இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி தனது ஷோரூம்களையும் வாடிக்கை யாளர்களின் விருப்பத்துக்கேற்ப மாற்றி வருகிறது. அந்த வகையில், தற்போது தனது நெக்ஸா ஷோரூம்களை பல ஹைடெக் வசதிகளுடன் மெருகேற்ற திட்டமிட்டுள்ளது.
2015 ஜூலையில் தனது முதல் நெக்ஸா ஷோரூமை மாருதி கொண்டுவந்தது. இந்த ஷோரூமை தனது பிரீமியம் கார்களை விற்பதற்காகவே உருவாக்கியது. நெக்ஸா ஷோரூமில் முதல் முதலாக விற்கப்பட்ட கார் எஸ்-கிராஸ். அதன் பிறகு ஹேட்ச்பேக் கார்களான பலெனோ. பலெனோ ஆர் எஸ், இக்னிஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட செடான் காரான சியாஸ் ஆகியவற்றையும் நெக்ஸா ஷோரூமில் விற்பனை செய்துவருகிறது.
மாருதி தனது அரினா ஷோரூம்களில் அறிமுகப்படுத்தப்பட்டது போலவே நெக்ஸா ஷோரூம்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவத்தை மேலும் ரம்மியமாக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக தொடுதிரையுடன் கூடிய டேப்லட்கள், விர்ச்சுவல் ரியாலிட்டி, பிரத்யேகமான ‘பர்சனலைசேஷன் சோன்’ போன்ற அம்சங்களைக் கொண்டுவருகிறது. வாடிக்கையாளர்கள் டேப்லட்டுகளில் தங்களுக்குத் தேவையான கார்களையும், மாடல்களையும் பார்க்கலாம்.
அதேசமயம் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் நிஜமாகவே கார் ஓட்டும் அனுபவத்தையும் பெற முடியும். மேலும் பர்சனலைசேஷன் வசதிகள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கேற்ற வகையில் காரை பர்சனலைஸ் செய்துகொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு அம்சமான வசதிகளுடன் மேலும் புதுப்பொலிவுடன் தனது விற்பனை அனுபவத்தை மாற்றவிருக்கிறது மாருதி நிறுவனம்.