நீங்கள் முகநூலில் இருக்கிறீர்களா? நம் காலத்தில் நடந்துள்ள மிகப் பெரிய சமூக வலைதளப் புரட்சி அல்லவா இது? சமீபத்திய புள்ளிவிபரத்தின்படி ஒரு நாளுக்கு சராசரியாக சுமார் 150 கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்களாம்.
இதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அவரது குரு, வழிகாட்டி (mentor) யார் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் அவர்! ஃபேஸ்புக் தொடங்கிய காலகட்டத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து நிறுவனத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மேலாண்மைக் கொள்கைகள், அணுகுமுறைகள் பற்றிப் பேசுவார்களாம். மார்க் குழப்பமான மனநிலையில் இருக்க நேர்ந்தால், ஸ்டீவ்ஸை அடுத்து என்ன செய்யலாம் எனக் கேட்பாராம்.
ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்தில், சில பிரச்சினைகள் வந்ததாகவும், அது சமயம் சிலர் அந்த நிறுவனத்தையே வாங்கி விட முயன்றதாகவும், அப்பொழுது ஸ்டீவ்ஸ் அவரை இந்தியாவில் நைனிடாலில் உள்ள கைன்சிதாம் கோவிலுக்கு போகச் சொன்னதாகவும் சொல்கிறார் அவர். ஸ்டீவ்ஸ் தானும் தனது ஆப்பிள் நிறுவனத்தில் அத்தகைய சவால்களை எதிர்கொண்டிருந்ததாகவும், அத்தருணங்களில், தான் அக்கோவிலுக்குச் சென்று மன அமைதியும், மனத் தெளிவும் பெற்றதாகவும் அறிவுறுத்தினாராம்!
2011ல் ஸ்டீவ்ஸ் இறந்த பொழுது, மார்க் தனது முகநூலில் பதிவிட்டதைப் பாருங்கள். ‘நம்மால் இந்த உலகை மாற்ற முடியும் எனக் காட்டியமைக்கு நன்றி. நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்தமைக்கு மிக்க நன்றி ஸ்டீவ்!’ இன்று நமது அன்றாட வாழ்வில் முகநூலின் தாக்கம், பங்கு என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.
அதை ஆரம்பித்தவருக்கு நடுவில் தடுமாற்றம் வந்த பொழுது, அவருக்குத் தன்னம்பிக்கை ஊட்ட, வழிகாட்ட, அவரை ஆற்றுப்படுத்த ஓர் ஆள் தேவைப்பட்டது. ஸ்டீவ்ஸ் அந்தப் பணியைக் கச்சிதமாகச் செய்தார். அதனால் ஃபேஸ்புக் பிழைத்தது; துளிர்த்தது; வளர்ந்தது.
‘வழிகாட்டுவது அல்லது ஆற்றுப்படுத்துவது என்பது பெரும் பொறுப்புமிக்க பணியாகும். ஆகையால் உங்களுக்கான ஆற்றுப்படுத்துபவரை மிக எச்சரிக்கையாகத் தேர்ந்தெடுங்கள். அதே போல் ஆற்றுப்படுத்துபவரும், தான் யாருக்கு வழிகாட்டியாக செயல்படுகிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிக ஆழமான நம்பிக்கையே இவ்வுறவுகளுக்கான அடித்தளம்' என்கிறார் ஜிம்மி சின்எனும் அமெரிக்க மலையேறும் நிபுணர்.
சரி, மைக்ரோஸாஃட் நிறுவனத்தின் பில்கேட்ஸ்க்கும் ஒரு வழிகாட்டி உண்டாம். யார் தெரியுமா? பெர்க்ஷெர் ஹாத்வேயின் முதன்மை செயல் அதிகாரியும், இந்த நூற்றாண்டின் சிறந்த பங்குச் சந்தை நிபுணராகக் கருதப்படுபவருமான வாரன் பஃபெட் தான் அவர். இருவரும் முதலில் சந்தித்துக் கொண்டது பில்கேட்ஸின் அன்னை ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்தில்கலந்து கொண்ட பொழுதுதானாம்.
பின்னர் அடிக்கடி சந்தித்து வியாபாரத்தைப்பெருக்குவது பற்றியும், எப்படியெல்லாம் தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யலாம் என்பது குறித்தும் கலந்து பேசுவார்களாம்! ‘பஃபெட் தனி, அவரைப் போல் வேறொருவர் கிடையாது' என கேட்ஸ் அவருக்கு புகழாரம் சூட்டுகிறார்.
இன்று மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயங்குதளம் உலகின் கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களை இயக்குகிறது. மைக்ரோஸாஃட் ஆஃபீஸ் நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம். உலகின் மிகப் பெரும் மென்பொருள் நிறுவனமாக உருவெடுத்து ள்ளது பில் கேட்ஸின் மைக்ரோஸாஃட். ஆனால் அந்த பில் கேட்ஸுக்கும் வழிகாட்ட, உற்சாகப்படுத்த, ஆற்றுப்படுத்த ஒருவர் தேவைப்பட்டிருக்கிறார்; கிடைத்தும் இருக்கிறார். அதனால் தான் இந்த அற்புத வளர்ச்சி!
‘உங்களை ஆற்றுப்படுத்தும் குரு, உங்களுள் உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் திறமைகளையும் ஆற்றல்களையும் கண்டுகொண்டு, அவற்றை வெளிக் கொணரக் கூடியவர் ஆவார்' என்கிறார் கனடாவின் பேச்சாளர் பாப் பிராக்டர்! ஐயா, ஆங்கிலத்தில் ‘friend, philosopher and guide ' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள்.
நாம் குழப்பத்தில் இருக்கும் பொழுது, அடுத்து என்ன செய்யலாம் என்று தவிக்கும் தருணங்களில் மட்டுமல்ல, நாம் வெற்றி மீது வெற்றி காணும் பொழுதும், கர்வம் வேகமாகத் தலைக்கேறும் பொழுதும் கூட, நமக்கு அறிவுரை சொல்ல, நம்மை வழிநடத்த சரியான வழிகாட்டிகள் வேண்டும். அவர்கள் நமது நலம் விரும்பும் நண்பர்களாக இருந்தால் மட்டும் போதாது. அத்துடன் அதற்குரிய கெட்டிக்காரத்தனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில், விலை உயர்ந்த உடைகளை வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனம் Rent the Runway. அதன் நிறுவனரான திருமதி ஜென்னிஃபர் ஹைமென் சொல்வதைக் கேளுங்கள். ‘உங்களின் வழிகாட்டி உங்களை விட வயதிலோ, அனுபவத்திலோ மூத்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உங்களை புரிந்து கொண்டவராக, உங்கள் நலனில் அக்கறை கொண்டவராக, உங்கள் வளர்ச்சியைச் செதுக்குபவராக இருந்தால் போதும்' என்கிறார்.
‘நம்மிடம் உடல் வலிமையோ, பேச்சுத் திறனோ இல்லா விட்டாலும், திறமையான நல்ல நண்பரின் வழிகாட்டுதல் இருந்தால் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்' என்கிறார் சாணக்கியர்!
நீங்களும் இதை அனுபவத்தில் பார்த்து இருப்பீர்களே!
- somaiah.veerappan@gmail.com