வணிக வீதி

புத்தாண்டில் புதுப் பொலிவோடு வருகிறது மாருதி வேகன் ஆர்

செய்திப்பிரிவு

கார் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் புத்தாண்டில் தனது வேகன் ஆர் மாடலில் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை அறிமுகம் செய்கிறது. ஜனவரி 23-ம் தேதி இந்தக் கார் அறிமுகம் ஆகிறது. இது தனது வழக்கமான ஏரினா விற்பனையகம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இது முந்தைய மாடலை விட சற்று நீளம் அதிகமானது. இரண்டாவது வரிசையில் அமர்பவர்களுக்கு அதிக இடவசதி இருக்கும் வகையில் இதன் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை சாயும் தன்மையோடு (ரெக்லைனிங்) வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு தேவைப்படும் போது காரினுள்ளேயே இதைபடுக்கை போல சாய்த்து ஓய்வெடுத்துக் கொள்ள முடியும். இதன் முகப்பு விளக்கு வட்ட வடிவிலும், மேற்கூரை எர்டிகாவைப் போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இதன் வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இதன் பின்புற விளக்குகள் எஸ்யுவி போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளன.

முந்தைய மாடல் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் இது தயாரானாலும், கிராஷ் டெஸ்ட் (விபத்து சோதனை) பாதுகாப்பு விதிகளை உறுதி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இதிலும் தொடரும். இதில் ஆட்டோமேடிக் வசதி கொண்ட மாடலும் அறிமுகமாகிறது. ஸ்மார்ட்பிளே தொடு திரை கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இதில் உள்ளன. புத்தாண்டில் வேகன் ஆர் மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்து தனது கணக்கைத் தொடங்க உள்ளது மாருதி சுஸுகி.

SCROLL FOR NEXT