கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி ஆயுஷ்மான் பாரத் என்ற மிகப்பெரிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 10 கோடி குடும்பங்கள் இதனால் பலனடையும் என்று தெரிவித்தார். மூன்று மாதங்களில் எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்றார். இதோ ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இந்தத் திட்டத்தில் எப்படி பலனடைவது என்று தெரியாமல் 50 கோடி மக்களும் முழிக்கிறார்கள்.
சமூகப் பொருளாதார தகவல்களை வைத்து பயனாளிகளை அடையாளம் காண்போம் என்று இந்தத் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் கூறினார்கள். இங்குதான் இந்தத் திட்டம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகராமல் நிற்கிறது. பயனாளிகள் யார் என்பதை அடையாளம் காண்பதில் சிக்கல் இருப்பதுதான் காரணம்.
130 கோடி பேர் கொண்ட நாட்டில் அரசின் உதவி யாரைப் போய் சேர வேண்டுமோ அவர்களிடம் அதற்கான தகுதியை உறுதி செய்யும் சான்றிதழ்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. யாருக்கு இந்த உதவி அவசியமில்லையோ அவர்களிடம் இந்த உதவியைப் பெறுவதற்கான தகுதி சான்றிதழ்கள் உள்ளன. லஞ்சம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் தகுதிச்சான்றிதழ்கள் கிடைத்துவிடும் நிலை உள்ள நாட்டில் எதன் அடிப்படையில் சரியான பயனாளிகளை அடையாளம் காண முடியும். அரசாங்கப் பதிவுகளில் உள்ள சமூகப் பொருளாதார தகவல்கள் பெரும்பாலும் சரியானதாக இருப்பதில்லை.
ஆண்டு வருமானத்திலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து அனைத்திலும் தகவல்கள் முரண்பட்டதாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மேலும் இந்தத் திட்டத்தில் முறைப்படுத்தாத துறைகளில் ஈடுபட்டுள்ள வறுமைகோட்டுக்குக் கீழே உள்ள தொழிலாளர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களுடைய சரியான விவரங்கள் அரசிடம் இருப்பதற்கான வாய்ப்பும் குறைவுதான்.
அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளின் தரம் நாடே அறிந்ததுதான். சில அரசு மருத்துவமனைகள் விதிவிலக்கு. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவத்துக்காகச் செலவிடுவது வெறும் 1 சதவீதம் தான். மருத்துவத்துறையில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தான் அதிகமாக உள்ளன. இதனால் மருத்துவம் சேவை என்பது மாறி லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது. அப்படியிருக்க இந்தத் திட்டத்தில் பாதிக்கும் மேல் தனியார் மருத்துவமனைகள்தான் இணைக்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளை மலைத்து பார்க்கும் ஏழை எளிய மக்களுக்கு, இந்தத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தைரியம் வந்துவிடுமா என்ன? அப்படியே அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தாலும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் மருத்துவமனைகள் அவர்களுக்கு இன்முகத்துடன் சேவையை வழங்கிவிடுமா என்பதும் கேள்விக்குறி. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அரசு காப்பீடு திட்டங்களின் நிலையைப் பார்த்தாலே இதில் உள்ள உண்மை புரியும்.
அரசின் திட்டங்களைப் பொறுத்தவரை அதைச் செயல்படுத்தும் நிர்வாக அமைப்பின் அடிமட்டம் வரையிலும் ஊழல் மலிந்துகிடக்கிறது. அப்படியிருக்க தானாக முன்வந்து இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளும்படியான வகையில் திட்டம் வகுக்கப்படாததால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது மிக சவாலானதாகவே இருக்கும்.
மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்பவர்கள்தான் பயனாளிகள் என்ற நிலை உருவாகும். இப்படி பல சவால்களையும் மீறித்தான் இந்தத் திட்டம் வெற்றியடைய வேண்டும். அதுவரையிலும் பிரதமர் குறிப்பிட்ட அந்த 50 கோடி பேரும் இந்தத் திட்டத்தை எப்படி பெறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.