வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: எதிரியின் பலவீனம்... நம் ஆயுதம்!

சோம.வீரப்பன்

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு என்ன? அதாவது நீங்கள் உற்சாகமாக விளையாடுவது, ரசித்துப் பார்ப்பது, கிரிக்கெட்டா, கால்பந்தா, பாட்மின்டனா, கபடியா? அல்லது கேரம் போர்டா, சதுரங்கமா? எந்த விளையாட்டாக இருந்தாலும் வெற்றி தானே குறிக்கோள்?

விளையாட்டோ, போர்க்களமோ, வணிகமோ,  எதிரியை வீழ்த்த உங்கள் திறமைகள் உதவுவது போலவே எதிரியின் குறைகளும் உதவும். கபடியில் பார்த்து இருப்பீர்கள். எதிர் அணியில் யார் எளிதில் விழுவார் எனப்பார்த்து அவரைத் தானே முதலில் தொட்டு வெளியேற்றுவார்கள். கேரம் போர்டில் எதிராளிக்கு எந்த இடத்தில் காய் இருந்தால் அடிப்பது கடினமோ, அங்கே போய் காய்களை தள்ளித் தள்ளி ஒதுக்கி வைப்பவர்களைப் பார்த்து இருப்பீர்களே?

'எதிரியின் பலவீீனத்தைத் தெரிந்து கொண்ட பின், அதே இடத்தில் அடித்து அடித்து நொறுக்க வேண்டும்' என்கிறார் அமெரிக்காவின் கால்பந்து, கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் பயிற்சியாளரான ஜான் ஹீஸ்மான்.

எம்ஜிஆர் நடித்த நம் நாடு படத்தில் ரங்காராவ், அசோகன், தங்கவேலு என  வில்லன்கள் கூட்டாகப் பல சதிகள் செய்வார்கள். அவர்களைப் பிடிக்க எம்ஜிஆர் ஒரு பெரிய சர்வதேச வில்லனைப் போல வேடமிட்டு ஒரு லட்சம் பணம் கொடுத்தால் ஐந்து லட்சம் மதிப்புள்ள கள்ளத் தங்கம் கொடுப்பதாகச் சொல்வார். உடனே அதற்கான மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பெற்றுவிட வேண்டுமென்று ஆசையில் அவர்கள் மூவரும் அவரைக் கெஞ்சுவார்கள்.

ஆனால் மக்கள் திலகமோ, அதற்கெல்லாம் உங்களுக்குத் தகுதி கிடையாது. அதற்குப் பெரிய பெரிய ஏமாற்று வேலை, கொள்ளை, கொலையெல்லாம் செய்திருக்க வேண்டுமென்று சொல்வார். உடனே அவர்கள் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் செய்த பஞ்சமாபாதகங்களை அடுக்குவார்கள்!

தனுஷ் நடித்த உத்தம புத்திரன் படத்தையும் இதே போல் ரசித்திருப்பீர்கள். இரண்டு பத்தாம் பசலி பணக்கார  முரடர்களாக குடுமியுடன்  ஜெயபிரகாஷும், ஆஷிஷ் வித்யார்த்தியும். அமெரிக்காவில் இருந்து சம்பந்தம் தேடி வரும் கோடீஸ்வரராக பாக்கியராஜும் நடித்திருப்பார்கள். தனுஷ் அந்த இருவரையும், பாக்கியராஜுடன் சேர்ந்து கொண்டு திருத்துவதை சுவாரஸ்யமாகச் சொல்லி இருப்பார்கள்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே ஒரு உண்மையை வேடிக்கையாக எடுத்துச் சொல்கின்றன. பணம் பணம் என்று அலைகின்றவனை அதையே தூண்டிலாக வைத்துப் பிடித்து விடலாம். மிகப் பொல்லாதவர்களைக் கூட, அபரிமிதமான கெட்டிக்காரர்களைக் கூட அவர்கள் எதில் மயங்குவார்கள், எதற்கு விழுவார்கள் எனத் தெரிந்து கொண்டால், அதனாலேயே அவர்களை வென்று விடலாம்.

‘உங்கள் எதிரி எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்றால் அவரை எரிச்சல் மூட்டி கவிழ்த்து விடுங்கள்' என்கிறார் சீன அறிஞர் சன் ஜூ. அண்ணே, அடி ஒன்றாக இருந்தாலும், அடிக்கிற இடத்தைப் பொறுத்தது அல்லவா வலி? அதனால் தான் சிலர், மற்றவர்களுடைய குறைகளை, பலவீனங்களை மனத்தில் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். அவர்களைச் சந்திக்கும் பொழுது, பேசும் பொழுது ஒவ்வொன்றாய் எடுத்து விடுவார்கள்!

இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடக்கும் பொழுது இந்த அணுகுமுறை உபயோகமானதாக இருக்கும். சம்பள உயர்வு, தவறு செய்தவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் போன்றவற்றில் பேச்சு வார்த்தை நடக்குமல்லவா?

அமெரிக்காவில், FBI-யின் பிணைக் கைதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் நிபுணரான கிலிஸ்டபர் வாஸ் சொல்வதைக் கேளுங்கள்.

‘பேச்சுவார்த்தைகளில், எதிராளியைக் கவிழ்ப்பதற்கு வழி, எல்லாம் தனது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதென அவனை நம்ப வைப்பது. எதிரியை ஒரு போதும்  நீங்கள் சொல்வதைச் சரியென ஏற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தாதீர்கள். ஏன், எப்படி என்பது போன்ற கேள்விகளைக் கேளுங்கள். இவற்றுக்குப் பதில் தேடித் தேடியே எதிரி ஓய்ந்து போய் விடுவான்'.

சமீபத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம், NCLT ஆணையின்படி, பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் ஒடிஷா, மஹாராஷ்டிரா, உத்திரப் பிரதேசத்தில் இருந்த 3 தொழிற்சாலைகளைத் தம் வசமாக்கிக் கொண்ட செய்தியைப் படித்து இருப்பீர்கள். கடந்த மே 15 ஒப்புதல் கிடைத்ததும், குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், கிடைத்தது கை நழுவி விடாமல் இருப்பதற்கும், மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மூன்றே நாட்களில் வங்கிக் கடன்களை அடைத்தார்களாம், புதிதாகப் பங்குகளை வெளியிட்டார்களாம். சட்டரீதியான ஒப்புதல்களைப் பெற்று அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளார்கள். இதற்காக டாடா ஸ்டீலின் உயரதிகாரிகள் பூஷன் ஸ்டீலின் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஹயாத் ஓட்டலில் முகாமிட்டார்களாம். அத்துடன் 35 அதிகாரிகள், அந்த 3 தொழிற் சாலைகளுக்கு அருகிலேயே காத்துக் கிடந்து, சரியான நேரத்தில் பாய்ந்தார்களாம். இந்தப் ‘படையெடுப்பு' முழு வெற்றியைத் தந்துள்ளது.

இதில் எதிரியின் குறையை நான் சொல்லணுமா? ‘நம் எதிரிகளுடைய பலவீனத்தைக் கண்டுபிடித்து, அதை ஆயுதமாகப் பயன் படுத்தி அவர்களை வீழ்த்தணும். அதே சமயம் நம்முடைய பலவீனத்தை எதிரிகளுக்குக் காட்டக் கூடாது' என்கிறார் சாணக்கியர்.

நல்ல யோசனை தானே?

- somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT