டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்ந்த பிறகு வங்கிகளில் டெபாசிட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், கடனுக்கான வட்டி விகிதம் குறைந்ததா என்றால் இல்லை. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாத பட்சத்திலும் தொடர்ந்து வங்கிக் கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஏற்கெனவே கடன் வாங்கியிருப்பவர்கள் தங்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதேசமயம், புதிதாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் இந்தச் சமயத்தில் வாங்குவது சரியானதாக இருக்குமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள் தாரளமாகக் களத்தில் இறங்கலாம்.
ஏனெனில், இனிவரும் மாதங்களில் வட்டி விகிதம் அதிகரிக்குமே தவிர குறைவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தற்போது ரிசர்வ் வங்கி எம்சிஎல்ஆர் (Marginal Cost of funds based Lending rate) அடிப்படையிலான வட்டி விகித நிர்ணய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளதால், வங்கிகள் இதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அதன்படி வங்கிகள் பெஞ்ச்மார்க் வட்டிவிகிதத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும். தற்போது 8.6 முதல் 8.8 சதவீதம் வரையிலான வட்டிவிகிதத்தில் வங்கிகள் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வாங்கலாம். மற்ற வங்கிகளை விட குறைவாக 8.55 சதவீத வட்டிவிகிதத்தில் வீட்டுக் கடன் வழங்குகிறது. ஆனால், இந்த வட்டி விகிதமான கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வழங்கப்படுகிறது. உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 760 மற்றும் அதற்கும் மேல் இருந்தால் இந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர, இந்தியன் வங்கி, கர்நாடகா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 8.6 சதவீத வட்டிவிகிதத்திலும், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் தேனா வங்கி 8.65 சதவீத வட்டிவிகிதத்திலும் வீட்டுக் கடன் வழங்குகின்றன.
ஐசிஐசிஐ வங்கி 9.1 சதவீதம், எஸ்பிஐ 8.9 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி 8.7 சதவீதம் என சற்று அதிகமான வட்டிவிகிதங்களில் வழங்குகின்றன. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் வங்கிகள் தற்போது நல்ல வட்டிவிகிதத்தில் கடன் வழங்குகின்றன.
கடன் வட்டி விகிதங்கள் உயர்வதற்கு வாய்ப்புள்ளதால், தற்போது குறைவான வட்டிவிகிதம் உள்ள இடத்தில் கடன்களை வாங்குவது சரியானதாக இருக்கும். மேலும் வட்டி விகிதங்கள் எம்சிஎல்ஆர் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், அதன் முதிர்வு காலத்தின் அடிப்படையில்தான் வட்டி விகிதமும் மாற்றியமைக்கப்படும். அதாவது, ஓராண்டு கால எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் எனில் ஆண்டுக்கு ஒருமுறைதான் வட்டிவிகிதம் மாற்றியமைக்கப்படும்.
பெரும்பாலான வீட்டுக் கடன்களின் வட்டிவிகிதங்கள் ஓராண்டுகால எம்சிஎல்ஆர் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சில வீட்டுக் கடன்களின் வட்டிவிகிதங்கள் ஆறு மாத கால அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் வட்டி விகித மாற்றமானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். கர்நாடகா வங்கி, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஆறு மாத கால எம்சிஎல்ஆர் அடிப்படையில் வட்டிவிகிதங்களை நிர்ணயித்துள்ளன.
நிலையான வட்டியா, மாறக்கூடிய வட்டியா எதைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் கவனம் வேண்டும். எதிர்காலத்தைக் கணிப்பவர்களுக்கு நிலையான வட்டிவிகிதம் சரியானதாக தெரியும். ஆனால், வட்டிவிகிதம் உயரும் வாய்ப்புள்ளது எனும்போது நிலையான வட்டிவிகிதத்தில் மாட்டிக்கொள்வது சரியானதாக இருக்காது.
வீட்டுக் கடன்கள் நீண்ட காலத்துக்கு இருப்பவை என்பதால், நிலையான வட்டிவிகிதத்தை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், வட்டிவிகிதம் குறையும் வாய்ப்புள்ளபோது அதன் பலனை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் நிலையான வட்டி விகிதத் திட்டங்களில் எதிர்கால இழப்புகளைச் சரிசெய்ய வங்கிகள் அதிக அளவிலான வட்டிவிகிதங்களையே நிர்ணயிக்கின்றன.
அவை மாறக்கூடிய வட்டிவிகிதங்களைக் காட்டிலும் 3 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். அவற்றில் இந்தியன் வங்கி, பின்பி ஆகியவை மட்டும் மாறக்கூடிய வட்டிவிகிதங்களைக் காட்டிலும் 0.5 சதவீதம் அதிகமாக நிலையான வட்டிவிகிதங்களை நிர்ணயித்துள்ளன.
வங்கிகளும், ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்களும் இரண்டு வட்டிவிகிதங்களும் கலந்த திட்டங்களையும் வைத்துள்ளன. அவை ஆரம்பத்தில் சில வருடங்கள் நிலையான வட்டிவிகிதத்தையும், பின்னர் மாற்றிக்கொள்ளும் வகையிலான வட்டிவிகித வசதியையும் தருகின்றன. ஏற்கெனவே கடன் வாங்கியிருப்பவர்கள், நிலையான அதிக வட்டிவிகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், அதனை மாறக்கூடிய குறைவான வட்டிவிகிதம் உள்ள கடனுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், அதற்கு முன் இதில் நமக்கு லாபமுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரே வங்கியில் கடனை மாற்ற விரும்பினால், மாற்றுவதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். வேறு வங்கிக்கு மாற்ற விரும்பினால், பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படும். எது செலவு குறைவாக இருக்கிறது என்பது முக்கியம். அதேசமயம் கடன் முடிவதற்கான மீதமுள்ள காலம் அதிகமாக இருந்தால் மட்டும் மாற்றும் முயற்சியை எடுக்க வேண்டும்.
- radhika.merwin@thehindu.co.in