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது அரசு. 2017ல் தான் கிரிசில் அமைப்பு தனது அறிக்கையைச் சமர்பித்தது. அதில் 37 சதவீத குடும்பங்கள் சமையலுக்கான எரிபொருளை இலவசமாகப் பெறுகிறார்கள். அதாவது விறகு 35%, வறட்டி 76%, 88% பிற எரிபொருள்இலவசமாகப் பெறுகிறார்கள் என்றது.
ஆனால், மானிய சிலிண்டர் விலையே ரூ. 500 ஆகிறது. இலவசமாகக் கிடைக்கும் எரிபொருளை விட்டுவிட்டு இவ்வளவு செலவு செய்து சமையலுக்கு சிலிண்டரைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. சராசரி குடும்பம் ஆண்டுக்கு 6 சிலிண்டர் பயன்படுத்துகிறது எனில், வருடத்துக்கு ரூ. 3000 வரை செலவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பிற எரிபொருள்களை காசு கொடுத்து பெறுபவர்கள் தான் சிலிண்டருக்கு மாற தயாராக இருக்கிறார்கள். அவர்கள் கூட அதிகபட்சம் செலவு செய்யக் கூடிய தொகை ரூ. 354 என்று அறிக்கையில் கூறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏறும்போது தொடர்ந்து சிலிண்டர் விலையும் ஏற்றம் காணும். இதுவும் ஒரு சிக்கலாகப் பார்க்கப்பட்டது.
எனவே இந்தத் திட்டத்தின் கீழ் 95 சதவீத குடும்பங்கள் சிலிண்டர் எரிவாயுவுக்கு மாறுவது கடினம் என்றது. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு அரசு சிலிண்டர் விலையைக் குறைக்கும் என்று பார்த்தால், அதற்கு மாறாக, அரசு வழங்கும் மானியத்தைக் குறைக்கவே முயற்சித்தது.
மேலும், தொடர்ந்து பயனாளிகள் சிலிண்டரை பயன்படுத்த வேண்டுமெனில் மானியத்தை வழங்குவது உறுதிசெய்யப்பட வேண்டும். முன்பு மானியம் போக மீதத்தொகையைச் செலுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. ஆனால், பாஜக அரசு, முழு தொகையைச் செலுத்தி பெற வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவதாகக் கூறியது. ஜன் தன் கணக்குகள் இதற்காகவே தொடங்கப்பட்டு அதில் மானியம் வரவு வைக்கப்பட்டன. ஆனால், பலருக்கு மானியம் கணக்கில் வருவது பெரிய பிரச்சினையாக இருந்தது. அப்படியே வந்தாலும், அது கவனத்துக்கு வரவில்லை.
இதுபோன்ற பல காரணங்களின் விளைவு, அரசு பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆராய்ச்சி குழு அளித்த புள்ளிவிவரங்கள் படி, உஜ்வாலா திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கேஸ் இணைப்புகள் வளர்ச்சி 16.26 சதவீதம் வளர்ச்சி கண்டன. ஆனால், சிலிண்டர் பயன்பாடு 9.83 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது. இந்த வளர்ச்சியானது 2014-15 நிதி ஆண்டில் பதிவான வளர்ச்சியைக் காட்டிலும் குறைவு. பெரும்பாலான உஜ்வாலா கணக்குகள் முதல் சிலிண்டர் வழங்கப்பட்டதோடு சரி, அதற்குப் பிறகு காலியான சிலிண்டரை மாற்றி புதிய சிலிண்டர் எடுக்கவே இல்லை.
2015-16ல் மத்திய தணிக்கை அமைப்பான சிஏஜி அறிக்கையின்படி ஆண்டுக்கு சராசரியாக ஒரு குடும்பம் 6.27 சிலிண்டர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமரின் இந்தத் திட்டத்துக்குப் பிறகு இந்த சராசரி பயன்பாடு இன்னும் குறைந்து 5.6 சிலிண்டருக்கு வந்துவிட்டது. மாதம் ஒரு தனிநபர் நுகரும் சராசரி எரிவாயு 2015-16ல் 9.1 கிலோவாக இருந்தது, 2017-ல் இது 8 கிலோவாக குறைந்துள்ளது.
ரூ. 25 ஆயிரம் கோடி நஷ்டம்
யாருக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதோ, அவர்கள் மீண்டும் விறகுக்கும், வறட்டிக்குமே திரும்பினார்கள். போலியாக இணைப்பு பெற்றவர்களுக்கும், தங்களிடமுள்ள இணைப்புகள் அனைத்திலும் தொடர்ந்து சிலிண்டர் வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. இதனால் செயல்படாத இணைப்புகளாக பெரும்பாலான உஜ்வாலா கேஸ் இணைப்புகள் மாறின. ஜனவரி 2018 நிலவரப்படி 3.82 கோடி இணைப்புகள் செயல்படாதவையாக உள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டத்தில் கொடுக்கப்பட்ட இணைப்புகளில் 50 சதவீதம் இது. அப்படியெனில் இந்தத் திட்டத்தை எப்படி அரசு வெற்றிகரமான திட்டம் என்று சொல்லிக்கொள்கிறது. இத்தனை கோடி இணைப்புகளுக்கும் அரசு கொடுத்த தலா ரூ. 3400 வீணாகிப் போனதுதான் மிச்சம். போலி இணைப்புகளின் எண்ணிக்கையைக் கூட விட்டுவிடலாம், செயல்படாத இணைப்புகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட, ஒரு இணைப்புக்கு ரூ. 3400 எனில், 3.82 கோடி இணைப்புகளுக்கு எவ்வளவு என்று கணக்கிட்டு பாருங்கள்.
இந்தத் திட்டம் முறையாக திட்டமிட்டபடி செயல்படுத்தாததால், மக்களின் வரிப்பணம், மானியத்தை விட்டுக்கொடுத்தவர்களின் பணம் என கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோக, சிலிண்டர் உருளை உற்பத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிலிண்டர் டெலிவரியில் பெரும் குழப்பங்களும் நடந்தன. இடையில் சில காலம் உஜ்வாலா திட்டத்தையே நிறுத்தி வைத்திருந்தன எண்ணெய் நிறுவனங்கள்.
சிலிண்டர் இணைப்புகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தால் போதாது, இதற்குப் பின்னால் இருக்கும் பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே இது வெற்றிகரமான திட்டமாக இருக்கும். இல்லையெனில் சமையலறைக்கு வெளியே இருக்கும் சிலிண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். நல்லதொரு திட்டம் இலக்கிலிருந்து விலகியிருக்கிறது. இதற்கு காரணம் திட்டத்தைச் செயல்படுத்தும் போது விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், அலட்சியமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய, எண்ணெய் நிறுவன அதிகாரிகள். ஆனால், களங்கம், இதை கவனித்து சரிசெய்ய தவறிய அரசுக்குத்தான்.
- saravanan.j@thehindutamil.co.in