வணிக வீதி

மெர்சிடஸ் பென்ஸ் சிஎல்எஸ் அறிமுகம்

செய்திப்பிரிவு

சொகுசு கார்கள் என்றாலே மெர்சிடஸ் பென்ஸ்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சர்வதேச அளவில் பிரபலமானது பென்ஸ். இந்நிறுவனம் தற்போது சிஎல்எஸ் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 84.70 லட்சமாகும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு சிஎல்எஸ் ரக கார்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. நான்கு கதவுகளைக் கொண்ட கூபே செடான் மாடலாக இது வந்தது. இந்தப் பிரிவில் தற்போது மூன்றாவது  தலைமுறை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்கள் கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்றன. தற்போது இந்த கார் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வூபிங் ரூஃப்லைன், பிரேம் இல்லாத கதவுகள் இதன் சிறப்பம்சங்களாகும்.  இ-கிளாஸ் பிளாட்பார்மில் இது தயாரானாலும் இது முந்தைய மாடலைக் காட்டிலும் அளவில் பெரியதாக உள்ளது. இது முந்தைய மாடலை விட 61 மி.மீ. நீளமாகவும், சக்கரம் 2,988 மி.மீ. அகலம் கொண்டதாகவும் வந்துள்ளது. பொருள்களை வைக்க 520 லிட்டர் இடவசதியும் உள்ளது. பயணிகள் சவுகர்யமாக அமர்வதற்கு ஏற்ற இடவசதி இதில் உள்ளது. இதில் 12.3 அங்குல தொடு திரை உள்ளது.

ஆப்பிள் கார் பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ செயல்பாடு இதில் உள்ளது. இதில் 13 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளது. மல்டி பீம் எல்இடி முகப்பு விளக்குகள் இதற்கு மெருகு சேர்க்கின்றன. பிஎஸ்-6 புகை விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் 2 லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டதாக வந்துள்ளது.

இதன் செயல்திறன் 245 ஹெச்பி மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் ஆகும். இதில் 9 ஆட்டோமேடிக் ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது. 100 கி.மீ. வேகத்தை 6.4 விநாடிகளில் தொட்டுவிட முடியும். இதில் அதிகபட்சம் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

SCROLL FOR NEXT