வணிக வீதி

புத்தாண்டில் வருகிறது பென்ஸ் வி கிளாஸ்

செய்திப்பிரிவு

சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புத்தாண்டில் வி-கிளாஸ் மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது. பன்னோக்கு பயன்பாட்டு வாகனமாக (எம்பிவி) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் கார் 2014-ம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

தற்போது ஐரோப்பாவில் இது மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது. இந்தியாவில் இந்த மாடல் காரை இறக்குமதி (சிபியு) செய்து விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சொகுசு எம்பிவி வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் இதை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இந்தப் பிரிவில் ஆர் கிளாஸ் மற்றும் எம்பி100 மற்றும் எம்பி 140 ரக மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக எம்பிவி ரகத்தை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் முனைப்பில் மெர்சிடஸ் பென்ஸ் உள்ளது.

இப்புதிய மாடல் 5,170 மி.மீ. நீளம் கொண்டது. இதில் விருப்ப அடிப்படையில் 5,370 மி.மீ. காரையும் தேர்வு செய்யலாம். இதில் பின் இருக்கை பயணிகளுக்கு தூங்கும் வசதி கொண்ட மாடலும் உள்ளது. இது 2 லிட்டர் நான்கு சிலிண்டர் உள்ள இன்ஜினைக் கொண்டது. டீசல் இன்ஜினாக இருந்தபோதிலும் பாரத் புகை விதி 6-க்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 194 ஹெச்பி திறன் மற்றும் 400 நியூட்டன் மீட்டர் டார்க் அளவை வெளிப்படுத்தக் கூடியது.

டிரைவர் கண்ணயர்ந்தால் அதைக் கண்டுபிடிக்கும் நுட்பமும் இதில் உள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சொகுசு வாகனமாக வர உள்ள இந்த எம்பிவி-யின் விலை ரூ. 80 லட்சம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT