வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: இதையெல்லாம் போய் சொல்லலாமா?

சோம.வீரப்பன்

எனது வடநாட்டு  நண்பர் ஒருவரிடம், ஒரு விசித்திரமான பழக்கம். யாரைப் பார்த்தாலும் தனது கஷ்டங்களைச் சொல்ல ஆரம்பித்து விடுவார். தான் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பேச மாட்டார்.

மற்றவர்கள் தன் மேல் பச்சாதாபம் காட்டினால் அவருக்கு அதில் ஒரு தனி மகிழ்ச்சி. அவர் பெயரா?  எனக்கு என்ன, உங்கள் ஆசைப்படி குமார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாள்,டெல்லியில்  ஒரு கல்யாண வீட்டில் நாங்கள் நண்பர்கள் ஐந்து பேர் இரவு உணவை முடித்து விட்டு, பேசிக் கொண்டு இருந்தோம். எங்களைப் பார்த்து வேகமாக ஒரு நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார் குமார். நாங்கள் அமர்ந்திருந்த நாற்காலி வட்டத்திற்கு இடையில் தன் நாற்காலியைத் திணித்து விட்டு, அதில் உட்கார்ந்து கொண்டார்.

நாங்கள் கேட்காமலேயே, அன்று மாலை தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார் குமார். வீட்டை விட்டுக் கிளம்ப நேரமாகி விட்டதாம். மனைவி சேலை கட்ட தாமதமானது தான் காரணமாம். காரில் இவருடன் முன்பக்கம் அமர்ந்திருந்த அவர் மனைவி வழியெல்லாம் வாக்குவாதம் செய்து கொண்டே வந்தாராம். கரோல் பாக்கில் சிக்னலில் கார் காத்திருந்த பொழுது, இவர்கள் சண்டையைத் திறந்திருந்த காரின்  ஜன்னல் வழியே ஒரு  மோட்டார் சைக்கிள்காரர் முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

பச்சை விளக்கு விழுவதற்கு 10 நொடிகள் முன்பு சடாரென பைக்கை விட்டு இறங்கியவர், குமார் அருகில் வந்து,  ‘ஏண்டா இப்படி பெண்டாட்டியைப் படுத்துகிற?' என இந்தியில்  கத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் குமார் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஓர் அறை விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல், பைக்கை ஓட்டிக் கொண்டு போய் விட்டாராம்!

அப்பொழுது தான் அவர் கன்னத்தைக் கவனித்தோம். சிவந்து இருந்தது. அவர் மனைவி இது நடந்த பின்னும் இவர் மேல் பச்சாதாபப்படவில்லையாம். ‘நீங்கள் செய்யும் அட்டகாசங்களை அடக்க எங்க அண்ணன் இங்கு  இல்லையே என்று நினைத்தேன். நியாயத்தைக் கேட்கக் கடவு

ளாகப் பார்த்து அந்த நல்லவரை அனுப்பி விட்டார்' என்றாராம்! எங்களுக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் இணக்கமான தம்பதிகள் தான். அன்பான இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. அன்று ஏதோ இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அவ்வளவு தான். ஆனால் வேறு யாரும் பார்க்காத, வேறும் யாருக்கும் தெரியாத அந்த விஷயத்தைப் பல பேர் முன்னிலையில் சொல்லித் தன்னைத் தானே கேலிப் பொருள் ஆக்கிக் கொண்டு விட்டார் அந்த இந்திக்கார  குமார்.

சில கிண்டல்காரர்கள் இன்றும் அவரைப் பார்த்தால் தங்கள் கன்னத்தில் கை வைத்து ஜாடை செய்து அவரை சங்கடப்படுத்துவார்கள்! கவியரசு கண்ணதாசன் குழந்தையும் தெய்வமும் படத்திற்கு எழுதிய இந்தப் பாடல் வரிகளைத் தொலைக்காட்சியிலாவது கேட்டு ரசித்திருப்பீர்களே?

...நடந்ததெல்லாம் நினைப்பது துயரம் என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று... குமாரிடம் இருந்த கெட்ட பழக்கம் இது. தன் வியாபாரத்தில் இறக்கம் ஏற்பட்டாலும், பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டாலும் பார்த்தவர்களிடம் எல்லாம் அதைச் சொல்லிக் கொண்டு திரிவார்! அவர் இப்படிப் பினாத்துவது அவரது நலம் விரும்பும் நண்பர்களிடமோ, உதவ நினைக்கும் உறவினர்களிடமோ எனும் நிலையில் இருந்திருந்தாலாவது ஏதோ பலன் கிடைத்திருக்கும்.

ஆனால் போகிறவன் வருகிறவனிடம் எல்லாம் இவ்விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதால்  அவரது நிறுவனத்தின் பெயர் தான் கெட்டுப் போனது. உண்மை என்னவென்றால் இச்செய்தி பலர் வாய் மூலம் பரவியதால், அவரது வணிகத்தில் ஏற்பட்ட  நட்டங்கள் பல மடங்குதவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. இதனை குமாரின் போட்டியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சாதாரணப் பிரச்சினை, குமாரின் லொடலொடத்த வாயினால் பெரிய பிரச்சினைக்கு வழி வகுத்தது.

சரி, ‘நோவற்ற நொந்தது...' எனத் தொடங்கும் குறள் படித்தது உண்டா? ' நம் குறைபாடுகளை பகைவர்கள் முன் காட்டக்கூடாது, நம் துன்பத்தை  அதை உணராத நண்பர்களிடம் சொல்லக்கூடாது ' என்று வள்ளுவரும்  877வது குறளில்  இதையே தான் சொல்கிறார்!

இது பற்றி சாணக்கியர் சொல்வதைப் பாருங்கள். ‘நாம் இழந்த செல்வம், நமது சொந்த வாழ்வு சோகங்கள், மனைவி நடத்தையில் சந்தேகம், நமக்கு நடந்த இழிவான செயல் ஆகியவற்றை நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது ' என்பது  அவர் அறிவுரை!

உண்மை தானே? உங்கள் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதால் மனப்பளு குறையலாம். ஆனால் அதை ஆள் பார்த்து அல்லவா சொல்லணும். அத்துடன் சிலவற்றை யாரிடமும் சொல்லவே கூடாதல்லவா?

- somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT