கார்களின் செயல்திறன் ஒரு புறம் அளவிடப்படுகிறது என்றாலும், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை சர்வதேச அளவில் மதிப்பீட்டு நிறுவனங்கள் நிகழ்த்தும் விபத்து சோதனை மூலம்தான் தெரியவரும். அந்த வரிசையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய வரவான மராஸோ நான்கு ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான என்சிஏபி நடத்திய விபத்து சோதனையில் பெரியவர்களின் பாதுகாப்பு அம்சங்களில் 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளை எடுத்துள்ளது மராஸோ. அதேசமயம் குழந்தைகள் பாதுகாப்புக்கான 49 புள்ளிகளில் 22.22 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
அனைத்து மாடல் மராஸோவிலும் முன்புறத்தில் 2 உயிர் காக்கும் ஏர் பேக்குகள் உள்ளன. ஏபிஎஸ், டிரைவர் சீட் பெல்ட் அணிவதை அறிவுறுத்தும் தன்மை, முன் இருக்கையில் அமர்வோரின் சீட் பெல்ட் நெகிழ்வுத் தன்மை, ஐசோஃபெக்ஸ் ஆன்கரேஜஸ் உள்ளிட்டவை இதில் உள்ள அம்சங்களாகும். இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இந்த காருக்கு நான்கு நட்சத்திர குறியீடு பெற வழிவகுத்துள்ளது.
அதேசமயம் குழந்தைகளுக்கான முன்னோக்கிய இருக்கை போதிய அளவு பாதுகாப்பானதாக இல்லை, இது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தலையில் அடிபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனால் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் இத்தயாரிப்பு 2 நட்சத்திர குறியீட்டை பெற்றுள்ளது.
மராஸோ கார் விலை ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.90 லட்சம் வரையாகும். அறிமுக சலுகையாக விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தாண்டில் விலை உயரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 முதல் 8 பேர் சவுகர்யமாக பயணிக்கும் இத்தகைய பாதுகாப்பான வாகனத்தை ஆண்டு இறுதிக்குள் குறைந்த விலையில் வாங்கி பயனடையலாமே.