வணிக வீதி

அலசல்: நீதிமன்றம் தலையிட்டால்தான் தீர்வா?

செய்திப்பிரிவு

மேலே உள்ள படத்தை பாருங்கள். ஆட்டோக்களும், கார்களும் விரைந்து செல்லும் சாலையின் நடுவே மண்வெட்டி கொண்டு சாலையை செப்பனிடும் இவர், பொதுப்பணித்துறை ஊழியர் அல்ல. குண்டும் குழியுமான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது உயிரிழந்த தனது 16 வயது மகனின் நிலை மற்றவர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக சாலையில் உள்ள பள்ளங்களை மூடி வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பள்ளங்களை மூடியுள்ளார் காய்கறி வியாபாரியான ததோராவ் பில்ஹோர். மும்பை நெடுஞ்சாலையில் ஏதாவது ஓரிடத்தில் இப்போதும் இவரைப் பார்க்கலாம். கதையைக் கேட்டாலே கண்கள் குளமாகிறதா?

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், போரில் உயிரிழந்த ஜவான்கள் எண்ணிக்கையை விட, மோசமான சாலைகளால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தியாவில் நான்கு நிமிஷத்துக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்.  தினசரி 16 குழந்தைகள் சாலை விபத்தில் சிக்கி உயிரை விடுகின்றன.

தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு உயிரிழக்கும் பள்ளிச் சிறுவர்களின் எண்ணிக்கை 5. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்  சாலை விபத்தில் ஒரு மணி நேரத்துக்கு இரண்டு பேர் உயிரிழக்கின்றனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிமன்றம் இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று கேள்வியெழுப்பியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக 15 ஆயிரம் விபத்து நிகழ்ந்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

இவற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தீவிரவாத, பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர், எல்லையில் எதிரிகளிடம் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது நீதிபதி தீபக் மற்றும் ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு.

இந்த குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே கடந்த ஜூலை மாதம், இதுபோன்று சாலை மோசமாக இருப்பதன் உண்மையான காரணத்தைக் கண்டறியுமாறு உச்ச நீதிமன்றம் குழுவைக் கேட்டுக் கொண்டது. அத்துடன் இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு உரிய தீர்வுகளை அளிக்குமாறும் அறிவுறுத்தியது.

பொதுவாக வாகனங்கள் சாலை வரி செலுத்துகின்றன. நெடுஞ்சாலைகளில் சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் சாலையை பராமரிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்?

ஒரு சிறு தூறல் மழை பெய்தாலே நம்ம ஊர் சாலைகள் யுத்த பூமி போல காட்சி தருகின்றன. சாலைகள் அமைப்பதில் டெண்டர் விடுவதில் அனைத்து மாநிலங்களிலும் ஊழல்  மலிந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. எந்த ஒரு பொருளுக்கும் உத்தரவாதம் தரமுடியும். அதைப் போல ஒரு சாலையில் நாளொன்றுக்கு இத்தனை வாகனங்கள் செல்லுமாயின் அதை தாக்குப்பிடிக்கும் வகையில் சாலைகள் அமைக்க நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையா என்ற கேள்வி எழுவது இயல்பே.

உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தீர்ப்பு கூறுவது ஒருபுறமிருக்கட்டும். நமக்கும் இதில் பொறுப்பு உள்ளது என  அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உணராதவரையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மதிப்பு இருக்குமா?

SCROLL FOR NEXT