வணிக வீதி

கொடுப்பவர்களுக்கு, திரும்பவும் கிடைக்கும்...

ஆனந்த் கல்யாணராமன்

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி உதவிகளைத் திரட்டி வருகிறார்கள்.

நெருக்கடியான தருணங்களில் நம்மால் முடிந்ததைத் தாராளமாகக் கொடுத்து உதவலாம். ஏனெனில், கொடுக்கும் கைகளுக்கு, திரும்பவும் கிடைக்கும். நிதி உதவியாக வழங்கப்படும் தொகைக்கு வருமான வரி சட்டத்தில் பிரிவு 80ஜியில் வரிவிலக்கு பெறலாம்.

இந்த வரிவிலக்கைப் பெறுவதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வரிவிலக்கு பெறும் தகுதி

எல்லா நன்கொடைகளுக்கும் 80ஜி பிரிவில் வரிவிலக்கு கிடைக்காது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் நிதித் திரட்டல்களுக்கு நன்கொடை வழங்கினால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும்.

எனவே நன்கொடை வழங்குவதற்கு முன் அந்த நிறுவனம் 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்குப் பெறும் தகுதியைத் தருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். பெரும்பாலும் நிறுவனங்கள் அந்தத் தகவலை தாங்களாகவே கொடுப்பார்கள். இல்லையென்றால் நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழைப் பார்த்தால் தெரிந்துவிடும். 

சில நிறுவனங்கள், நிதியைத் திரட்டி அதை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் அல்லது நிதித் திரட்டு திட்டத்திடம் ஒப்படைக்கும். உதாரணத்துக்கு கஜா நிவாரணத்துக்கு “The Hindu Relief Fund” திரட்டப்பட்டது. இந்த நிதி தமிழ்நாடு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும். இந்த நிதி 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்குப் பெற அங்கீகரிக்கப்பட்டது.

இந்த முறையில் நன்கொடை அளித்தாலும் வரி விலக்குக்கு விண்ணப்பிக்கலாம். 80ஜி பிரிவில் வரிவிலக்குப் பெற தகுதியுள்ள நிறுவனங்கள், நிதி திட்டங்கள் பட்டியலைhttps://www.incometaxindia.gov.in/Pages/acts/income-tax-act.aspx என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு இல்லை. ஆனால் 80ஜிஜிசி பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம். அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கும் 80ஜி பிரிவின் கீழ் வரிவிலக்கு இல்லை. பணமாகக் கொடுத்தால்தான் வரிவிலக்குப் பெற முடியும். பொருள்களாகக் கொடுத்தால் அதற்கு வரிவிலக்குப் பெறமுடியாது. எனவே வரிவிலக்கு தேவையெனில் பணமாகக் கொடுக்க வேண்டும்.

மேலும் ரொக்கமாக ரூ. 2000க்கு மேல் கொடுத்தால் 2017-18 நிதி ஆண்டிலிருந்து வரிவிலக்குப் பெற தகுதி இல்லை. முன்பு இந்த வரம்பு ரூ. 10 ஆயிரமாக இருந்தது. ரூ. 2000க்கு மேல் நன்கொடை வழங்கினால், காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது வங்கிப் பரிவர்த்தனையாகவோ வழங்கலாம். 

வரிவிலக்கு வரம்புகள்

நன்கொடை வழங்க எந்த வரம்பும் இல்லை. ஆனால், வரிவிலக்குப் பெறவரம்பு உண்டு. நிறுவனத்தைப் பொறுத்து வரிவிலக்குப் பெறுவதற்கான வரம்புகள் மாறும். அரசு சார் நிறுவனங்களுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிவிலக்குக்குத் தகுதி உண்டு. அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கும் நன்கொடைகள் பொதுவாக 50 சதவீத நன்கொடை தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு தகுதி உண்டு.  இதுவும் சில சமயங்களில் சரிசெய்யப்பட்ட பிறகான மொத்த வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மட்டுமே வரி விலக்கு பெறும் தகுதி கிடைக்கும். 

சரிசெய்யப்பட்ட பிறகான மொத்த வருமானம் என்பது 80ஜி பிரிவு தவிர்த்து பிற விலக்குகள் போக இருக்கும் வருமானம். அதாவது 80சி பிரிவில் ரூ. 1.5 லட்சம் வரையிலான இபிஎப், பிபிஎப் போன்ற முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு, மற்றும் பிற நீண்டகால மூலதன ஆதாய வருமானம் போன்றவற்றை கழித்த பிறகான வருமானம் ஆகும்.

முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு எந்தவித வரம்பும் இல்லாமல் 100 சதவீத வரிவிலக்குக்குத் தகுதி உண்டு. உதாரணத்துக்கு, உங்களுடைய வருமானம் ரூ. 15 லட்சம். அதில் ரூ. 1.5 லட்சம் பிபிஎப்-ல் முதலீடு செய்கிறீர்கள் எனில்.

80சி பிரிவில் வரிவிலக்கு என்பதால், உங்களுடைய சரிசெய்யப்பட்ட வருமானம் ரூ. 13.5 லட்சம். இதில் அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் நன்கொடை வழங்குகிறீர்கள். 100 சதவீத வரிவிலக்குக்குத் தகுதி உண்டு.

எனவே வருமான வரிக் கணக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்படும் வருமானம் ரூ. 11.5 லட்சம். ஒருவேளை உங்களுடைய நன்கொடைக்கு சரிசெய்யப்பட்ட வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மட்டுமே வரிவிலக்கு உண்டு எனில், ரூ. 13.5 லட்சத்தில் 10 சதவீதம் ரூ. 1,35,000 மட்டுமே வரிவிலக்குக்கு தகுதியுடையதாகும்.

வரிவிலக்கு பெறுவது எப்படி?

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் மாதாந்திர வரிக் கணக்கிடுதலில் 80ஜி பிரிவு நன்கொடைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே, நீங்கள்தான் உங்களுடைய வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது நன்கொடை குறித்த விவரங்களைக் கொடுத்து வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

அதற்கு நன்கொடை வழங்கும்போது, முத்திரையிடப்பட்ட ரசீது கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். அந்த ரசீதில் நிறுவனத்தின் பதிவு எண், அதன் ஆயுட்காலம், பான் எண், 80ஜி பிரிவில் தகுதியுடைய நன்கொடையா, கொடையாளர் பெயர், முகவரி, நன்கொடை தொகை ஆகிய விவரங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வரிவிலக்குக்கு விண்ணப்பிக்க இந்த விவரங்கள் தேவைப்படலாம். 

- anand.k@thehindu.co.in

SCROLL FOR NEXT