வணிக வீதி

2 மாடல் பெனலி மோட்டார் சைக்கிள் அறிமுகம்

செய்திப்பிரிவு

இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பெனலி இரண்டு புதிய மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. டிஆர்கே 502 மற்றும் டிஆர்கே 502 எக்ஸ் ஆகிய இரண்டு மாடல்களும் புத்தாண்டில் இந்திய சாலைகளில் வலம் வர உள்ளன. இந்திய சாலைகளில் இதன் செயல்பாடு குறித்து கடந்த நவம்பரிலிருந்தே இந்நிறுவனம் சோதித்து பார்த்தது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் முதல் முறையாக இந்த சாகச பயணத்துக்கேற்ற மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது இந்நிறுவனத்தின் இந்திய கூட்டாளியாக டிஎஸ்கே குழுமம் இருந்தது. ஆனால் நிதிநெருக்கடி காரணமாக டிஎஸ்கே குழுமம் பெரும் சிக்கலை எதிர்கொண்டது.

இதனால் புதிய பங்குதாரரை தேட வேண்டிய கட்டாயத்துக்கு பெனலி தள்ளப்பட்டது. சில மாதங்களுக்கு முன்புதான் ஆதீஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா நிறுவனத்துடன் பெனலி கூட்டு சேர்ந்தது. இதையடுத்தே புது மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ஆதீஷ்வர் நிறுவனமானது ஹைதராபாதைச் சேர்ந்த மஹாவீர் குழும நிறுவனமாகும்.

டிஆர்கே 502 மாடல் மோட்டார் சைக்கிள் 499.6 சிசி திறன் கொண்டது. லிக்விட் கூல்டு இன்ஜின், 6 கியர்களைக்கொண்டதாக இது வந்துள்ளது. இதில் வயர் ஸ்போக் சக்கரம் இருப்பது சிறப்பாகும். ஏபிஎஸ் வசதி மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் ஆகியன இருப்பது கூடுதல் சிறப்பு.  இது 47.6 ஹெச்பி திறன், 8,500 ஆர்பிஎம் மற்றும் 45 நியூட்டன் மீட்டர் திறனை வெளிப்படுத்துவது இதன் சிறப்பாகும்.

இரண்டு மாடலின் பெட்ரோல் டேங்க் 20 லிட்டர் கொள்ளளவு கொண்டது. டிஆர்கே 502 மாடல் 213 கிலோ எடை கொண்டது. இவற்றின் விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை இருக்கும். சாகசப் பிரியர்களுக்கு புத்தாண்டில் பெனலி வரவு பெரும் உற்சாகம் தருவதாய் நிச்சயம் இருக்கும்.

SCROLL FOR NEXT