வணிக வீதி

இ-ரிக்‌ஷா புரட்சியில் சீனாவை முந்தும் இந்தியா

செய்திப்பிரிவு

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால், இந்தியாவில் கார் பயன்பாட்டைப் பொறுத்தவரை எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு மிகக் குறைவாகவே இருந்துவருகிறது.

இதனால் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வகைக் கார்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டத் தயங்குகின்றன. எலெக்ட்ரிக் கார் பயன்பாட்டில் முன்னிலையில் சீனா உள்ளது. ஆண்டுக்கு 13 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகின்

றன. ஆனால் இந்தியாவில் வெறும் 6 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இதனை சீனா மூன்றே நாள்களில் விற்பனை செய்கின்றது. இப்படியான சூழலில் கார்களில் எலெக்ட்ரிக் வகைகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி  வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.

ஏனெனில், வாகன சந்தையில் உலக அளவில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. ஜிடிபியில் 7 சதவீதம் கார் சந்தையின் பங்களிப்பு இருக்கிறது. இதை இழக்க அரசு விரும்பாது.

எனவேதான், பொதுப் போக்குவரத்து மற்றும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் இவற்றின் பயன்பாடுதான் பெருமளவில் உள்ளது. இதில் முக்கியமாக ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அதிக அளவில் இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதால், அவற்றை எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அரசு தனது எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் இலக்கை எட்ட முடியும்.

ஏற்கெனவே ஆசியாவில் அதிகமான இ-ரிக்‌ஷாக்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் தற்போது 15 லட்சம் ஆட்டோக்கள் எலெக்ட்ரிக் வகைகளாக உள்ளன. இந்த எலெக்ட்ரிக் வகை ஆட்டோக்கள் காற்று மாசுபாட்டைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நிர்வகிப்பதற்கும் எளிதாக இருப்பதாக இதன் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இ-ரிக்‌ஷா உற்பத்தியில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கைனட்டிக் இன்ஜினீயரிங் ஈடுபட்டுள்ளன, இன்னும் சில  உள்ளூர் நிறுவனங்கள் சீனாவிடமிருந்து பாகங்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்துவருகின்றன. இ-ரிக்‌ஷாக்கள் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கிறது.

பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் ஆட்டோக்களைக் காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதனால், வட இந்திய நகரங்களில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் ஓட்டிக்கொண்டிருந்த பலரும் இ-ரிக்‌ஷாக்களுக்கு மாறிவருகின்றனர். இதன்மூலம் முன்பைவிட சவாரிகள் அதிகரித்து வருமானம் அதிகரித்திருப்பதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மாதத்துக்கு 11 ஆயிரம் இ-ரிக்‌ஷாக்கள் விற்பனை ஆகின்றன. இது 2021ல் 9சதவீதமாக வளர்ச்சியடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோ ரிக்‌ஷாக்களின் சந்தை மதிப்பு ரூ. 11 ஆயிரம் கோடி ஆகும்.

இந்த சந்தை முழுவதுமாக இ-ரிக்‌ஷாக்கள் சந்தையாக மாறினால் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியா அடைய வாய்ப்புள்ளது. இது இந்தியாவுக்கு அவசியமானதும்கூட. ஏனெனில், உலகின் மிக அதிக மாசுபாடான நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

தற்போது உபர், ஓலா போன்ற பயணிகள் வாகன சேவை நிறுவனங்கள் கூட இ-ரிக்‌ஷாக்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. புதுடெல்லியில் உபர் 800 இ-ரிக்‌ஷாக்களைப் பயன்படுத்தி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 10 ஆயிரம் இ-ரிக்‌ஷாக்களை ஓலா பயன்படுத்த இலக்கு வைத்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்குத் தடையாக இருப்பது போதுமான அளவில் சார்ஜிங் நிலையங்கள் இல்லாததுதான். கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 425 சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனை 2022க்குள் 2800 நிலையங்களாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. சில தனியார் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தாமே முன்வந்து சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. 

அரசும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்குத் தேவையான உட்கட்டமைப்புகளை அமைப்பதில் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது அதில் முக்கியமானது. மேலும் பொதுப் போக்குவரத்துகளில் மானிய விலையில் எலெக்ட்ரிக் பேருந்துகள் வழங்குவதும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடிவரை முதலீடு செய்ய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்தப்பட்டால் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காற்று மாசுபடுவது குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

SCROLL FOR NEXT