வணிக வீதி

அலசல்: விவசாயிகளுக்கு மவுனம் தான் பதிலா?

செய்திப்பிரிவு

அகில இந்திய கிசான் சங்கம் ஒருங்கிணைப்பில், கடந்த வாரம் இந்திய முழுவதுமிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்றுதிரண்டு டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கடந்த ஒன்றரை வருடத்தில் விவசாயிகள் நடத்தும் நான்காவது போராட்டம்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எத்தனை போராட்டங்களை விவசாயிகள் நடத்தினாலும் அவர்களுக்கு இந்த அரசு மவுனத்தை மட்டுமே பதிலாகக் கொடுக்கிறது.

பிரதமர் மோடி தங்கள் ஆட்சியில் விவசாயிகள் இரட்டை லாபம் அடைவார்கள் என்று கூறினார். இரட்டை லாபம் கிடைத்திருந்தால் விவசாயிகள் ஏன் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். பாஜக கூட்டணி அரசு 2014ல் பதவியேற்றதிலிருந்து விவசாயிகளுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால், அனைத்தும் வெறும் பிரச்சாரங்களாகவே முடிந்துவிட்டது என்பதுதான் உண்மை.

தேர்தலின் போது பாஜக வாக்குறுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது ‘விவசாயத்துக்கான உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் கிடைக்க வழி வகை செய்யப்படும்' என்பது. ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என உச்ச நீதிமன்றத்தில் கூறிவிட்டது மோடி அரசு.

நிதியமைச்சர் அருண்ஜேட்லி இதையே வேறு மாதிரி மாற்றி, மோடி அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையைக் கொடுத்ததாக அறிவித்தார். ஆனால்,  உண்மையைச் சொன்னால் அரசு கொடுத்த குறைந்தபட்ச கொள்முதல் விலை 20-40 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது.

பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்‌ஷன் அபியான் திட்டம் விவசாயிகளுக்கு சரியான விலையை வழங்கவில்லை. நீர்ப்பாசன திட்டங்களில் நிறைவு விகிதம் வெறும் 10 சதவீதம். பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்திலும் 10 சதவீத பயனாளிகள்தான் பயிர்க்கடன் பெற்றிருக்கிறார்கள். தேசிய வேளாண்மைச் சந்தை திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இப்படி அரசின் ஒவ்வொரு திட்டமும் சொல்லப்பட்டதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குமான இடைவெளியில்தான், விவசாயிகள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு நெருக்கடியான சமயங்களில் ஆதரவு தராமல் அரசுகள் அலைக்கழிக்கின்றன. தொடர்ந்து உணவுப் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது. ஆனால், விவசாயிகளுக்குச் சென்று சேரும் விலையில் ஏற்றம் என்பதே இருப்பதில்லை. எங்குதான் பிரச்சினை நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியாத சூழலில் தான் விவசாயத்துறையே அல்லாடிக்கொண்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய ஆணையம் பரிந்துரைத்த விலையை அறிவிக்க வேண்டும் என்பதுதான். விவசாயிகளின் கோரிக்கைகளைக் காதில் வாங்காமல், அரசு தன் இஷ்டத்துக்கு அறிவிப்புகளை அள்ளிவிடுகிறது. அதை பிரம்மாண்டமான மார்க்கெட்டிங் உத்தியால் மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுகிறது.

ஆனால், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் யாருக்குப் போய் சேர வேண்டுமோ சேர்வதில்லை. இதற்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? வழக்கம்போல பிரதமர் அமைதி காத்துக்கொண்டுதான் இருக்கிறார். அரசிடமிருந்து பதிலை வரவழைக்க அவர்கள் தங்கள் கோவணத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்கள். நிர்வாண போராட்டம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். இதைத்தான் அரசும் விரும்புகிறதோ என்னவோ?

SCROLL FOR NEXT